Friday, June 14, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (9)

சந்தோசமான நிகழ்வெனிலோ அல்லது அதிக
சோகமான நிகழ்வெனிலோ அதை பகிர்ந்து
கொள்வதற்காக நான் அவன் வீட்டிலோ அல்லது
அவன் என் வீட்டிலோ இரவு தங்குவதுண்டு

அது நிச்சமாக எங்கள் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும்
சோகத்தை இல்லாது செய்துவிடும்.

இந்தமுறை அதிகச் சோகத்தைப் பங்கிட்டுக்
கொள்வதற்காகவே அவன் இன்றுஎங்கள் வீட்டிற்கு
இரவு தங்க வந்துள்ளான் என்பதைப் புரிந்து கொண்டு
நானும்அவசரம் அவசரமாக இரவு உணவை
 முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு
 மொட்டை மாடிக்கு வந்தபோது வெறும் தரையில்
 படுத்தபடி வானத் தைவெறிக்க
ப்பார்த்துக் கொண்டிருந்தான்

நான் படுக்கையை விரித்து படுத்தபடி
"சரி இப்போது சொல்றா என்ன முடிவு எடுத்திருக்கே
உன மனைவியிடம் விஷயத்தைச் சொல்லியாச்சா
நாளை மறு நாள் சென்னை செல்கிறோம் தானே "
என நானே அவன் பேச அடியெடுத்துக் கொடுத்தேன்

அவன் எழுந்துவந்து என் அருகில் படுத்தபடி
பேச ஆரம்பித்தான்

"தப்பாக நினைக்காதே நான் ரொம்ப யோசித்துத்தான்
இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.என் பிள்ளைகளிடமும்
மனைவியிடமும் கேன்ஸர் எனச் சொல்லப்போவதில்லை
வயிற்றுப்புண் அதிகமாக உள்ளது.
விட்டால் கேன்ஸராக சான்ஸ் இருக்குன்னு
 டாக்டர் சொல்லி இருக்கார்
எதற்கும் சென்னைக்குப் போய் நன்றாக டெஸ்ட் செய்து
விடுங்கள்.இங்கு அவ்வளவு வசதி இல்லை எனச்
சொல்லி இருக்கிறார் எனச் சொல்லப்போறேன்
அவள் நான் எதைச் சொன்னாலும்
நம்பித்தான் தொலைப்பாள்"எனச் சொல்லி நிறுத்தினான்

"டேய் அது தப்பில்லையா.ஊருக்கு உறவுக்குத்
தெரிய வேணாம் மனைவி பிள்ளைகளிடம் எப்படியடா
சொல்லாமல் இருப்பது"என்றேன் பதற்றத்துடன்

"இல்லை நல்லா யோசித்துப் பார்த்துட்டேன்
இது ட்ரீட்மெண்ட்டில் சரியாகிப் போச்சுன்னா சரி
அவங்க அதுவரை மனக் கஷ்டப்படாம இருப்பாங்க
சரியாப் போகாமப்போனாலும் பரவாயில்லைக்
நான் இருக்கும் வரையாவது சகஜமாக இருப்பாங்க.
இப்பக் கூடப் பாரேன் எனக்கு கேன்ஸர்ன்னு
தெரிஞ்சதிலிருந்து நீ சகஜமாயில்லை.
எதுகெடுத்தாலும் விடாப்பிடியாஆர்கு பண்ற நீ கூட
நான் எது சொன்னாலும்சரி சரின்னு போறே
.அது எனக்கு ரொம்ப மனச் சங்கடமாயிருக்கு,
அதே மாதிரி சந்தோஷமா சகஜமா இருக்கிற
பொஞ்சாதி பிள்ளைகளை இருக்கிறவரை
கஷ்டப்படுத்தவேண்டாம்னுநினைக்கிறேண்டா
"என்றான்

அவன் சொல்வது கூட எனக்குச் சரியெனத்தான் பட்டது
 இப்போது கூட முன் போல உரிமையாக
அவனுக்கு எதிராக வாதிடும் நிலையிலும் நான் இல்லை

பின் அவன் வீடு கட்ட வைத்திருக்கும் பணத்தில்
ஒரு ஐம்பதாயிரத்துக் குறையாமல் எடுத்துக் கொண்டு
வருவதாகவும் மாமனாரை ஒரு வாரம் வீட்டில் இருந்து
பார்த்துக் கொள்ளும்படு ஏற்பாடு செய்துவிட்டதாகவும்
நானும் என மனைவியிடம் அவன் சொல்லி
இருப்பதைப்போலவே சொல்லிவிடுமாறும் சொன்னான்
நான் மறுப்பேதும் சொல்லவில்லை.
அவன் சொல்வதற்கெல்லா
ம்" ம் "கொட்டிக் கொண்டிருந்தேன்

பின் வெகு நேரம் பழங்கதைகளைப் பேசிக்
கொண்டிருந்துவிட்டு தூங்கிப்போனோம்

பிறகு எல்லாம் திட்டமிட்டபடியே சரியாக நடந்தது
சென்னை சென்றதும் ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே
ரூம் எடுத்துத் தங்கிவிட்டு மறு நாள் காலையில்
மதுரை டாக்டர் கொடுத்த மெடிகல் ரிபோர்ட்டுடன்
சிபாரிசுக் கடிதத்துடன் சென்னை டாக்டரைப் பார்த்தோம்

சென்னை டாக்டர் மிக சகஜமாகப் பேசினார்
மதுரை டாக்டரும் அவரும் ஒரே கல்லூரி மாணவர்கள்
மட்டுமல்ல .ஐந்து ஆண்டும் ஒரே அறையில் தங்கி
இருந்தவர்கள் எனச் சொல்லி  நாங்கள் கொண்டு வந்த
ரெபோர்ட்டுகளை எல்லாம் எங்கள் எதிரிலேயே
படித்துவிட்டு இன்னும் சரியாக அனுமானிக்க
 சில டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டும் எனவும்
 நாளைக் காலையில்ரூமைக் காலிசெய்துவிட்டு
இங்கேயே தங்கும்படியாகவந்துவிடும்படியும்
தான் இங்கு அட்மிஷன் போட்டுவிடுவதாகவும்
 சொன்னார்,

டாக்டர் இத்தனை இயல்பாக பேசியதே என் நண்பனுக்கு
பாதி நோய் குணமாகிவிட்டதைப் போல கொஞ்சம்
தெளிவாகத் தெரிந்தான்

மறு நாள் காலையில் என்னை வார்டிலேயே இருக்கச்
சொல்லிவிட்டு அவனை மட்டும் செக்கப்புக்காக
டாக்டர் அழைப்பதாக நர்ஸ் அழைத்துப் போனார்
அவன் திரும்பி வர மாலைக்கு மேல் ஆகிவிட்டது

வந்தவன்" டேய் உங்க டாக்டர் சொன்னது
சரியாகத்தானிருக்கு,இங்க லேபில் அவ்வளவு
மெஷினெரிடா.டாக்டரும் ரொம்ப நல்ல டைப்புடா
ஒரு ரெண்டு டெஸ்ட் ரிஸல்ட் சரியா வரலைன்னு
திரும்ப திரும்ப எடுக்கச் சொல்லிட்டாருடா
இங்க வந்தது நல்லதாப் போச்சுடா
கேன்ஸருக்கு இவங்கதான் அதாரிடி போல
அவ்வளவு நல்லா பாக்குராங்கடா "என்றான்

அவன் நோயின் தீவிரம் மிகச் சரியாகக்
கணிக்கப்பட்டுவிடும் என நம்பியதாலும்
அதனால் நிச்சயம் நோய் குணப்படுத்தப்பட்டுவிடும்
என் நம்பியதாலுமோ என்னவோ
இத்தனை நாள் இல்லாத அளவு மிகவும்
சந்தோஷமாக இருந்தான்.
எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது


ஊருக்குப்போன் போட்டு எல்லாம் நல்லவிதமாகப்
போய்க்க்கொண்டிருக்கிறது,ஒன்றும் பிரச்சனையில்லை
என்பதுமாதிரி மனைவி மற்றும்
குழந்தைகளிடம்  பேசினான்
இரவு இருவரும் நிம்மதியாகத் தூங்கினோம்

மறு நாள் காலையில் கொஞ்சம் தாமதமாக
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் "ரெபோர்ட் எல்லாம்
வந்துவிட்டது.பார்த்தும் விட்டேன்.நாளை சாயந்திரம்
இருவரும் எங்கள் குவார்டஸ்ஸுக்கு
 வந்து விடுங்களேன் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்
டு ரிலாக்ஸ்டாக பேசலாம்" என்றார்

எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது
மதுரைக்குப் போனதும் டாக்டரை வீட்டில் சந்தித்து
அவர் சிபாரிசுக் கடிதத்திற்கு இருந்த
 மதிப்பைச் சொல்லி நன்றி சொல்லவேண்டும் என
முடிவெடுத்துக் கொண்டோம்

ஆனால் அந்த டாக்டர் அத்தனை சகஜமாக
அந்நியோன்யமாக இருந்ததற்கான காரணம் இவன்
நோயின் தீவிரத்தினால ஏற்பட்ட இரக்கம்தான் என்பது
மாலையில் அவரைச் சந்தித்துப் பேசிய பின்புதான்
எங்கள் இருவருக்குமே புரிந்தது

(தொடரும் )


25 comments:

bandhu said...

இப்படித்தான் நடக்கப்போகிறது என்று அனுமானித்தாலும் அப்படி இருக்கக்கூடாது என்று நினைக்கிறது,என் பேதை மனது!
என் அப்பாவிற்கு கேன்சர் என்று தெரிந்தும் மனமாற அது பொய்தான் என்ற டினயலிலேயே இருந்தேன்! again..என் பேதை மனது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால் அந்த டாக்டர் அத்தனை சகஜமாக
அந்நியோன்யமாக இருந்ததற்கான காரணம் இவன்
நோயின் தீவிரத்தினால ஏற்பட்ட இரக்கம்தான் என்பது
மாலையில் அவரைச் சந்தித்துப் பேசிய பின்புதான்
எங்கள் இருவருக்குமே புரிந்தது//

நல்லாவே, மிகப்பொறுமையாகவே சம்பவங்களை இழுத்துக்கொண்டுபோய், சரியான இடத்தில் ’தொடரும் ’போடுகிறீர்கள். ;)

தொடரட்டும், இந்தச்சம்பவங்களும் அவரின் வாழ்வும் கூட..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லபடியாக குணமாகி விடாதா...? என்னும் ஆதங்கம் தான் மேலோங்குகிறது...

ராஜி said...

ஐயோ! நோய் இருக்கட்டும்.., மிதமா இருந்தால் தேவலை..,அதை விட்டு தீவிரம்ன்னா!? பாவம்

Unknown said...

மரணதண்டனைக் கைதியின் மனநிலையை ஒத்ததே...புற்றுநோயாளியின் நிலையும்! ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற ஒரு சோகம் ...இருக்கத்தான் செய்கிறது! பாதிக்கப்படாத குடும்பங்களுக்கு இக்கொடுமை நேரக்கூடாது..இறைவா!

இராஜராஜேஸ்வரி said...

டாக்டர் அத்தனை சகஜமாக
அந்நியோன்யமாக இருந்ததற்கான காரணம் இவன்
நோயின் தீவிரத்தினால ஏற்பட்ட இரக்கம்தான் என்பது எத்தனை கொடுமையான விஷயம்..!

Seeni said...

vethanai ....

கவியாழி said...

எனக்கு கேன்ஸர்ன்னு
தெரிஞ்சதிலிருந்து நீ சகஜமாயில்லை.?

”தளிர் சுரேஷ்” said...

இதயம் கனக்கும் பதிவு! தொடர்கிறேன்! நன்றி!

G.M Balasubramaniam said...


படிக்கத் துவங்கும் முன்பே கடைசியில் தொடரும் போட்டிருக்கிறீர்களா இல்லை முடிவு என்று ( சுபம் என்று நான் எழுதவில்லை) போட்டிருக்கிறீர்களா என்று பார்த்துவிட்டுத்தான் படிக்கிறேன். !

இளமதி said...

தொடர்ந்து..... என்ன ஆயிற்று ஐயா!....

Anonymous said...

தவற விட்ட அத்தனை அங்கங்களும் படித்து முடித்தேன். மனக்குளப்பமாக உள்ளேன் நமது நகரத்தில் ஓரு 20 வயதுப் பெண்ணின் மரணம். நோயினால்.
என்ன உலகமடா! என்ன வாழ்வடா என்று உள்ளது.
தொடருங்கள் வருவேன்.
வேதா. இலங்காதழிலகம்.

மாதேவி said...

நோய்க்கு வைத்திய வசதிகள் முன்னேற்றம் அடைந்துள்ள காலம் இது...இருந்தும்

"நோயின் தீவிரத்தினால ஏற்பட்ட இரக்கம்" எனச் சொல்லியுள்ளீர்கள். கவலையாக இருக்கின்றது.

அடுத்து .....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன் .

பால கணேஷ் said...

உங்கள் நண்பரின் மேல் மரி‌யாதையும் பரிதாபமும் ஒருங்கே எழுகிறது. மனசை கனக்க வைக்கிறது. இருந்தாலும் தொடராமல் இருக்க முடியலை.

Unknown said...

என்னை போய் தேடி எடு என்றால்
எதை எப்படி தேடுவேன்
எல்லாம் அறிந்த ....

உங்களை போல நான் என்ன
கவிஞரா, புலவரா,கதாசிரியரா
இல்லை படைப்பாளிதானா

நிலாமகள் said...

கடைசி பத்தி நடக்கப் போவதை கோடிட்டுக் காட்டுகிறதே.. :((

தி.தமிழ் இளங்கோ said...

தொடர் கதை என்றாலே முடிவு எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு ( SUSPENSE) செல்லும். ஆனால் இங்கு கவிஞரின் தொடரில், இதுதான் முடிவாக இருக்கும் என்ற வாசகர்கள் நினைக்கும் முடிவுடனேயே தொடர் நகர்ந்து கொண்டு இருக்கிறது. உண்மை நிகழ்ச்சி என்றால் வாசகர்கள் நினைக்கும் முடிவுதான். அது இறைவன் கையில். தொடர், கதை என்றால் கதையின் முடிவு, கவிஞரின் கையில்.

சசிகலா said...

மருத்துவரின் அன்பான கவனிப்பு அவருக்கு சற்று உற்சாகத்தை அளித்திருப்பது மகிழ்ச்சி அதுவே தொடரவேண்டும்.

அருணா செல்வம் said...

தொடருகிறேன் இரமணி ஐயா.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

எமனோடு வினையாடி தலைப்பில் தந்த
எழுத்தெல்லாம் என்னுயிரை அழுத்தும்! நெஞ்சச்
சுமையோடு எழுதுகிறேன்! நண்பன் கண்ட
துன்பத்தை எண்ணுகிறேன்! சந்தம் மின்னும்
தமிழோடு விளையாடிப் பாடும் என்னைச்
சாய்க்கின்ற இப்பதிவு வாழ்வைக் கூறும்!
உமையோடு ஒளிர்கின்ற ஈசன் தாளை
ஒன்றிமனம் நிற்கிறது! கண்ணீா் விட்டே!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

வெங்கட் நாகராஜ் said...

மனதைக் கனக்க வைத்த பகுதி. எங்கள் உறவினர்களிலேயே இரண்டு பேரை கேன்சர் பலி வாங்கியிருப்பதால் வலியின் அழுத்தம் அதிகமாகிவிட்டது.....

தொடர்கிறேன்.

கீதமஞ்சரி said...

நம்பிக்கை இழந்த நிலையில் நம்பிக்கை உருவாகி அது முற்றிலும் அவநம்பிக்கையாய் உருவெடுத்தால்... பாவம்... நண்பனுக்கு இப்படியொரு நிலை என்பதை விடவும் ஒவ்வொரு கணமும் உடனிருந்து அவன் படும் அவஸ்தைகளைக் கண்கூடாகக் கவனிக்கும் துர்பாக்கியம் மிகக் கொடுமை.

ஸாதிகா said...

மருத்துவரின் பாசமிகு கவனிப்பு அனைத்தியும் பார்க்கும் போது மனதுக்கு சற்றே ஆறுதலாகத்தான் உள்ளது.

Ranjani Narayanan said...

ஒரு நல்ல நண்பராக நீங்கள் இருப்பது மனதுக்கு தெம்பாக இருக்கிறது.

நல்ல செய்தி வரட்டும்!

Post a Comment