Friday, May 6, 2011

யதார்த்தவாதி-பொதுஜனவிரோதி.

தகவிலர்கள் எல்லாம் தக்கார்களாக
நியமிக்கப்பட்டிருந்த
அந்நாளில் ஒரு நாள்
நான் அந்தக் கோவிலில் இருந்தேன்

ஆண்டவருக்கும் அர்ச்சகருக்கும்
இடைப்பட்ட ஒருஅதிகாரப்பதவியில்
இருப்பதான மமதையோடு
தக்கார் இருக்கையில்
அந்தத் தகவிலர் இருந்தார்

அன்றைய சிறப்புப் பூஜையின்
பிரசாதத் தட்டுடன்
பணிவுடன் நின்றிருந்தார் அர்ச்சகர்

தொண்டையைச் சரிசெய்தவாறே
தகவிலர் இப்படி சொல்லத் துவங்கினார்
" நான் பாண்டி கோவிலுக்குத்தான்
தக்காருக்கு முயற்சி செய்தேன்
அது கிடைத்திருந்தால்
இப்போது தேங்காய் பழம் இருக்கும் தட்டில்
வேறு இருந்திருக்கும்" என்றார்

பதட்டமான அர்ச்சகர்
"அபச்சாரம் அபச்சாரம்இது சிவ ஸ்தலம்
நீங்கள் அப்படியெல்லாம்
சொல்லக் கூடாது " என்றார்

தகவிலர் தொடர்ந்தார்
"சாமி என்ன தேங்காய் பழம் தான் கேட்டதா
உங்களுக்கு அது தேவை
அதனால்தான் அதைப் படைக்கிறீர்கள்" என்றார்

"இது காலம் காலமாக உள்ளது
பெரியவர்கள் உண்டாக்கி வைத்தது
காரணம் ஏதும் இல்லாமல் இருக்காது"
கொஞ்சம் பம்மியபடிப் பேசினார் அர்ச்சகர்

இருவரின் பேச்சினையும்
கேட்கக் கேட்கக்
எனக்கு எரிச்சல் கூடிக்கொண்டேபோனது
நானாக அவர்கள் எதிர்போய் நின்றேன்
நேராக விஷயத்திற்கும் வந்தேன்

"சாமிக்கு படைக்கும் பொருட்கள்
புனிதமானவைகளாக இருக்க வேண்டும்
எச்சல் படுத்தியதாக இருக்கக் கூடாது
தின்று போட்ட கொட்டையிலிருந்து
வேறு பழங்கள் விளையக் கூடும்
தேங்காயும் வாழையும்
அப்படி வளர வழி இல்லை
எனவே புனிதம் கெட வழி இல்லை
எனவே இவைகளை முன்னோர்கள்
படையல் பொருட்களாகி  இருக்கக் கூடும் " என்றேன்

இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள
நான் தொடர்ந்து சொன்னேன்
"தேங்காய் வாழைக்கு மட்டும்
சீஸன் என்பது இல்லை
மற்ற பழங்கள் காய்கள் எனில்
குறிப்பிட்ட சீஸன்களில்தான் விளையும்
நாமும்
குறிப்பிட்ட சீஸன்களில்தான்
சாமி கும்பிட இயலும் " என்றேன்

இருவரும் மீண்டும் ஏனோ
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

நான் அர்ச்சகரைப் பார்த்துச் சொன்னேன்
"காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல
காரணம் சொல்லத் தெரியாத பல
நல்ல காரியங்கள் கூட
மூடச் செயல்கள் போலத் தோன்றக் காரணம்
தங்களைப் போல
தங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத
ஒப்புக்கு வேலை செய்ய்யும் அசடுகளால்தான் " என்றேன்
அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்

பின் தக்காராயிருந்த தகவிலரைப் பார்த்து
இப்படிச் சொன்னேன்
"இதுநம்பிக்கையை விளைவிக்கிற இடம்
உங்களுக்கு  நம்பிக்கையற்ற
பல விஷயங்கள் இங்கு இருக்கலாம்
உங்களது நம்பிக்கை கூட
சரியானதாக இருக்கலாம்
ஆயினும்
உங்களுக்கான இடம் இது இல்லை
இது நம்புகிறவர்களுக்கான இடம்"என்றேன்
அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்

இது நடந்து பல நாட்கள்
அந்தக் கோவில் போனேன்
தக்கார் என்னைக் கண்டதும்
வேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்
அர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை
நானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை
யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....




28 comments:

எல் கே said...

தக்கார் எல்லாம் ஒதுங்கிவிட , தகவிலார் இன்று அப்பணியில்.

நீங்கள் சொல்லியிருப்பது மிக சரி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படைப்பு.
தேங்காய் & வாழை இவற்றின் புனிதமும் புரிந்து கொள்ள முடிந்தது.
யதார்த்தவாதி-பொதுஜனவிரோதி என்பதை நல்ல உதாரணங்களுடன் கூறிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

bandhu said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தேங்காய் & வாழை பற்றிய விளக்கம் தெரியாத ஒன்றை கற்றுக்கொடுத்தது!

Avargal Unmaigal said...

இந்து மதத்தில் செய்யப்படும் அநேக காரியங்களுக்கு அர்த்தங்கள் பல உண்டு . சிலர் அர்த்தங்கள் தெரியாமல் கடைபிடிப்பார்கள் சில பேருக்கு அதில் உள்ள அர்த்தங்கள் தெரியாமல் இருப்பதால் அதை மூட நம்பிக்கை என்றும் கூறுவார்கள் அதுதான் பிரச்சனை. கோயிலில் உள்ள குருக்கள் மந்திரங்ககளை சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை புரியாதவர்களுக்கு அர்த்தங்ககளை கூறி விளக்க வேண்டும்.

உங்கள் விளக்கம் மிகவும் அருமை....உங்களுடைய ஓவ்வொரு பதிவும் மிகவும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது. சில நேரங்களில் என்னால் உடனடியாக பதில் எழுத முடியாமல் போகிவிடுகிறது அதற்கு மன்னிக்கவும். ஆனால் படிக்காமல் இருக்க தவறுவதில்லை

எண்ணங்கள் 13189034291840215795 said...

இது நம்புகிறவர்களுக்கான இடம்"என்றேன்
//

இதுதான் ரொம்ப உண்மைங்க.. நேற்று பிலிப்பைன் பெண் பற்றி டாக்குமெண்ட்ரி பார்த்தேன். இரு காலும் ஊனம். கணவன் இல்லை.. சாதாரண வேலை. 2 குழந்தைகளை வளர்க்கணும்.. வீல் சேரிலேயே தானாக ஓட்டிக்கொண்டு அலுவல் செல்கிறார் 1 மணி நேரமாகுமாம்.. ஆனாலும் முகத்தில் புன்னகை..

எப்படி உங்களால் சமாளிக்க முடியுது என்றால் இறைவனை காட்டுகிறார்.. அவர் என்னை , என் குடும்பத்தை கவனிக்கிறார் என்று நம்புகிறார்.. நான் Agnostic தான்.. இருந்தாலும் இவர்களது நம்பிக்கையை கெடுக்க யாருக்கும் உரிமை இல்லை என நம்புகிறேன். அல்லது அதே அளவு நம்பிக்கையை மாற்றாக நம்மால் தர முடியணும்..இல்லேன்னா சும்மா இருக்கணும் .



//யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....//

நிச்சயமாக.. புறக்கணிக்கபடுவார்கள் :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்களின் மிகச் சிறப்பான படைப்புக்களில் இதுவும் ஒன்று ரமணியண்ணா.

மிக ஆழமான விளக்கங்களை மிக எளிமையான மொழியில் எழுதுவது அத்தனை எளிய விஷயமில்லை.

யதார்த்தவாதி பொதுஜனவிரோதி என்கிற முதுமொழிதான் எத்தனை உண்மையானது?

இரு கட்சியாய் நிற்கும் இருவருக்கும் உங்கள் விளக்கம் பயன்பட்டும் இருவருமே முகத்தைத் திருப்பிக்கொள்வதில் ஒன்று சேர்ந்துகொண்டார்கள்.உலகமே இப்படித்தான்.

MANO நாஞ்சில் மனோ said...

//"தேங்காய் வாழைக்கு மட்டும்
சீஸன் என்பது இல்லை
மற்ற பழங்கள் காய்கள் எனில்
குறிப்பிட்ட சீஸன்களில்தான் விளையும்
நாமும்
குறிப்பிட்ட சீஸன்களில்தான்
சாமி கும்பிட இயலும் " என்றேன்//


சரியாக சொன்னீர்கள் குரு....

MANO நாஞ்சில் மனோ said...

//இது நடந்து பல நாட்கள்
அந்தக் கோவில் போனேன்
தக்கார் என்னைக் கண்டதும்
வேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்
அர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை
நானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை
யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ...//

அவங்க கிடக்கட்டும் குரு, நீங்க அசத்துங்க....

இராஜராஜேஸ்வரி said...

தகவிலர்கள் எல்லாம் தக்கார்களாக//
கண்கூடான காட்சி.
யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ...///
தேங்காய் பழ விளக்கம் அருமை.
முத்து முத்தான அருமையான பகிவுக்குப் பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam said...

கேள்விகள் கேட்டுப் பழக்கப்பட்டவன் நான். ஒரு கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. அருமையான விளக்கம். எதார்த்தவாதிகள் எப்போதுமே பொது ஜன விரோதிகளாக இருக்க வேண்டுமென்பதில்லை என்பது என் கருத்து. தொடர வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விளக்கங்கள் ரமணி சார். எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. புரியாமல் [அ] தெரியாமல் இருக்கிறோம் நாம். புரிந்து கொள்ள முயற்சியும் செய்வதில்லை.

S.Venkatachalapathy said...
This comment has been removed by the author.
S.Venkatachalapathy said...

.
.
.

தங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத
ஒப்புக்கு வேலை செய்ய்யும் அசடுகளால்தான் " என்றேன்
அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்
.
.
.
.

உங்களுக்கான இடம் இது இல்லை
இது நம்புகிறவர்களுக்கான இடம்"என்றேன்
.
.
கர்மயோகம் பற்றி விளக்கம் சொல்ல என்னென்னவோ விபரங்களை விளாவரியாக சொல்வர்.

நச்சென்று சாட்டையடி விளக்கம்.

முந்தைய பதிவில் வாழைப்பழ கவிஞருக்கு அர்த்தம் இப்பொழுது புரிகிறது. ஒரு படைப்புக்கு ஒரு வாரம் யோசிப்பீர்களோ?

ஹேமா said...

தேங்காய்,வாழையின் புனிதம் அறிந்தேன்.நன்றி !

RVS said...

அட்டகாசம் சார்! தேங்காய் வாழை பூஜைக்கு பயன்படுத்துவது பற்றிய அடிப்படை விளக்கம் கூட தெரியாமல் அந்த உயர்ந்த பணியில் இருப்பது வேதனையே! ;-))

Murugeswari Rajavel said...

யதார்த்தவாதி-எல்லோருக்கும் விரோதி.முற்றிலும் உண்மை.தக்கார்,தகவிலார் வார்த்தைப் பிரயோகம் அருமை.அதற்கான விளக்கம் புதுமை.

A.R.ராஜகோபாலன் said...

மூட நம்பிக்கைகளை
மூட வைக்கும்
முது
முத்து வரிகள்
மூதாதையரின்
மூத்த
முக்கிய நம்பிக்கைகளின்
காரண காரணிகளை
அலசியிருக்கும் அசாத்தியம்
உங்களுக்கே
உரித்தான
உத்தம
உன்னதம் .

sakthi said...

யதார்தமான கவிதை.. இன்னும் கொஞ்சம் மொழி வளம் கூட்டியிருப்பின் மேலும் ஜொலித்திருக்கும்....
தொடருங்கள்

ரிஷபன் said...

சரியான விளக்கம். பொருத்தமானவர்கள் இருந்தால்தான் எந்த பதவியும் சோபிக்கும்.

Unknown said...

நச்சுனு சொல்லி இருக்கீங்க அதான் அவங்களுக்கு பல வருடம் நிலைத்த சொல்லாய் போயிடுச்சி போல.....உண்மை எப்பவுமே கசக்குமே தல!

சிவகுமாரன் said...

அருமை ரமணி சார்.
தேங்காய்க்கும் வாழைக்குமான விளக்கம் வெகுப் பொருத்தம்.
யதார்த்தவாதி பொதுஜன விரோதி தானே-- மிகச் சரியாக சொன்னீர்கள்.
தக்காரும் அர்ச்சகரும் முகம் திருப்பிக் கொண்டால் என்ன , ஆண்டவன் பார்த்தான் அல்லவா?

மாதேவி said...

நல்ல பதிவு."தேங்காயும் வாழையும்" விளக்கம் நன்று.

சுதா SJ said...

//யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....
//
நிஜமான வரிகள்

சுதா SJ said...

அருமையான படைப்பு

நிரூபன் said...

வசன கவிதையில், யதார்த்த வாதியின் குணங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அடிக்க வேண்டிய நேரத்தில் அடித்து ஆட வேண்டும்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் வெகு தெளிவு , தீர்க்கம்.
காரணங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment