Saturday, May 16, 2026

வயிற்றுப் போக்கு...

 நம்மில் பலரும் செய்யும் விஷயமாக இது இருக்கும். 


வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனே மருந்தகங்களுக்குச் சென்று வயிற்றுப் போக்கை நிறுத்தும் மாத்திரையை வாங்கி உடனே போட்டுக் கொள்வர்.


வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே நமது சமூகத்தில் நிலவும் கட்டுக்கதையாகும். 


அதே போல வயிற்றுப் போக்குடன் சம்பந்தப்பட்ட மேலும் சில கற்பிதங்களையும் 

அறிவியல் வழி சரிசெய்வோம்.


வயிற்றுப் போக்கை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 

1.கிருமித் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் போக்கு

2. தொற்றல்லாத காரணங்களால் ஏற்படும் வயிற்றுப்போக்கு 


பொதுவாக, கிருமிகளால் ஏற்படும் வயிற்றுப் போக்கு என்பது குழந்தைகளில் 90% க்கு மேலும் வயது வந்தவர்களில் 60%க்கு மேலும்  வைரஸ்களால் ஏற்படுபவை. குழந்தைகளில் "ரோட்டா வைரஸும்" 

வயது வந்தோரில் "நோரோ வைரஸும் " வயிற்றுப் போக்கு ஏற்படுத்துவதில் முக்கியமானவை. 

இதற்கடுத்த படியாக, 

ஈ. கோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. இவையன்றி குடற்புழுக்களும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக் கூடும். 


இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் எனும் நோயில், 

தொற்றன்றி வேறு காரணங்களால் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். 

இதற்கு வேண்டுமானால் வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருந்துகள் பயன்தரலாம். 


ஆனால் கிருமித் தொற்றினால் ஏற்படும் 

வயிற்றுப் போக்கில், 

குடலில் தேங்கும் கிருமிகளையும் கிருமிகளால் சுரக்கப்பட்ட நச்சுப் பொருட்களையும் 

உடல் வெளியேற்றிடும் முக்கிய யுக்தியாக- வயிற்றுப் போக்கு இருக்கிறது. 

இந்நிலையில் வெறுமனே வயிற்றுப் போக்கை நிறுத்தும் மாத்திரைகளை உட்கொள்வது கிருமி மற்றும் அதன் நச்சுப் பொருட்கள் மேலும் குடலில் தேங்கி  பிரச்சனையை மேலும்  அதிகரிக்கலாம். 


வயிற்றுப் போக்கில் நிகழ்வது என்ன? 


கிருமித் தொற்றால் வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, 

அந்தக் கிருமிகளாலும் 

கிருமிகள் சுரக்கும் நச்சுகளாலும்  நமது குடலின் செல்கள் யாவும் பாதிப்புக்குள்ளாகின்றன. 

இதன் விளைவாக, 

நமது குடலில் முறையாக நடக்க வேண்டிய ஊட்டச்சத்து , நீர் , தாது உப்புகள் உள்ளிட்ட உறிஞ்சுதல் நடக்காமல் போகிறது. 


வைரஸ் தொற்றினால் ஏற்படும் வயிற்றுப் போக்கில், குடல் குழாயில் அதிக அளவு உணவு மூலம் கிடைக்கும்  ஊட்டச்சத்து, தாது உப்பு உள்ளிட்ட பொருட்கள் உறிஞ்சப்படாமல் போவதால் ஜவ்வூடு பரவல் விதிப்படி 

நமது உடலில் இருக்கும் நீர் மற்றும் தாது உப்புகள் அதிக அளவு , குடலின் குழாய்க்குள் வெளியேறி, மிக அதிகமான அளவு வயிற்றுப் போக்கு ஏற்படும். இதை OSMOTIC DIARRHOEA ( சவ்வூடு பரவல் மூலம் நடக்கும் வயிற்றுப் போக்கு) என்கிறோம்.


பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் வயிற்றுப் போக்கில், 

குடலின் செல்கள் வழியாக அதிக அளவு நீரும் தாது உப்புகளும் சுரக்கப்பட்டு, தொடர்ந்து வயிற்றுப் போக்கு மூலம் வெளியேறும். இதை "அதிகச் சுரப்பால் ஏற்படும் வயிற்றுப் போக்கு" (SECRETORY DIARRHOEA) என்கிறோம். 


மேற்கூறிய இரண்டிலும் நாம் அறிவது யாதெனில், 

வயிற்றுப் போக்கில் வெறும் 

நீர் மட்டுமே வெளியேறுவதில்லை. 

கூடவே செல்களின் நீர்ச்சத்தை முறையாகப் பேண உதவும் சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும் சேர்த்தே வெளியேறுகின்றன. 


எனவே, வயிற்றுப் போக்கு ஏற்படும் போது 

வெறுமனே நீரை மட்டும் அதிகம் பருகிக் கொண்டே இருப்பது ஓரளவுக்கு மேல் பயனளிக்காது. 


வயிற்றுப் போக்கு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


வயிற்றுப் போக்கு ஏற்படும் போது 

சரியான ஒரே சிகிச்சை என்பது "ஓ.ஆர்.எஸ்" வாய்வழி நீர்ச்சத்தூட்டும் உப்புக் கரைசல் (ORAL REHYDRATION SALT SOLUTION) மட்டுமே. 


ஓ.ஆர்.எஸ் என்பது வயிற்றுப் போக்கு ஏற்படும் போது நீரிழப்பை மட்டுமே செய்கிறது என்று பலரும் நினைக்கக்கூடும். 


மூன்று பணிகளைச் செய்யும் ஓ.ஆர்.எஸ்


உண்மை யாதெனில் 

ஓ.ஆர்.எஸ் 

நீரிழப்பை சரிசெய்யும் அதே வேளையில், 

தாது உப்புகளை உடலில் சேர்க்கிறது. 

கூடவே, வயிற்றுப் போக்கின் அளவையும், தன்மையையும் குறைத்து அதில் இருந்து மீளவும் உதவுகிறது.


ஓ.ஆர்.எஸ் எப்படி வேலை செய்கிறது? 


நமது குடல்களின் செல்களில் சோடியம் - குளூகோஸ் இரண்டையும் ஒரு சேரக் கடத்தும் புரதம் சார்ந்த கடத்திகள் உள்ளன. இவற்றை SGLT-1 (SODIUM GLUCOSE CO TRANSPORTER -1) என்று அழைக்கிறோம். 


நமது குடலைப் பொருத்தவரை, 

காலரா போன்ற கொடுங்கிருமித் தொற்றுக் ஆட்பட்டிருந்தாலும்  சரி, 

இந்த குறிப்பிட்ட SGLT-1 கடத்தியை சரியான முறையில் ஆக்டிவேட் செய்தால், திறம்பட தாது உப்பான சோடியத்தையும், நீரையும் , க்ளூகோசையும் நம்மால் உடலுக்குள் கடத்தி விட இயலும். 


இந்த SGLT-1 கடத்தியைத் திறப்பதற்கான ஆக்டிவேசன் கோட் 

"க்ளூகோஸிடம்" உள்ளது. 


நாம் பருகும் ஓ.ஆர்.எஸ் திரவத்தில் 

க்ளூகோஸ் , சோடியம் குளோரைடு எனும் உப்பு, இதய மற்றும் நரம்பு மண்டல நலனுக்கு உதவும்  பொட்டாசியம், உடலை அமிலத்தன்மையில் இருந்து காக்கும் சிட்ரேட் சேர்க்கப்பட்டுள்ளது. 


உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலா கொண்டு தயாரிக்கப்பட்ட 

ஓ.ஆர்.எஸ் திரவப் பொடி ( 20 கிராம் பாக்கெட்) வாங்கி ஒரு லிட்டர் கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தூய நீரில் கலந்து 

பருக வேண்டும். 


ஓ.ஆர்.எஸில் உள்ள க்ளூகோஸானது 

SGLT-1 எனும் கதவைத் திறக்கும் சாவியாகச் செயல்படுகிறது. 

அந்த வழியாக, சோடியம் செல்களுக்குள் நுழைகிறது. 

கூடவே, நீரும் செல்களுக்குள் சென்று விடுகிறது. 


இதன் வழியாக, 

உடலில் உள்ள நீர்ச்சத்தும், தாது உப்புகளும், ரத்தத்தின் க்ளூகோஸ் அளவுகளும் ஒரு சேர பராமரிக்கப்படுகின்றன. 


வயிற்றுப் போக்கில் க்ளூகோஸ் கலந்து பருகலாமா?


பலரும் செய்யும் முக்கிய தவறாக இது இருக்கிறது. 

க்ளூகோஸ் மட்டும் கலந்து பருகும் போது, 

நமது குடலில் க்ளூகோஸ் திரவம் நிறைந்திருக்கும். 

SGLT-1 கடத்தி, க்ளூகோஸ் மூலம் உள்ளே திறக்கப்படும்.  ஆனால் வெறும் க்ளூகோஸ் திரவத்தில், சோடியம் இல்லாத காரணத்தால், உள்ளே சோடியம் செல்லாத நிலையில் நீரும் செல்களுக்குள் செல்ல இயலாமல் போகும். 

கூடவே, குடலின் குழாயில் அதிகமான க்ளூகோஸ் இருப்பது, 

சவ்வூடு பரவல் மூலம் 

செல்களில் இருந்து அதிகமான நீரை 

குடலின் குழாய்களுக்குள் சுரக்கச் செய்து வயிற்றுப் போக்கின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யும். 

ஏறக்குறைய இதே போன்ற விளைவத்தான், பழச்சாறுகளும் ஏற்படுத்துகின்றன. 

பழங்களில் ஃப்ரக்டோஸ் எனும் மாவுச்சத்து நிரம்பியுள்ளது. 

பழச்சாறுகளைப் பொருத்தவரை , 

குடலின் குழாயில் அதிகமான ஃப்ரக்டோஸ் இருப்பது, 

சவ்வூடு பரவல் விதிப்படி, செல்களில் இருந்து குடலுக்குள் அதிகமான நீர்ச்சுரப்பை ஏற்படுத்தி வயிற்றுப் போக்கை தீவிரப்படுத்தலாம். 


இன்னும் பலர், வயிற்றுப் போக்கு ஏற்படும் போது 

ப்ளாக் டீ அருந்துவதையும் காண முடிகிறது. 

தேனீர் இலையில் இருக்கும் டானின்கள் வயிற்றுப் போக்கின் அளவைக் குறைக்கும், குடல் செல்களில் ஏற்படும் அழற்சியை கட்டுப்படுத்தும் என்று அறியப்பட்டாலும், 

சில நேரங்களில் தேனீரில் உள்ள கெஃபைன் அளவுகள் அதிகமானால், அதனால் வயிற்றுப் போக்கு தீவிரமடையும் வாய்ப்பும் உள்ளது. கூடவே சிறுநீர் கழித்தலும் அதிகரித்து அதனால் கூடுதல்   நீர்ச்சத்து  இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. 


வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் 

உடனடியாக ஓ.ஆர்.எஸ்  பொடியை வாங்கி வந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து குடிக்கத் துவங்க வேண்டும். 

குழந்தைகள் முதல் முதியோர் வரை , வயிற்றுப் போக்கின் போது முக்கிய முதல் மருந்தாக "ஓ.ஆர்.எஸ்" இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


அனைவரின் வீடுகளிலும் ஒரு ஓ.ஆர்.எஸ் பாக்கெட் முதலுதவிக்கு இருப்பது நல்லது. 


வயிற்றுப் போக்கிற்கு சிகிச்சையை தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகிட வேண்டும். 


- வயிற்றுப் போக்குடன் தீவிரக் காய்ச்சல்

- ரத்தமும் சளிச்சவ்வும் கலந்து போவது ஆகியன 

- சாப்பிட்ட உணவு சுத்தமாக ஜீரணமாகாமல் அப்படியே வெளியேறுவது 

- வாய்வழியாக ஓ.ஆர்.எஸ் மற்றும் ஆதாரங்கள் உட்கொள்ள இயலாத நிலை 


ஆகியன ஆபத்து அறிகுறிகளாகும்.

உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். 


வீட்டில் ஓ.ஆர்.எஸ் செய்யும் முறை


ஓ.ஆர்.எஸ் பொடி வாங்க இயலாத நிலையில், 


ஒரு லிட்டர் காய்ச்சி வடிகட்டிய நீரில்

ஆறு டீஸ்பூன் சீனியும் ( ஒரு டீஸ்பூன் = 5 கிராம்) 

அரை டீஸ்பூன் சமையல் உப்பும் ( 2.5 கிராம்) கலந்து பருகலாம். 


வயிற்று போக்கு ஏற்பட்டால் உடனே பீதி நிலை அடைந்து அதை உடனே நிறுத்த வேண்டும், க்ளூகோஸ் தண்ணீர்/ பழங்சாறுகள் பருகலாம் என்ற எண்ணமே சமூகத்தில் நிலவுகிறது. 

அதை விடுத்து,  நீர்ச்சத்து, தாது உப்புகள், க்ளூகோஸ் உள்ளிட்டவற்றை வழங்கும் ஓ.ஆர்.எஸ் திரவத்தைப் பருகி, காலம் தாழ்த்தாமல் 

மருத்துவரைச் சந்தித்து முறையான சிகிச்சை பெறுவதே சரியான வழி என்பதை அறிந்தோம். 


இந்து தமிழ் நாளிதழில் இன்று 16.5.2026 வெளிவந்துள்ள பகுதி 


நன்றி


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

No comments:

Post a Comment