Friday, June 3, 2011

ஜான் அப்துல் நாராயணன்

கடந்த வருட மழைக்காலத்தில்
சுகாதாரக் கேடும் அடைமழையும்
கைகோர்த்துக் கொள்ள
எங்கள் காலனியில்
கொள்ளை நோய்
பேயாட்டம் போடத் துவங்கியது

பழகிப் போன சோம்பல் நோயிலும்
அதிகார போதையிலும்
நெளிந்து கொண்டிருந்த அரசை
நாங்கள் கூச்சல் போட்டு உசுப்ப
கொஞ்சம் அரைக்கண் திறந்து பார்த்தது
நாங்களும் திரு நீறுஅடித்து
பேயாட்டத்தை கொஞ்சம் அடக்கி வைத்தோம்
ஆயினும்
மூன்று வயதானவர்கள் மட்டும்
வசமாக மாட்டிக் கொண்டனர்

பெற வேண்டியதை எல்லாம்
சரியாகப் பெற்றுக்கொண்டபின்
"செய்ய வேண்டியதை எல்லாம்
முறையாகச் செய்துவிட்டோம்
இனி எங்கள் கையில் ஏதும் இல்லை
எல்லாம் அவன் கையில் " என
ஆகாசத்தைக் காட்டிவிட்டனர் மருத்துவர்கள்

நாங்கள் குழம்பிப் போனோம்
சங்கக் கூட்டத்தை முறையாகக் கூட்டி
மூவருக்குமாக வேண்டிக் கொள்வதென
ஏகமனதாய் தீர்மானித்தோம்

அப்போதுதான் பிரச்சனை
பூதாகாரமாய் கிளம்பியது
காரணம்
ஒருவர்  பெயர் ரஸாக்
அடுத்தவர் பெயர் ப்ரான்ஸிஸ்
மற்றொருவர் பெயர் விஸ்வனாதன்
எந்த முறையில் பிரார்த்திப்பது என
எழுந்த பிரச்சனை சங்கத்தை
மூன்றாக்கும்போல் வெடித்தது

திடுமென எழுந்த இளைஞன் ஒருவன்
"பிரார்த்தனைக்கு நாளைக்கு
ஏற்பாடு செய்ய்யுங்கள்
நான் சரிசெய்கிறேன்"என்றான்
எங்களுக்கும் வேறு வழி இல்லையாதலாலும்
நம்பிக்கைஊட்டும்படியாக அவன்
பார்வைக்குத் தெரிந்ததாலும்
சரியெனச் சொல்லிவைத்தோம்

மறு நாள்
பிரார்த்தனைக்கு அனைவரும்
ஆவலாகக் காத்திருக்க
அதிர்ச்சி தரும்படியாக வந்தான் அவன்

இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்
கைகளில் குரான் என
குழம்பும்படி வந்தான் அவன்

மேடையில் மண்டியிட்டவன்
குரானைப் பிரித்து
வேதம்போல் படிக்கத் துவங்கினான்
அதிர்ச்சியில் எல்லோரும்
அவனையே பார்த்திருக்க
"ஆண்டவன் பரிபூரணன்
எல்லையில்லா அருளாளன்
அவனுக்கு எல்லாம் தெரியும்
நிச்சயம் அவர்களைக் காப்பான் " என்றான்

எல்லோரும் ஏதோ ஒருவகையில்
சமாதானமடைந்து போனார்கள்
எனக்கு மட்டும் ஒரு உறுத்தல்
"மூன்றுக்குள் இவன்
யாராக இருப்பான்
எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும்"
என்றேன் என் நண்பனிடம்
"அது எப்படி முடியும் ? " என்றான் அவன்

"பெயர் அறிந்தால் போதுமே
எல்லாம் தெரிந்து போகுமே " என்றேன்
நண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து
அகமகிழ்ந்து போனான்

"தம்பி நல்லது செய்தாய்
உன்பெயரென்னப்பா " என்றேன் பரிவுடன்
என்னை இகல்பமாகப் பார்த்தவன்
"ஜான் அப்துல் நாராயணன் " என்றான்
நான் குழம்பிப் போனேன்
"கைக்குட்டை சரி வராது
வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"
என்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்

26 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கற்பனை.
அருமையான பதிவு.
எம்மதமும் சம்மதம் என்பர்.
இதில் எல்லா மதமும் கலப்படம்.
கலப்படம் உணவுப்பொருட்களில் இருந்தால் ஆபத்து.
உணர்வுப்பொருட்களில் இருந்தால் மிகவும் நல்லதே. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

A.R.ராஜகோபாலன் said...

எல்லா மதமும் என்மதமே
எதுவும் எனக்கு சம்மதமே

நல்லதொரு நீதி சொன்ன
சொக்க தங்க கவிதை ரமணி சார்

RVS said...

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்.... நாகூர் அனீஃபா இளையராஜா இசையில் பாடிய பாலு மகேந்திரா படப் பாடல் ஞாபகம் வந்தது. அற்புதமான கற்பனை. அமர்க்களமான கவிதை.. ;-))

மனோ சாமிநாதன் said...

அருமையான கவிதை! எதிர்கால இளைஞர்கள் மேல் நம்பிக்கை வருகிறது!

நிரூபன் said...

சகோ, இக் காலத்திற்கேற்ற கவிதை. மதங்களின் மூலம் உருவாகும் பிரச்சினைகளை முதற் பாதியில் சொல்லும் கவிதை. அடுத்து பாதியில் அதற்கான தீர்வினையும் அழகுற உரைக்கிறது. அருமை சகா.

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் கற்பனை.. அருமையான தமிழில்... நன்றி..

MANO நாஞ்சில் மனோ said...

குரு அசத்திட்டீங்க போங்க....!!!

MANO நாஞ்சில் மனோ said...

வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"
என்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்///


நண்பர் சரியாதான் சொல்லி இருக்கார் ஹே ஹே ஹே ஹே....

நிகழ்வுகள் said...

அவரை போல ஊருக்கு நாலு வாலிபர்கள் இருந்தால் போதும் ஐயா ...

காலத்திற்க்கேற்ப அருமையான கவிதை..

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

’சுருக்’

G.M Balasubramaniam said...

மனிதனுக்கு அடையாளங்கள் தேவைப் படுகிறது.!கவிதை கரு பழைய பாடல் ஒன்றை நினைவு படுத்துகிறது. மனிதன் மாறிவிட்டான் .மதத்தில் ஏறி விட்டான். வாழ்த்துக்கள்.

கதம்ப உணர்வுகள் said...

சபாஷ் என்று கைத்தட்டவைக்கும் மிக அருமையான வரிகள் ரமணி சார்.... இனிவரும் ஜெனரேஷன் எல்லாம் மதக்கலவரம் ஏற்படுத்தாது, ஜாதி சண்டை போட்டுக்கொள்ளாது, அன்பில் மட்டுமே இனி மனிதம் மலர ஆரம்பித்துவிடும் என்ற நம்பிக்கை உங்கள் வரிகளை படித்ததுமே எனக்கு தோன்றிவிட்டது.....

நச் வரிகள்.... என் பெயர் ஜான் அப்துல் நாராயணன்.. இனி என்ன செய்ய முடியும்? கேட்டு தான் பார்க்கட்டுமே இனி எங்கும் ஜாதி சான்றிதழோ அல்லது என்ன மதம் என்றோ சொல்லி துவேஷம் வளர்க்க முயலட்டுமே...

இனி ஒன்னும் அசைக்கமுடியாது.... மனிதமும் அன்பும் மட்டுமே மலர்ந்து எல்லோரும் சண்டை சச்சரவின்றி இருக்கத்தான் போகிறார்கள்.... பார்க்கும் காலமும் வரத்தான் போகிறது...

அன்பு வாழ்த்துக்கள் ரமணி சார்....

vanathy said...

அழகான வரிகள் கோர்த்த அழகிய கவிதை!

மாதேவி said...

அருமையான கவிதை. சர்வமத சங்கமம்.

ரிஷபன் said...

புதுமைக் கவிதை..

சாகம்பரி said...

நல்ல கருத்து சார்.

குறையொன்றுமில்லை. said...

அழகான கருத்து. எம்மதமும் சம்மதமே.

மாலதி said...

//இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்
கைகளில் குரான் என
குழம்பும்படி வந்தான் அவன்//
புதுமைக் கவிதை.. நல்ல கருத்து சார்.

Murugeswari Rajavel said...

ரமணி சார்,The great!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துள்ள கவிதை... எம்மதமும் சம்மதம் என்று இருந்துவிட்டால் ஏது பிரச்சனை...

போளூர் தயாநிதி said...

"பெயர் அறிந்தால் போதுமே
எல்லாம் தெரிந்து போகுமே " என்றேன்
நண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து
அகமகிழ்ந்து போனான்//புதுமைக் கவிதை..

ஹேமா said...

என்னவொரு அருமையான சிந்தனை.மதம் கொண்டவர்களுக்கு மனதில் அடிக்கும் !

இராஜராஜேஸ்வரி said...

மதம் கொண்ட யானைக்கு அங்குசம் போல் அருமையான சிந்தனை.

மதம் அடங்கிய மனது சாதித்த சாதனை அற்புத கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நெத்தியடி...:)

பிரணவன் said...

இயற்கை, அரசு, மதம், மனிதன், என அனைத்தின் நிலைமையையும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். . . நல்ல சிந்தனை sir. . .

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.

Post a Comment