Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, October 30, 2018

நீதி மன்றமும் நியாய சபையும்

குற்றவாளிக் கூண்டில் பதட்டத்தில்
கைகளைப் பிசைந்தபடி நீதிபதியைப் பார்க்கிறேன்
அவர் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார்

"எனவே சந்தர்ப்பச் சாட்சியங்களை தீர விசாரித்த
வகையில் இவர் மீதுள்ள குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபணம் ஆன படியால்...."

அவர் தொடர்ந்து படிக்கிறார்

நான் சத்தமாய்க் கதறுகிறேன் " ஐயா நல்ல
விசாரிங்க ஐயா.. இது ஒரு தப்புத்தான்
ஏதோ ஒரு கோபத்தில் நடந்து போனது.
மத்தபடி ஊருக்கு ஆயிரம் நன்மை
செய்திருக்கிறேன் ஐயா......கொஞ்சம்
கருணை காட்டுங்க ஐயா....

என்னை இடைமறித்த நீதிபதி ' இது
நியாய சபையல்ல. உன்னைப்பற்றி
முழுவதும் தெரிந்து கொள்வதற்கு
நீ செய்த இந்தக் குற்றம் குறித்து மட்டுமே
இந்த மன்றம் கவனத்தில் கொள்ளும்....
எனவே நீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய
10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை
இந்த நீதிமனறம் உறுதி செய்கிறது...

இதற்கு மேல் என் செவியில் எதுவும்
விழவில்லை.சடாரென மயங்கிக் கீழே சரிகிறேன்.

நான்விழித்துப் பார்க்கையில் எம கிங்கரர்கள்
புடை சூழ வேறு ஒரு குற்றவாளிக் கூண்டில்
நிற்கிறேன்

எதிரே சிம்மாசனத்தில் ஆஜானுபாவனாய் அமர்ந்திருந்த
எம தர்மன் தீர்ப்பை வாசிக்கக் துவங்குகிறார்

கொஞ்சம் தைரியத்தை கூட்டியபடி "ஐயா
விசாரிக்கவே இல்லை. அதற்குள் தீர்ப்பைப்
படிக்கிறீர்களே ..." என்கிறேன்

அவர் கடகடவென சிரித்தபடி "சாட்சி, சந்தர்ப்பம்
மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் உங்கள்
நீதிமன்றங்களில் தான்.இங்கு நாங்கள் எவரையும்
விசாரிக்க வேண்டியதில்லை.உன் பிறப்பு முதல்
இறப்பு வரையிலான செயல்பாடுகள் எல்லாம்
எங்களுக்கு அத்துப்படி... எனவே...

அவர் படிக்கத் துவங்க எனக்குள் எண்ணைக்
கொப்பறை சவுக்கு,முள்படுக்கை எல்லாம்
நினைவுக்க் வர உடல் நடுங்கத் துவங்குகிறது

அவர் தொடர்கிறார் " இவர் கோபத்தில்
சில பாவங்களைச் செய்திருந்தாலும் கூட
அதையும் தாண்டிய வகையில் ஏழை எளிய
மக்களுக்கு தன்னாலான சேவையை தொடர்ந்து
செய்துள்ளபடியால்..இவரை இரண்டாம் நிலை
சொர்க்கத்துக்குப் பரிந்துரை செய்கிறேன்..

என்னால் நம்பவே முடியவில்லை.என்னைக்
கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன்.

" ஐயா இப்படின்னு தெரிஞ்சா இன்னும் நிறைய
நனமை செய்திருப்பேனே. முதல் நிலைக்குப்
போயிருப்பேனே.. ஐயா ஐயா இன்னொரு
சந்த்ர்ப்பம் கொடுங்கையா.. ஐயா.. ஐயா..

நான் கதறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை வலுக்கட்டாயமாக அங்குள்ள பல்லக்கில்
ஏற்றுகிறார்கள்..

நான் திமிரத் திமிர என் முகத்தில் சட்டென
ஏதோ ஈரப்பதம் தென்பட முகத்தைத் துடைக்கிறேன்

எதிரே பித்தளைச் செம்புடன் என் மனைவி..

Saturday, June 28, 2014

இது நரியும் ஆட்டுக் குட்டியும் கதை

சூழலுக்குப் பயந்து பயந்து வாழ்பவன்
நிச்சயம் செத்துச் செத்துத்தான் வாழ்வான்
மாறாக எத்தகைய  மோசமான சூழலாயினும்
அதனை அறிவின் மூலம் சிறப்பாகக்
கையாளத் தெரிந்தவன் அந்த மோசமான
சூழலையே தனக்கு மிகச் சாதகமாகப்  பயன்படுத்தி
வெற்றி அடைவான் என்பதற்கு நான்
கேள்விப்பட்ட ஒரு சிறு கதை

ஒரு காட்டில் ஒரு நிறைமாத ஆடு ஒன்று
இருந்தது.நிறைமாதம் என்பதால் பலசாலியான்
வேறு மிருகம் ஏதேனும் வேட்டையாட
முயன்றால் வேகமாக ஓட முடியாது என்பதால்
தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேடித் திரிந்தது

அப்போது நேரடியாக சண்டைப் போட்டு
ஆட்டைஜெயித்து அதை உண்ண முடியாது
என எண்ணிய தந்திர நரி
அந்தக் காட்டில் இருந்த ஒரு சிங்கத்தின்
குகையைக் காட்டி "இந்தக் கிழச் சிங்கம்
அடுத்த காட்டிற்குப் போயுள்ளது,வருவதற்கு
எப்படியும் இரண்டு மாதம் ஆகும்.அதற்குள்
உனக்கும் பிரசவம் ஆகிவிடும்..எனவே நீ
அது வருவத்ற்குள் வேறு பாதுகாப்பான இடத்திற்குப்
போய்விடலாம் " என நம்பிக்கையூட்டி அந்த
குகைக்குள் தங்க விட்டு சிங்கத்திடம்
ஆடு இருக்கும் தகவலைச் சொல்லி வரவழைக்கக்
கிளம்பிவிட்டது.

நரியின் தந்திர எண்ணத்தைப் புரிந்துகொண்ட
நிறைமாத ஆட்டுடன் இருந்த குட்டி ஆடு
"என்னம்மா நரி பேச்சை நம்பி ஒளியத் தெரியாதவன்
தலையாரி வீட்டில் ஒளிந்த மாதிரி ஒளிந்து
கொண்டிருக்கிறோம்.சிங்கம் வந்தால் நம் நிலைமை
என்னவாகும் "என்றது

"கவலைப்படாதே,நரி ஏதோ தந்திரமாக
யோசித்துத்தான்நமக்கு இந்த ஐடியாவைச்
சொல்லியுள்ளது எனக்குத் தெரியும்
நானும் அதற்குத் தகுந்தாற்போல யோசித்து
வைத்திருக்கிறேன்.சிங்கம் வந்தால் கொஞ்சம்
குரலை மாற்றி "அம்மா எனக்கு சிங்கக் குடல்தான்
வேண்டும் எனச் சொல்லி அடம் பிடிப்பது போல அழு
அடுத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் "என்றது

ஆடு கிடைக்கும் ஆசையில் நரியும்
உடன் சிங்கத்தைத்தேடிப்பிடித்து குகைக்குள்
நிறை மாத ஆடும் அதனுடன்
ஒரு குட்டிஆடும் இருக்கும் விஷயத்தைச் சொல்லி
ஆசைக் கூட்டி குகை வாசலுக்கு அழைத்து வந்தது

சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும் குட்டி ஆடு
தாய் ஆடு சொல்லிக் கொடுத்ததைப் போல
குரலை கொஞ்சம் கரடுமுரடாக்கி "அம்மா
எனக்கு எப்பம்மா சிங்கக் குடல் தரப்போற
ரொம்பப் பசிக்குதம்மா "எனச் சப்தமாக கத்தத்
தொடங்கியது

"பொறுடா கண்ணா சிங்கம் வருகிற மாதிரித்தான்
தெரியுது.வந்தவுடன் உனக்கு அதன் குடலை எடுத்துத்
தந்துவிடுகிறேன்.குடல் போக மீதியை மட்டும்
நான் வைத்துக் கொள்கிறேன்.சரியா "என்றது

இதைக் கேட்ட சிங்கத்திற்கு மிக லேசாக குடல்
நடுங்கத் துவங்கியது,நம் குகைக்குள்ளேயே
இருந்து கொண்டு நம் குடல் கேட்கிறது என்றால்
நிச்சயம் அது நம்மைவிட பலசாலியான
ஏதோ ஒரு புதிய மிருகமாகத்தான் இருக்கணும்
இந்த நரி ஏதோ தந்திரம் செய்து நம்மை கொல்லப்
பார்க்கிறது என் நினைத்து திருப்பி ஓடத் துவங்கியது

அதை விரட்டிப்பிடித்த நரி "சிங்கம் அண்ணே
நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா
நிச்சயம் அது நிறைமாத ஆடும் குட்டியும்தான்
தங்களை ஏமாற்ற குரல்மாற்றி அப்படிப் பேசுகிறது
நம்பிக்கை இல்லாவிட்டால் உங்கள் வாலுடன்
என் வாலை சேர்த்துக் கட்டிக் கொள்கிறேன்
பொய் என்றால் நான் ஓட முடியாது என்னை
அடித்தேக் கொன்றுவிடுங்கள் "என்றது

நரி இப்படிச் சொன்னதும் சிங்கத்திற்குப் பயம்
கொஞ்சம் குறைந்தது,ஆனாலும் எதற்கும்
இருக்கட்டுமென்று நரியை தன் வாலுடன்
இறுக்கக் கட்டிக் கொண்டு குகை நோக்கி வந்தது

இதை குகை இடைவெளியில் பார்த்த ஆடு
திரும்பவும் தன் குட்டியப் பார்த்து
அதே மாதிரி அடம் பிடி எனச் சொல்ல
குட்டி ஆடும்"என்னம்மா வந்த சிங்கமும்
ஓடிப் போயிடுச்சு,எனக்கு எப்பம்மா சிங்கக் குடல்
தின்னத் தர்ப்போறே " என்றது சப்தமாக

ஆடும் சப்தமாக சிங்கம் கேட்கும்படியாக
குரலை மாற்றி "அவசரப்படாதடா கண்ணா
நரி மாமா நம்மிடம் சொன்னபடி சிங்கத்தை
ஏமாற்றி எப்படியாவது தன் வாலில் கட்டியாவது
கொண்டுவந்துவிடுவார்.அதுவரை
பொறுமையாக இரு"என்றது

இதைக் கேட்டச் சிங்கம் "ஆஹா நரி நம்மை
வஞ்சம் தீர்க்க ஏதோ ஒரு பலசாலி மிருகத்தை
ஏற்பாடு செய்து நம்மை தந்திரமாக கொல்ல அல்லவா
பார்க்கிறது "என்கிற முடிவுக்கு வந்து தலைதெறிக்க
ஓடத் துவங்கியது

பாவம் நரி,தந்திரத்தின் மூலம் சிங்கத்தின் மூலம்
ஆட்டுக்கறி தின்ன முயன்ற நரி கல்லிலும் முள்ளிலும்
அடிபட்டு உயிரைவிட்டு கறியாகிக் கொண்டிருந்தது

புத்திசாலி ஆடு சிங்கத்தின் குகையில் எந்த வித
அச்சுறுத்தலும் இன்று சுகமாக குட்டியை
ஈன்று  கொண்டிருந்தது.

எனவே..(.மீண்டும் முதல்பத்தியைப் படிக்கவும்)

Sunday, March 16, 2014

மூடுபனி

அன்று விருதுநகரில் நடைபெற்ற என் உறவினரின்
திருமணத்திற்குச் சென்றிருந்தேன்

மறுநாள் அவசியம் அலுவலகம் செல்லவேண்டும் லீவு
எடுக்கமுடியாது என்கிற  நிலைமை இருந்ததாலும்
திருமண முகூர்த்தம் அதிகாலையாக இருந்ததாலும்
முதல் நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பிற்கே
சென்றுவிட்டு இரவு மண்டபத்தில் தங்கிவிட்டு மறுநாள்
முகூர்த்தம் முடிந்ததும் மதுரை திரும்ப
 உத்தேசித்திருந்தேன்

மாலை டிபன் இரவு சாப்பாடு எல்லாம் முடித்து
இரவு தூங்கத் துவங்குகையில்தான் விருது நகர்
கொசுவின் அருமை பெருமைகள் புரிய ஆரம்பித்தது

மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் இருக்கிற
அறைகளைபங்கிட்டுக் கொள்ள
பெண்வீட்டைச் சார்ந்தவன் என்பதால்
இருக்கிற இடத்தில் அட்ஜஸ்ட் செய்து
கொள்ளவேண்டிய நிலைமை,

என்னால் இரவு சாப்பிடாமல் கூட இருந்துவிட முடியும்
ஒரு நாள் இரவு தூக்கம் கெட்டால் மறு நாள்
கிறுக்குப் பிடித்தவன் போலாகிவிடுவேன்
என் உடல் வாகு அப்படி.

திருமண மண்டபத்திற்கு அருகில் லாட்ஜ் ஏதும்
இல்லையென்பதால் என்ன செய்வது
என குழப்பத்தில் இருந்தபோதுதான்
 "என்ன மாப்பிள்ளை..எப்போது வந்தீர்கள் "
என விசாரித்தபடி நான் படுக்கத் தாயாராகிக்
கொண்டிருந்த இடத்திற்குசோமு வந்தார்.

சோமுவுக்கு என்னைவிட ஐந்து வயது கூட இருக்கும்
சம்பந்த முறையில் எனக்கு உறவு
எனது ஒன்று விட்ட மைத்துனர் உறவாக வேண்டும்
எப்போதும் என்னை அதிக உரிமையுடன் மாப்பிள்ளை
எனத்தான் அழைப்பார்.அவர் பேச்சு எப்போதும்
உச்சஸ்தாயியிலும் இருக்கும்.அதில்
அதிக அன்னியோன்யமும் இருக்கும்

எதனாலேயோ எனக்கு சம்பந்த வகையில்
அவரைரொம்பப் பிடிக்கும். அவரும்  என்னிடம்
அதிக உரிமை எடுத்து பேசுவதில் இருந்து
அவருக்கும் அப்படித்தான் இருக்கும்
என்கிற நம்பிக்கை  எனக்கும் உண்டு

அருகில் வந்தவர் "கொசுக்கடியில் இந்த ஹாலிலா
படுக்கப் போகிறீர்கள்.இங்கே ஒரு லாட்ஜில் ரூமுக்குச்
சொல்லி இருக்கிறேன்.இப்போது கார் வரும்
இருவரும் போய் அங்கு தங்கி விட்டு குளித்து முடித்து
ஃபிரஸ்சாக அதிகாலையில் வருவோம் "என்றார்

அவர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே
வாசலில் மிக உயர்தரக் கார் ஒன்று வந்து நின்றது
அதிலிருந்து யுனிஃபாம் அறிந்த டிரைவர் ஒருவர்
 இறங்கிவந்து அவருடைய சூட்கேஸை
 கையில் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடக்க
நானும் அவரைத் தொடர்ந்தேன்

அந்தக் காரின் மதிப்பு,அந்த டிரைவர் காட்டிய அதீத
மரியாதை எனக்கு ரொம்ப ரொம்ப
வித்தியாசமாகப்பட்டது

மூன்று வருடத்திற்கு முன்னால்...

ராமனாதபுரம் ஜில்லாவில் மிகச் சாதாரணமான
ஒரு கடலோரக் கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில்
அவர்கள் கொடுத்த ஒரு அறை வீட்டில் அவர்கள்
கொடுக்கிற மிகச் சொற்பமான ஊதியத்தையும்
அரிசியையும் நம்பி தன் மனைவி மக்களுடன்
திருமணம் ஆகாத இரண்டு தங்கைகளுடன்
மிகக் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தவர்.....

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில்
ஒரு மிகப் பெரிய வீட்டை வாங்கி இன்னும்
கூடுதலாக செலவு செய்து மிக மிக ஆர்பாட்டமாக
கிரஹப் பிரவேசம் செய்ததும்.

கடந்த வருடம் தனது மூத்த மகளுக்கு அதிக நகையும்
வரதட்சனையும் கொடுத்து இதுவரை அந்த ஊரில்
யாரும் செய்யாத அளவில் மிகச் சிறப்பாக திருமணம்
செய்து வைத்ததும்...

இப்படி வருகிற இடங்களில் எல்லாம் மிகப் பெரிய
இடத்து தொடர்புகளை ஏற்படுத்தி வைத்து இருப்பதுவும்..

எங்கள் உறவினர்களுக்கு மத்தியில் அவர் குறித்த
ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது

நானும் திருமணமான புதிதில் அவர் வீட்டிற்குப்
போய் அவருடைய வறிய நிலையை அறிந்திருந்தவன்
என்கிற முறையிலும் ,கடந்த மூன்று ஆண்டுகளில்
அவர் கொண்ட அபரிதமான வளர்ச்சிக் குறித்து
எனக்கும் ஏதோ ஒரு சந்தேகம் இருந்து
கொண்டே இருந்தது

அந்தக் கார் விருதுநகரிலேயே அதிக வசதிகள் கொண்ட
அதிக வாடகைக் கொண்ட லாட்ஜில் நுழைந்ததும்,,,

முன் சென்ற டிரைவர் அந்த ஏ ஸி அறையில்
சோமுவின் பெட்டியை செல்ஃபில்
மிகப் பௌமியமாக வைத்துவிட்டு
" ஐயா எதுவேணுமின்னாலும் உடன்
போன் செய்யச் சொன்னார்கள்
நீங்கள் ஊரில் இருக்கிற வரையில் காருடன்
என்னையும் உங்களுடன் இருக்கச் சொன்னார்கள் "
என்றதும்

எனக்கும் நிச்சயம் இவரிடம் ஏதோ ஒரு  மர்மம்
இருக்கிறது என ஊர்ஜிதமாக ஆரம்பித்தது

(தொடரும் )

Thursday, April 26, 2012

சனி பிடித்தல்

சனி பிடித்தல் குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
அது யாரையும் நேரடியாக இஷ்டப்படியெல்லாம்
பிடிக்க முடியாதாம்

பிடிக்கவேண்டிய காலமானலும் கூட
ஆசார அனுஷ்டான பிசகை எதிர்பார்த்து
அப்படிப் பிசகிய இடம் மூலம்தான்
பிடிக்க வேண்டியவரைப் மிகச் சரியாகப்பிடிக்குமாம்

நீங்கள் கூட கேள்விப் பட்டிருக்கலாம் தன்
புறங்காலைமிகச் சரியாக கழுவாத ராஜாவை அந்த
முழங்கால் மூலம் சனிபிடித்த  கதையை

எனக்கும் தங்களைப் போலவே இதிலெல்லாம்
சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்
என் கண் முன்னால் நடந்த ஒரு விஷயம்
இதனை நம்பித் தொலைக்கும்படி செய்துவிட்டது

மதுரையில் எங்கள் வீடு அந்தக் காலனியில்
பஸ் ஸ்டாப்பை ஒட்டி அமைந்திருந்தது
எங்கள் வீட்டின் முன் அமைந்திருந்த வேம்பும்
நான் அடுத்தவர்கள் அமரட்டும் என வாசலில்
போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சும்
அந்தக் காலனியில் வெகு பிரசித்தம்

காலையில் கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச்
செல்லும் பெண்கள் எப்போதும் குறைந்தது
அரை மணிநேரத்திற்குமுன்பாக வருவதும்
எங்கள் வீட்டு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து
ஹோம் ஒர்க் செய்வது அல்லது அரட்டை அடிப்பது
என்பது எல்லோருக்கும் பழகிப் போன ஒன்று

என் மனைவியும் எல்லோரிட்மும்
அனுசரனையாக பேசுவதும்
நான் தேவையில்லாமல் பெரிய மனிதப் போர்வையில்
அவர்களது பேச்சில் கலந்து குழப்பாமலும் இருப்பதும்
அவர்களுக்கும் பிடித்துப் போனதால்
எங்கள் வீட்டு வாசல் எப்போதும் கலகலப்பாய் இருக்கும்

என் மனைவிக்கு கல்லூரி   மற்றும் அலுவலகம்
செல்கிற எல்லோரையும் தனிப்பட்ட முறையில்
மிக நன்றாகத் தெரியும்
யார் யார் எந்த பஸ்ஸுக்குப் போவார்கள்
 யார் யார்இன்று விடுமுறை என்பதெல்லாம் கூட
என் மனைவிக்கு அத்துப் படி
என் மனைவி மூலம் எனக்கும் அத்துப் படி

இப்படித்தான் ஒரு நாள் நான் வீட்டுத் தோட்டத்தில்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க
என் மனைவி வாசலில் கல்லூரிக்குச் செல்லும்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கையில்
பஸ் வருகிற சப்தம் கேட்டது
அவசரம் அவசரமாக எல்லோரும் எழுந்து ஓடினார்கள்
.பி.ஏ,எகனாமிக்ஸ் புவனாவும் எழுந்து வேகமாக ஓடினாள்

அவள் போகிற அவசரத்தில் கையில் இருந்த
கைக் குட்டையை தவறவிட்டுப் போனதை
நான் பார்த்தேன் .சரி எடுத்து வைத்துக் கொடுக்கலாம்
என நினைத்து நான் வாளியை வைத்துவிட்டு
வாசலுக்கு வரும் முன்
காலை எட்டு மணிக்கே பஸ் பிடித்துப் போகும்
பொறியியல் கல்லூரி மாணவன் பிரபாகரன்
அதைக் கையில் எடுத்துவிட்டான்,
அதை எடுத்தவன்எங்களைக் கவனிக்காமல்
சுற்று முற்றும் பார்த்துவிட்டு
சட்டைக்குள் போட்டுக் கொண்டான்.
அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் டென்த் படிக்கிற காலங்க்ளில் இருந்து
இந்த ஸ்டாப்பில்தான் பஸ் ஏறுகிறான்.
அவனுடைய பேச்சு நடவடிக்கை எல்லாமே
 மிக நாகரீகமாக இருக்கும்
ஒரு சாயலில் என் மகன் வயிற்றுப் பேரனின்
சாயலில் இருப்பதால் என மனைவிக்கு அவன் மீது
தனியான அக்கறை.விஷேச நாட்களில் ஏதேனும்
தின்பண்டங்கள் இருந்தாலும் வாங்க மறுப்பான்
என்பதால் நாசூக்காக பிரசாதம் எனச் சொல்லிக்
கொடுக்க முனைவாள்
அப்படிப்பட்டவனின் இந்தச் செய்கை
எனக்கு ஒருமாதிரி வித்தியாசமாகப் பட்டது.
சரி பருவக் கோளாறு என
அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்

மறு நாள் காலையில் எப்போதும் எட்டு மணி
பஸ்ஸுக்கே போகும் பிரபாகரன் இன்றும் தாமதமாக
ஒன்பது மணிக்கு வந்து வாசலில் நின்றிருந்தான்
பெண்கள் ஒவ்வொருவராக வர வர யாரையோ
எதிர்பார்ப்பவன் போல காலனிப் பக்கமே பார்த்தபடி
நின்று கொண்டிருந்தான். தூரத்தில் புவனா
வருவது தெரிந்ததும்மிக வேகமாக அவளை நோக்கி
நடக்க ஆரம்பித்தான்
எனக்குள் சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது

நானும் அவசரம் அவசரமாக மாடிக்குப் போய்
அவர்களைக் கவனிக்கத் துவங்கினேன்.
நேராக புவனாவிடம் சென்றவன்
கொஞ்சம் பணிவாகக் குனிந்து என்னவோ
 சொன்னபடிகைக்குட்டையைக் கொடுத்தான்.
அவளும் அதை மரியாதை நிமித்தம்
சிரித்தபடி வாங்கி நன்றி சொல்வதுபோல் பட்டது
பின் பஸ் ஸ்டாப் வரை பிரபாகரன் என்னவோ
பேசிக் கொண்டேவந்தான்.
 சுய அறிமுகமாக இருக்கலாம்
அவளும் மரியாதை நிமித்தம் தலையாட்டிக்
கொண்டே வருவதுதெரிந்தது.
பின் சிறிது நேரத்தில் பஸ் வரவும் புவனா பஸ்ஸில்
ஏறிக் கொண்டாள்.பிரபாகரனும் அதில் ஏறிக் கொண்டான்
அது பிரபாகரன் போக வேண்டிய பஸ் இல்லை

அப்புறம் பல நாட்கள் பிரபாகரன் அவன் போகவேண்டிய
எட்டரை மணி பஸ்ஸில் போகவே இல்லை
எப்போதும் இந்த ஒன்பது மணி பஸ்ஸுக்குத்தான் வந்தான்
மாலை கூட அவன் கல்லூரி மாணவர்கள் எல்லாம்
நாலு மணி பஸ்ஸில் வந்தால் இவன் தாமதமாக
அந்தக் கல்லூரிப் பெண்கள் வருகிற நேரத்தை
அனுசரித்து வரத் துவங்கினான்.சில சமயம்
சனிக்கிழமைகளில் புவனா மட்டும் கல்லூரி போவாள்
என் மனைவி கேட்டபோது ஸ்பெஷல் கிளாஸ் என்றாள்
சொல்லி வைத்த்தைப் போல பிரபாகரனும் அன்று
அதே பஸ்ஸில் கல்லூரி போய்க்கொண்டிருந்தான்
இப்படியே ஓராண்டு முடிந்தது

கோடை விடுமுறையில் ஒரு நாள் புவனா பெட்டி
படுக்கைககள் சகிதம் பஸ் ஸ்டாப் வந்திருந்தாள்
உடன் அவளுடைய அக்காவும் அவருடைய கணவனும்
நின்றிருந்தார்கள்.

என் மனைவி புவனவைப் பார்த்து
 "லீவுக்கு ஊருக்கா " என்றாள்

புவனா அருகில் வந்து "இல்லை ஆண்டி வீட்டில்
எல்லோரும் மாஸ்டா டிகிரியை சென்னையில் செய்யச்
சொல்கிறார்கள் அப்போதுதான் எக்ஸ்போஸர்
நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
எனக்கு இந்த ஊர் விட்டுப் போக
மனமே இல்லை " என்றாள்
அவள் முகம் வாட்டமாக இருந்தது

அப்புறம் பஸ் வந்ததும் அவர்கள் ஏறிப் போவிட்டார்கள்

அடுத்த ஆண்டு கல்லூரி திறந்த நாளில் இருந்து
எங்கள் பஸ் ஸ்டாப் மீண்டும்
களைகட்ட ஆரம்பித்துவிட்டது
பல புதிய முகங்களுடன் பழைய முகங்களும் சேர
பஸ் ஸ்டாப்பே ஒரு நந்தவனம் போல இருந்தது
எல்லோருடைய முகங்களிலும்
சந்தோஷச் சாயலைப் பார்க்க
எங்களுக்கும் மிக பூரிப்பாய் இருந்தது

அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் மட்டும்
வித்தியாசமாக இருந்தான்
பழைய கல கலப்பில்லை.
அவன் மெலிந்து வாடிப் போய் இருந்ததும்
தாடி மீசையும் அவனைத் தனித்துக் காட்டியது
உண்மையில் எனக்கும் என் மனைவிக்கும்
அவனைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்தது.
எப்படியாவது ஆறுதல் சொல்லி
அவனை பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்
என நினைத்தோம்.ஆனால் மிகச் சாமர்த்தியமாக
மறுபுறம் உள்ள மர நிழலில் நிற்பதைப் போல நின்று
அல்லது மிகச் சரியான நேரத்திற்கு வருவதைப்
போல வந்து பஸ் ஏறி எங்க்களை தவிர்த்தான்

எங்களுக்கு அவன் செயல்கள் மிகுந்த வேதனை அளித்தது
அவன் இவ்வாறு நடந்து கொள்வதன் சரியான காரணத்தைத்
தெரிந்து கொண்டு அவனுடன் பேச முயல்வோம்
 எனஅவன் இல்லாத நேரத்தில்
அவன் நண்பன் கார்த்திக்கிடம் விசாரித்தோம்
அவன் சுருக்கமாக "போன வருடத்தில் கொஞ்சம்
டைவர்ட் ஆகிவிட்டான் ஆண்டி.
யார் சொல்லியும் கேட்கவில்லை
முதல் இரண்டு வருடம் அவன்தான் எங்கள் வகுப்பில்
 முதல் மாணவன்போன வருடம் சரியாக
வகுப்புக்கு வரவில்லை.அரியஸ் விழுந்துவிட்டது
இந்த வருடமும் அப்படித்தான் இருக்கிறான்.
வருடம் முடிப்பான்
கோர்ஸ் முடிப்பது கஷ்டம் "என்றான்

இவன் உறுதியாக காதல் விவகாரத்தில்தான்
திசை தவறி இருப்பான்என நாங்கள் நினைத்துக் கொண்டோம்

.மகா நதி சினிமாவில்கமலும் அவரது குடும்பமும்
 கௌரவமாக மிக சந்தோஷமாக ஊரே மதிக்கும்படி இருக்கும்
ஒரு நாள் தங்கள் முன்னே செல்கின்ற காரைப் பார்த்து
"அது நம்முடைய பழைய காரைப் போல இருக்கிறது
அதை விரட்டிப் பிடிப்பா "என அவர் மகள் சொல்வாள்
கமலும் விரட்டிப் பிடிப்பார்.அவர்கள் மட்டும்
அந்தக் காரைத் தொடர வில்லையெனில் அவர்கள் வாழ்வில்
அத்தனை சீரழவு ஏற்ப்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை
சனி அந்த ஒரு வார்த்தையில்நுழைந்ததைப் போல்
பிரபாகரன் வாழ்க்கையில் அந்த தவறிய கைக்குட்டை
நுழைந்ததோ என எனக்குப் பட்டது

உண்மையில் புவனாவும் அவனைக் காதலித்தாளா
அல்லது இவனாக ஒருதலைப் பட்சமாக காதலை
வளர்த்துக் கொண்டு அவஸ்தைப் படுகிறானா
என குழப்பமாக இருந்தது முத்ல் ஒருமாதம்
 எங்கள் பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிக்
கொண்டிருந்தவன் அப்புறம் வரவேயில்லை

நண்பர்களிடம் விசாரித்த போது "இந்த ஸ்டாப் வரப்
பிடிக்கவில்லை எனச் சொல்லி அடுத்த ஸ்டாப்பில்
ஏறுகிறான் " என்றார்கள்
சில நாட்கள் கழித்து விசாரித்த போது
கல்லூரிக்கு சரியாக வருவதில்லை என்றார்கள்
ஊரில் இல்லை என்றார்கள்.
நாங்களும் அவனை மறந்து போனோம்

கதையும் இங்குமுடிந்து போனது

சினிமாவில் தவிர்க்க முடியாமல் சில
வருடங்களுக்கு பின்பு எனக் காட்டுவதைப் போல..

ஐந்து வருடங்க்களுக்கு பின்பு ஒரு நாள்
ஒரு வெள்ளிக்கிழமை நாங்கள் பூஜை வேலையாக
பிஸியாக இருக்கையில் வாசலில் யாரோ "ஆண்டி "
என அழைப்பது கேட்க வாசலை எட்டிப் பார்த்தேன்

புவனா கைக் குழந்தையுடன் கேட்    அருகே
நின்று கொண்டிருந்தாள்.அவசரமாக கதவைத் திறந்து
உள்ளே வரும்படி அழைத்தேன் வெளியில்
நின்றிருந்தவரைக் காட்டி என் கணவர்
என அறிமுகப் படுத்தினாள்

என மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்.
"வெள்ளிக்கிழமையும் அதுவுமா தம்பதிகள் வீட்டுக்கு
வந்தது ரொம்ப சந்தோஷம் " எனச் சொல்லி
தாம்பூலம் வைத்துக் கொடுத்து உபசரித்தாள்
 பின் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு
குழந்தைக்கு என்ன பேரடி வைத்திருக்கிறாய் "என்றாள்

"பிரபா " என்றாள் புவனா

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்வதைப் பார்த்து என்ன நினைத்தாளோ
"இவங்க அம்மா பேரு பிரபாவதி அதுதான் சுருக்கமாக
பிரபா " என்றாள்


Thursday, November 10, 2011

அந்த அந்த நொடி..


வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
 உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
கையில் கதாயுதமும் கொண்டு
மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
 உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
இவர் "எமதர்மன்தான் " என்று

ஆமை புகுந்த வீடு அமீனா புகுந்த வீடு
எமன் புகுந்தவீடும்உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
.இருந்தாலும் மரியாதை நிமித்தமாக
"வாருங்கள் வாருங்கள்
நான் ரெடி போவோமா ?"என்றேன்

எமர் (ன் )என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை யுகங்களோ எவர் எவர் உயிரையோ
எடுத்திருக்கிறேன்இதுவரை யாரும் உன்போல
 நான் ரெடி போவோமா எனச் சொன்னதில்லை
உனக்கு சாவென்றால் பிடித்தமா இல்லை
வாழ்வு வெறுத்துப் போயிற்றா "

"இல்லை இல்லை நீங்களும் மூன்று தபால்
 போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை.
ஆனாலும் மனத்தளவில் ரெடியாகிவிட்டேன்
அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை "என்றேன்

"நீர் எழுத்தாளர் எனத் தெரியும் அதுதான்
பொடிவைத்துப் பேசுகிறீர்நான் கோடிவீட்டுக்
 குப்புசாமியைத்தான் கொண்டுபோக வந்திருக்கிறேன்
உம்மைக் கொண்டுபோக இல்லை
என்வே பதற்றப் படாமல் அமரும்
உன்னிடம் எமக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்
ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லும் " என்றார்

நான் சாகப் போவதில்லை எனத் தெரிந்ததும்
எப்படித்தான்தைரியம் வந்தது எனத் தெரியவில்லை
சோஃபாவில் நன்றாக
சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
 எதற்குப் பயப் படவேணும்

பின் எமரே தொடர்ந்தார் "இந்திரலோகத்தில்
எல்லோரும்என்னைஏகமாகப் பேசுகிறார்கள்.
சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும்பேசவிடாது
 அவர்களைக் கொன்றுவிடுகிறேனாம்
.இதனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வில்
அறிந்து கொண்டதைபுரிந்து கொண்டதை
சொல்ல முடியாமலே போகிறதாம்
அதனால்தான் பூமியில்பஞ்சமா பாதகங்கள்
பெருத்துப் போனதாகச் சொல்லுகிறார்கள்
எனக்கு அது உடன் பாடில்லை
நீ என்ன சொல்கிறாய் "என்றார்

"அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம்
பரீட்சித்துப் பார்க்கலாமே " என்றேன்

"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா.
ஒருவனிடம் கனவில் தோன்றிஅடுத்தவாரம்
 உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன்
அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான்
முப்பது வருடம் செய்யாத பாவங்களை
ஒரு வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன்.
அவன் அந்த ஒரு வாரமும்
செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என
கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி
அரை மணி நேரம்கெடு கொடுத்தும் பார்த்தேன்
முழு நேரத்தையும் 'பினாத்தியே "தீர்த்துவிட்டான்
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில்
 புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச்
சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம்
 சுத்தமாக இல்லை " என்றான்

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக
 உன்னிடம் வந்துள்ளேன்உன்னை இப்போது
 கொண்டு போகப் போவதில்லை
உன்னை கொண்டுபோகப் போகும் நாளையும்
 சொல்லப் போவதில்லை
என்வே பயப்படாமல் சொல்லு . நீ இப்போது
சாகப் போகிற நொடியாக இருந்தால்
வாழ்வை அர்த்தப் படுத்துவதாக ஒரு செய்தி
சொல்லும்படியாகச் சொல்
எனச் சொன்னால் என்ன சொல்லுவாய் " என்றான்

இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே
கடினமான கேள்வியாகவும்
புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த அனைத்து
 நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக
அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க
பள்ளியில் மெனக்கெட்டது
வேலைக்கான தயாரிப்புக் கூடமாக
கல்லூரியை க் கருதியது
நல்ல இல்லறம் அமையவே
வே லை எனக் கொண்டது
குழந்தைகளின் எதிர்காலம் கருதியே
பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
இருந்திருக்கிறேனே ஒழிய
அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை
என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்

" ஞாழிகை ஆகிறது ஏதும் உன்னால்
 சொல்ல முடியுமா ' என்றான்

" முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா
 விவரித்துச் சொல்லவா " என்றேன்

"விவரித்தல் வேண்டியதில்லை
 நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல் "

"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
அந்த அந்த நொடியில்
வாழுதலே வாழ்க்கை " என்றேன்

எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது

"சபாஷ் சபாஷ் "எனக் கூச்சலிட்டபடி என் முதுகில்
 ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு
மறைந்து போனான் நான் நடு நடுங்கிப் போனேன்

வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க
 உடல் பாரமாகத் தெரிந்தது
கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி
ஒரு பெரும் கூட்டமே நின்று கொண்டிருந்தது

"அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்
இனி பயமில்லை ..  இன்னும் என்ன என்னவோ
சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்