Monday, April 4, 2011

முடிவின் விளிம்பில்.....

குழப்பம் என்னுள் சூறாவளியாய்
சுழன்றடிக்கிறது
நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?
இருக்கிறேன் என்பது சரியா?
அல்லது
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 
அல்லது
கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாது இருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன
பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறள்கலே பரவிச் சிரிக்கின்றன
பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியைன்த்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்
மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி
முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது
விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவைள்த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்
என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன
எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எறிந்துகொண்டுயிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்தனை அவஸ்தைகளுக்கும் மத்தியில்
இவைகளுக்கெல்லாம் தொடர்பே இல்லாததுபோல்
தென்றலிின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோாடு
தங்கத்தின் தகதக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்கற்றின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்தணை வலிகளும்
அத்தணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர
அது கடந்த வழியெல்லாம் சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம் ப்ரகாசம் பரந்து விரிய
நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் சேரவேண்டிய வெட்டவெளிக்கும்
இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி
"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்
கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபடட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஐயா, கவிதை மிக அருமையாக உள்ளது. ஆனால் என்றோ வரப்போகும் மரணபயத்தை இப்போதே அளிப்பதுபோல சற்றே மனம் நடுங்குகிறது.

ஆனாலும் ஒன்று, எப்போதோ என நாம் நினைப்பது தவறே, ஏன் அது அடுத்த வினாடியே கூட நிகழலாம். எதற்கும் தயாராகி விடுவதே நல்லது என்பதையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

வீடு வரை உறவு....வீதி வரை மனைவி...காடு வரை பிள்ளை...கடைசிவரை யாரோ என்ற பாடலை என் வாய் முணுமுணுத்து வருகிறது ஐயா!

பாராட்டுக்கள் தங்களின் எழுத்துக்கு. நீங்கள் நீடூழி வாழவேண்டும் என்பதே என் விருப்பம். அன்புடன் vgk

தமிழ் உதயம் said...

நீண்ட பயணம். முடிகிற வேளை மலர்ந்த கவிதை... கவிதை நன்றாக இருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

//பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறள்கலே பரவிச் சிரிக்கின்றன
பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?//

யாத்தே பய பிராந்திய கிளப்பிட்டீங்களே குரு...

MANO நாஞ்சில் மனோ said...

//என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன//

அருமை அருமை...

MANO நாஞ்சில் மனோ said...

//காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது//

இப்பிடி பயங்காட்டினால் அழுதுருவேன் நான்......

G.M Balasubramaniam said...

வித விதமாக வித்தியாசமாகக் கனவுகள் பல கண்டு, அவற்றை நினைவில் கொண்டு வந்து, கதை, கட்டுரை, அல்லது கவிதையாக எழுத்தில் வடிக்க முயன்று பல முறை நான் தோற்றிருக்கிறேன். நீங்கள் தேறியிருக்க வேண்டும். இல்லை மரணம் குறித்து உங்கள் கற்பனை லகான் அறுந்த குதிரையாக மாறி இருக்கவேண்டும். எப்படியாயினும் எழுத்து நேர்த்தி. வாழ்த்துக்கள்

Chitra said...

வாசித்து முடிக்கும் போது.... மனம் கனத்து போய், என் கையில் யாரோ தனது இறுதி மூச்சை விட்டது போல ஒரு உணர்வு.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வடிவத்தைப் புறந்தள்ளி சிந்தனை மேல் நோக்கி நகர்கிறது ரமணியண்ணா.

மரணம் குறித்தும் விழிப்புக் குறித்தும் உங்கள் பார்வையும் கோணங்களும் எப்போதுமே புதிய திசை நோக்கி நகர்த்துகின்றன தேடல்களை.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நானே செத்துப் போய்க் கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.

ஆனந்தி.. said...

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்
//செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி
"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்
கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது//

அண்ணா...படிச்சிட்டு என்னவோ போலே இருக்கு ...அதுவும் இந்த வரிகள் ரொம்ப கஷ்டமா இருந்தது படிக்கும்போதே நெகிழ்ச்சி...அண்ணா..அடுத்த வாட்டி மகிழ்ச்சியான கவிதை எழுதவும்..இது நேயர் விருப்பம்...

போளூர் தயாநிதி said...

//காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது//
மனம் கனத்து போய்...
அருமை அருமை...

vanathy said...

கொஞ்சம் பயமா இருக்கு. அருமையான கவிதை. இன்னும் தொடருங்கோ.

சிவகுமாரன் said...

சில நிமிடங்கள் மரணத்தைப் பற்றியும் , ஒருவேளை நான் இப்போது இறந்து போனால் , என்ன நிகழும், யார் யாருக்கு என்னென்ன பாதிப்பு , பயன் (?) என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டீர்கள். என்ன சொலவதென்று தெரியவில்லை.

ஆயிஷா said...

அருமையான கவிதை.வரிகள் அருமை.

தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

அகலிக‌ன் said...

லா.சா.ரா அவர்களின் கதாப்பாத்திர‌ங்களின் சுய வர்ணணைபோல் மிக ஆழமானதாய்
அக உணர்வு சார்ந்ததாய் இருக்கிறது இந்த படைப்பு. பாலகுமாரன் அவர்களின் "இனி இரவு எழுந்திரு" நாவலில் வரும் நாயகனின் மரணம் குறித்த மனவோட்டங்களும்
இப்படியானதாய்தான் இருக்கும். உங்கள் படைப்பின் சிறப்பு அது சுருக்கமாய் இருப்பதே.
வாழ்த்துக்கள்

Kavi Tendral said...

முடிவின் விளிம்பில்

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனையும்
மிரட்டும் மரணக் கவிதை இது !
திக் ...திக் ... திகில் ... கவிதை !

கதம்ப உணர்வுகள் said...

இந்த வரிகளும் வார்த்தைகளும் படிக்க படிக்க மனம் சில்லிடுவதை உணரமுடிகிறது,

மரணத்தை நேரில் பார்ப்பது போல் :(

உடல் மரத்து போக தொடங்கிய நொடியில் மனம் விழித்துக்கொண்டது போல... அதுவும் மனதின் ஆராட்டம் வரிக்கு வரி உணரமுடிகிறது.. மனைவியின் முகம் கண்ணுக்கு அருகே இருந்தும் ஒன்றும் செய்ய இயலாமை படிப்பவரையே அசைக்கிறது.... :(

உடலின் ஒரு பாகமும் அசைக்க முடியாத நிலையில் மனம் மட்டும் ஏன் இத்தனை ஆக்ரோஷமாக கதறுகிறது? உயிரை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டமா? உடலில் இருந்து உயிர் விடுபடும் மரண அவஸ்தையில் இருந்து தப்பிவிட எண்ணமா? இறைவனின் பதங்களில் தன்னையே ஜோதியாக்கி விடும் உத்வேகமா? மனைவியின் அன்பை இனி பெறமுடியாது என்ற பதட்டமா? வாடகையாக பெற்ற உடலை விட்டு போக மனமில்லாது துடித்து துடித்து வரைந்த வரிகளாகவே என்னால் சொல்லமுடியும்...

இந்த அனுபவத்தை தானே உணர்ந்து எழுதியதாக தான் நினைக்கிறேன் ரமணி சார்.....

மரணம் இத்தனை பயங்கரமாக இருக்குமா :(

உடலில் இருந்து உயிர் பிரியும் வரை தான் இத்தனை இன்னல்களும் என்பது போல உயிர் உடலை விட்டு பட்டென்று பிரிந்ததும் ஏற்பட்ட உணர்வுகளையும் மிகைப்படுத்தாது சொன்னது ஆச்சர்யப்பட வைக்கிறது....

நிஜமாவே எல்லோரும் படித்து தன்னை தானே பரிசோதித்துக்கொள்ளவைக்கும் வரிகள் அட்டகாசம் ரமணி சார்.....

இப்படி ஒரு அனுபவமா?

அன்பு நன்றிகள் ரமணி சார் இதை வாசிக்க தந்தமைக்கு....

Post a Comment