Saturday, June 8, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (7)

 எங்கள்  வீட்டில் எல்லோரும் ஒரு சிறு அசௌகரியம்
 என்றாலும் குடும்ப டாக்டரைப் போலவே
இந்த டாக்டரைத்தான்  பார்ப்போம் என்பதால் இந்த
டாக்டரின் குணாதியங்கள் எங்களுக்கு அத்துப்படி

அமெரிக்காவில் சில வருடங்கள் இருந்ததாலோ
என்னவோ அவரிடம்  முதன் முதலாக வருகிற
பேஸண்டை அனைத்து டெஸ்டுகளும் எடுத்து
வரச்  சொல்லி ஒரு ஃபைல் தயார்செய்து விடுவார்,
பின்னர்தான் வைத்தியத்தைத் துவங்குவார்

அந்த வகையில்தான் கணேசனுக்கும் செய்துள்ளார்
மற்றபடி பெரிதாக எதுவும் இருக்காது எனத் தான்
நானும் எண்ணி மறு நாள் கணேசனையும்
அழைத்துக் கொண்டு முதல் ஆளாக ஆஸ்பத்திரி
வந்திருந்தேன்

வரவேற்பு அறையில் இருந்த பெண்
என்னைக் கண்டதும் "டாக்டர் இன்று எட்டு
 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்
உங்கள் மெடிகல் ரிபோர்ட்டுகளையெல்லாம்
 அவர்டேபிளில்தான் உள்ளது,கொஞ்சம்
 வெயிட் பண்ணுங்கள்" என்றார்

கணேசனும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி
அதிகப் பட்சம் தனக்கு அல்சர் வேண்டுமானால்
இருக்கலாம்என்கிற அபிப்பிராயத்தில் இருந்ததால்
அவனிடத்தும் அதுபெரிய பரபரப்பில்லை

ஒரு அரை மணி நேரத்தில் டாக்டர் அழைப்பதாக
உள்ளிருந்த நர்ஸ் சொல்ல நாங்கள் இருவரும்
உள்ளே சென்று டாக்டருக்கு எதிராக இருந்த
 இருக்கையில் அமர்ந்தோம்

டாக்டர் சுற்றி வளைக்காமல் நேரடியாகக்
 கணேசனைப் பார்த்து "சொல்வதற்கு மனதிற்கு
 மிகவும்சங்கடமாகத்தான் இருக்கிறது,
கொஞ்சம் மனதைதிடப்படுத்திக் கொள்ளுங்கள் "
என்று சிறிது நிறுத்தி எங்கள் இருவரையும் ஆழமாக
ஊடுருவிப்பார்த்துவிட்டு பின் அவரே  தொடர்ந்தார்

"நேற்று உங்களிடம் விசாரித்து அறிகுறிகளைத்
 தெரிந்து கொண்ட வகையில்
நீங்கள்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்
எனத் தெரிந்து கொண்டேன்.ஆயினும் இத்தனை
கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பீர்கள் என
நினைக்கவில்லை  "எனச் சொல்லி நிறுத்தவும்
நான் அதிர்ந்து போனேன்

கணேசன் பேயறைந்த பாவனையில் உடல் நடுங்க
என்னைப் பார்த்தான்.நான் வலது கையால் அவன்
உள்ளங்கையை அழுத்திப்பிடித்தபடி டாக்டரைப்
பார்த்தேன்

டாக்டர் கொஞ்சம் கவலைத் தோய்ந்த குரலில்
"மூன்று ஆண்டு காலமாக அது சிறிது சிறிதாக
உள்ளே வளர்ந்து வந்திருக்கிறது,லேசான குறிப்பையும்
அவ்வப்போது காட்டியும் வந்திருக்கிறது.
நீங்களே மருத்துவராகி அது இந்த நோய்தான் என
நீங்களாகவே முடிவு செய்து சுயவைத்தியம் பார்த்து .
நோயை முற்ற வைத்திருக்கிறீர்கள்.

வண்டி ஓடாமல்  போனால்தான்
மெகானிக்கிடம் போகிற மாதிரி , உடல் அதிகம்
தாங்கமுடியாமல் போனால்தான் இப்போது மாதிரி
ஆஸ்பத்திரி வருகிறீர்கள்.படிக்காதவர்கள்தான்
அப்படி இருக்கிறார்கள் என்றால் படித்தவர்களும்
அப்படித்தான் இருக்கிறீர்கள் "என்றார் வருத்தத்துடன்

கணேசனின் மொத்த உடலும் நடுங்குவதும்
லேசாக துவங்கிய விசும்பல் ஒலி கொஞ்சம் கூடத்
துவங்கியதும் என் கண்களும் கலங்கத் துவங்கிவிட்டது

நான் துக்கத்தை அடக்கியபடி "டாக்டர்
இவனுக்கு நிச்சயம் வரச் சந்தர்ப்பமில்லை
அனைத்து விஷயங்களிலும் அத்தனை
சரியாக இருப்பான்என்ன செலவானாலும்
 இன்னொருமுறை டெஸ்ட் எடுத்துப்
பார்த்துவிடலாம டாக்டர்."என்றேன்

"நீங்கள் இப்படியெல்லாம் யோசிப்பீர்கள்
பேசுவீர்கள் எனத் தெரிந்துதான்.கொஞ்சம்
அதிர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லையென
நோயின் வீரியம் உங்களுக்குத் தெரியவேண்டும்
என சுற்றி வளைக்காது பேசினேன்

சுத்தபத்தமாக இருப்பதற்கும் மிகச் சரியாக
வாழ்வதற்கும் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை
அது செல்லுக்கு நேரும்  கிறுக்குத்தனம்
அதனால் வரும் அதிகப்படியான வளர்ச்சி
இந்த நிலையில் அது குறித்து நான் அதிகம்
விளக்குவதும் கஷ்டம்
நீங்கள் புரிந்து கொள்வதும் கஷ்டம்.

இந்த நிலையில் இந்த  நோய்க்கும் நம்மூரில்
வைத்தியம்பார்க்க போதுமான வசதியும் இல்லை
சிறப்பு வைத்தியர்களும் இல்லை.
உடன் தாமதம் செய்யாமல் சென்னை
அடையார் மருத்துவமனைக்குச் செல்லமுயலுங்கள்
சிறப்பு மருத்துவர் என் நண்பர்தான்
அவருக்கு ஒரு சிபாரிசுக் கடிதமும் தருகிறேன்
இந்த ரிபோர்ட்டையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்
கூடுமானவரையில் தாமதம் செய்ய வேண்டாம்
ஏனெனில் இந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு
முன்பு  பாதிக்கப்பட்டு அடையார் புற்று நோய்
மருத்துவமனைக்குச் சென்றவர் இப்போதும்
சௌக்கியமாக இருக்கிறார் "என நம்பிக்கையூட்டி
முடித்தார்

இதற்கு மேலும் டாக்டரின் நேரத்தை வீணடிக்க
விரும்பாமல் கணேசனின் கைகளைப் பற்றியபடி
மருத்துவமனைக்கு வெளியே வந்தேன்

தன் கணவனுக்கு பெரிதாக எந்த நோயும்
இருக்கக் கூடாது ஒருசாதாரண வயிற்று வலியாகத்தான்
இருக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதற்காக
பெருமாள் கோவில் போன நண்பனின் மனைவி
கையில் பிரசாதப் பையுடன் ஆட்டோவை விட்டு
இறங்கி எங்களை நோக்கி
வேகமாக எதிரே வந்து கொண்டிருந்தார்

(தொடரும் )


25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// சுயவைத்தியம் பார்த்து நோயை முற்ற வைத்திருக்கிறீர்கள்... ///

மிகவும் கவனிக்க வேண்டிய விசயம்...

அடையார் புற்று நோய் மருத்துவமனையில் என்ன சொன்னார்கள் என்று பதட்டமாய் தான் இருக்கிறது...

பால கணேஷ் said...

அடாடா... உங்கள் நண்பரின் மனநிலையை நினைத்தாலே நடுக்குகிறது. எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட அவரது துணைவியாரை எப்படி சமாளித்தீர்களோ? மருத்துவர் சொன்ன அறிவுரை மிகமிகச் சரியானது. அனைவரும் அறிய வேணடியது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முதன் முதலாக வருகிற பேஷண்டை அனைத்து டெஸ்டுகளும் எடுத்து வரச் சொல்லி ஒரு ஃபைல் தயார்செய்து விடுவார். பின்னர்தான் வைத்தியத்தைத் துவங்குவார்//

இன்று எல்லா இடங்களிலுமே அநேகமாக,இப்படித்தான் உள்ளது.

//இந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டு அடையார் புற்று நோய் மருத்துவமனைக்குச் சென்றவர் இப்போதும் சௌக்கியமாக இருக்கிறார் "என நம்பிக்கையூட்டி
முடித்தார்//

நாங்களும் அதுபோலவே நம்பி இந்தப்பகுதியைப் [படித்து முடித்துள்ளோம்.

அடுத்த பகுதியில் என்ன ஆகுமோ, ஒரே கவலையாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நன்றாக கதை சொல்லவும், கதையை இழுத்துக்கொண்டு செல்லவும், சரியான இடத்தில் ’தொடரும்’ என்ற ப்ரேக் போடவும் நல்லாப்பழகிட்டீங்க.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

bandhu said...

இதெல்லாம் தெரிந்தாலும், எங்கே டாக்டரிடம் போனால் நம் பயத்தை உண்மையாக்கி விடுவாரோ? அதனால், 'இக்நோரன்ஸ் இஸ் ப்ளிஸ்' என்று இருந்துவிடுவதே மேல் என்ற மனநிலை.. என்ன சொல்வது?

தி.தமிழ் இளங்கோ said...

// சுத்தபத்தமாக இருப்பதற்கும் மிகச் சரியாக
வாழ்வதற்கும் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை
அது செல்லுக்கு நேரும் கிறுக்குத்தனம்
அதனால் வரும் அதிகப்படியான வளர்ச்சி
இந்த நிலையில் அது குறித்து நான் அதிகம்
விளக்குவதும் கஷ்டம் நீங்கள் புரிந்து கொள்வதும் கஷ்டம். //

புற்றுநோய் குறித்து எளிமையான தெளிவான விளக்கம். துயரத்தின் மடியில் என்ன சொல்வது? அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்.

இளமதி said...

ஐயா... சத்தியமாக எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை.
வலைப்பூவில் உங்கள் எல்லோரையும் என் உறவாக நினைக்கின்றேன். அதில் இங்கு ஒவ்வொருத்தரும் குறிப்பிடும் உங்கள் குடும்பம், நண்பர்களும் அடங்குவர்.
அவ்வகையில் உங்களின் இந்த ஆருயிர் நண்பருக்கு இப்படியென அறியும்போது என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் துக்கம் நெஞ்சை அடைக்கக் கண்கள் வழிகிறது.

மனதை பிசைகிறது...

என்ன ஆயிற்றோ... ஆகப்போகிறதோ???...

இராஜராஜேஸ்வரி said...

தன் கணவனுக்கு பெரிதாக எந்த நோயும்
இருக்கக் கூடாது ஒருசாதாரண வயிற்று வலியாகத்தான்
இருக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதற்காக
பெருமாள் கோவில் போன நண்பனின் மனைவி
கையில் பிரசாதப் பையுடன் ஆட்டோவை விட்டு
இறங்கி எங்களை நோக்கி
வேகமாக எதிரே வந்து கொண்டிருந்தார்

கனக்கவைக்கும் சேதி கேட்டுக்கொள்ளவோ..!

Seeni said...

vethanaiyaaka irukkirathu...

Avargal Unmaigal said...

இதைப் படித்ததும் நான் சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்ட பதிவான மரணம் என்பது தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறதா? http://avargal-unmaigal.blogspot.com/2013/06/blog-post_6.html என்பது நினைவுக்கு வருகிறது

கவியாழி said...

சுத்தபத்தமாக இருப்பதற்கும் மிகச் சரியாக
வாழ்வதற்கும் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை//உண்மைதான் புற்றுநோய்க்கும் மனநோய்க்கும் மருந்தில்லை

கரந்தை ஜெயக்குமார் said...

சுத்தபத்தமாக இருப்பதற்கும் மிகச் சரியாக
வாழ்வதற்கும் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை
ஆம் தாங்கள் சொல்வது உண்மைதான். அனைத்த வித உடல நலனைக் கெடுக்கம் திய பழக்கங்கள் உள்ளவர்களை, இந்நோய் தாக்கியதாகத் தெரியவில்லை.
எவ்வித தீய பழக்கங்களும் இல்லாதவர்களே பெரும் பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். ஏன்இந்த முரண்பாடு புரியவில்லை.
தங்களின் நண்பனின் நிலை கலங்கடிக்கின்றது அய்யா. கவலையுடன் தொடர்கிறேன்

”தளிர் சுரேஷ்” said...

நண்பர் சுகமடைந்தாரா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்! பகிர்வுக்கு நன்றி!

Avargal Unmaigal said...

@s suresh ..

///நண்பர் சுகமடைந்தாரா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்! பகிர்வுக்கு நன்றி///

சுரேஷ் நண்பர் சுகம் அடைந்து இருக்கமாட்டார் சொர்க்கம்தான் அடைந்து இருப்பார். இது தமிழ் திரைபடம் அல்ல.. ரமணி சார் உண்மை சம்பவத்தைதான் எழுதி கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்

சிவகுமாரன் said...

சுரேஷ் நண்பர் சுகம் அடைந்து இருக்கமாட்டார் சொர்க்கம்தான் அடைந்து இருப்பார்///

தவறான அபிப்ராயம். எல்லாவற்றையும் பொதுமைப் படுத்திவிட இயலாது.
எல்லாவற்றிற்கும் மேலான சக்தி ஒன்று எதையும் தீர்மானிக்கக வல்லது -- அது ஒன்றே.

அருணா செல்வம் said...

எமனோடு விளையாடி
எமனோடு உறவாடி.....
அவனைத் (எமனை)துரத்தி விட்டுவிடுங்கள் இரமணி ஐயா.

G.M Balasubramaniam said...


ரமணிதான் எழுதி இருக்கிறாரே “ இதை கதையாகக் கொள்வோம். “நண்பர் நலமடைந்தாரா இல்லையா என்று தீர்மானிப்பது ரமணி சார்தானே. எல்லாவற்றுக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு,எனக்குப் புரிந்தவரை ரமணிக்கு சுபம் என்று முடிக்கத்தான் பிடிக்கும். கிரிக்கட் ஆட்டக்காரர்
யுவராஜ் சிங் உடல் தேறி மறுபடியும் ஆட்டத்துக்கு வரவில்லையா. உலக சைக்கிளிங் சாம்பியன் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் முன்னோடியாக இல்லையா.?கதையை சுபமாக முடிக்க நிறையவே முன்னோடிகள் இருக்கிறார்கள்.

சென்னை பித்தன் said...

மனம் கனக்கிறது;காலனை வென்றிருக்க வேண்டுமே என விரும்புகிறது

சக்தி கல்வி மையம் said...

புற்றுநோய் குறித்து எளிமையான தெளிவான விளக்கம்...

சசிகலா said...

ஆஸ்பிட்டல் சென்று பார்த்து இப்போது நலமாக இருப்பதாக எழுதிவிடுங்களேன்.

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் நலம் பெற்று வீடு திரும்பினார் எனச் சொல்ல மாட்டீர்களா என்ற நினைப்புடன்.... அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

மாதேவி said...

வலிஆரம்ப காலத்திலேயே டாக்டரிடம் சென்று காட்டி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

கீதமஞ்சரி said...

எதையும் ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திவிட்டு முற்றியபின் பதறுவதென்பது நம்மில் பலருக்கும் உள்ள மனோபாவம். மருத்துவர் அதை சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார். இதுவோ அதுவோ என்று பயந்தது இப்போது இதுதான் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. அடுத்து செய்யவேண்டியவை குறித்து யோசித்து முடிவெடுத்தலே புத்திசாலித்தனம். ஆனால்... நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன எழப்போகின்றன.. தொடர்கிறேன்.

ஸாதிகா said...

தன் கணவனுக்கு பெரிதாக எந்த நோயும்
இருக்கக் கூடாது ஒருசாதாரண வயிற்று வலியாகத்தான்
இருக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதற்காக
பெருமாள் கோவில் போன நண்பனின் மனைவி
கையில் பிரசாதப் பையுடன் ஆட்டோவை விட்டு
இறங்கி எங்களை நோக்கி
வேகமாக எதிரே வந்து கொண்டிருந்தார்//சார் மேலே உள்ள வரிகளை பார்த்துவிட்டு கண்கள் கலங்கிவிட்டது.

Ranjani Narayanan said...

பாவம் அந்த இளம் மனைவி எப்படி இந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ளப் போகிறாள்?

Post a Comment