Monday, July 15, 2013

குறைப் பிரசவம்....

எண்ணிக்கையும் தரமும்
இரு துருவங்களாய்
எதிர் எதிர் நின்று வாதாட

குழப்பத்திற்கும்
தெளிவிற்கும் இடையில்
சிந்தனை தடுமாறித் திணற

வார்த்தைகளும் கருவும்
நீரும் எண்ணையுமாய்
ஒட்டாது விலகி விலகி வெறுப்பேற்ற

உடல்போலும்
உயிர் இருப்பது போலும்
தெரித்து விழுகிறது ஒருகவிதைப்  பிண்டம்

விலக்கவும் திறனற்று
ஏற்கவும் மனமின்றி
தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்

28 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தாயின் மன ஆறுதலுக்கு வார்த்தைகள் இல்லை...

ராஜி said...

பாவம் அந்த தாய்.., எவ்வளவு கனவு கண்டிருப்பாள் அந்த உயிரை சுமக்கும்போது?!

மனோ சாமிநாதன் said...

தரமின்றி கவிதைக்குழந்தை பிறந்து விட்டால் பூரிக்க இயலாது வெதும்பத்தானே செய்யும் கவிதைத்தாயின் மனம்!!

Anonymous said...

உவமைகள் நன்று !

G.M Balasubramaniam said...

எழுதும் பலருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான்...! தரம் தேவையென்றால் விலக்கி விடவேண்டும்.எனக்கு மார்க்கண்டேயன் கதை நினைவுக்கு வருகிறது. ...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல உவமைகள். எண்ணிக்கையைவிட தரம் தான் முக்கியம் என்பது என் எண்ணம். நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.

சக்தி கல்வி மையம் said...

அருமையான உவமைகள்...

அம்பாளடியாள் said...

வாசிப்பவர்கள் மனதிற்கு வரும் சங்கடம் இது .
கவிதை எழுதுபவர்கள் உணரவேண்டிய தருணம் ஒரு நாள் வரும் வரும்போது இப் பிண்டங்களும் உயிர் பெறலாம் .அதற்கும் வாழ்த்துக்கள் சொல்வோம் தட்டிக் கொடுத்து .சிறப்பான வரிகள் பகிர்வுக்கு நன்றி ஐயா .

Yaathoramani.blogspot.com said...

Manju Bashini Sampathkumar அருமையான சிந்தனை வரிகள்…

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தான் படைக்கும் கவிதையாகட்டும் கதையாகட்டும் கட்டுரையாகட்டும் தான் ப்ரசவிக்கும் குழந்தையாக நினைத்து பார்த்து வாசித்து மனம் சந்தோஷமடைவார்… படைக்குமுன் ஆயிரம் திருத்தங்கள் செய்து… பிழைகள் நீக்கி அற்புதமாக வந்துவிட்டதா என்று தன் மனம் ஒப்பியப்பின்னரே படைப்பார்…

எண்ணிக்கை அதிகம் இருந்தால் அதில் தரம் இருக்குமோ என்ற குழப்பம்… தரம் இருந்தால் எண்ணிக்கை கூடாத சோகம்.. இப்படி எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பத்தில் தவித்து.. சிந்தனைகள் உருமாறி எண்ணங்கள் பிதற்றிக்கொண்டிருக்க.. வார்த்தைகள் கோர்வையாக்க கருவைத்தேடி அலைந்து… கரு கிடைத்தால் அதை தொடர வார்த்தைகளின் உதவி அவசியமாகிறது… இரண்டுமே கிடைக்காது தாமரை நீர் இலைப்போல் ஒட்டும் ஒட்டாது…

இறுதியாக ஒருவழியாக கருவை கதையாக்கி கவிதையாக்கி எதிர் வந்து விழுகிறது அற்புதமாய் ஒன்று… அது நம்முடையது என்பதால் அதை குறைக்கூறாமல்.. பிறர் வாசித்து சரியான விமர்சனம் பதிக்கும்போது.. நிறைகளை ஏற்றுக்கொண்டு குறைகளை நேராக்கும் மனப்பக்குவத்துடன் காத்திருப்பது ஒரு சுகம்…

இங்கு பிரசவிக்கும் தாய்மனமாக படைப்பாளியின் சிந்தனைக்கு தரும் பரிட்சையாக தன் படைப்பை ஏற்றுச்சொல்லும் விமர்சனம் எப்படி இருக்குமோ என்ற சிந்தையில்…. தாய்மனமாக படைப்பாளியின் நிலையை மிக அழகாக அற்புதமாக விளக்கி இருக்கீங்க ரமணிசார்…

உண்மையான நேர்மையான படைப்பாளி விமர்சனம் தாங்குவார்… நடுநிலையான விமர்சனம் தன்னை செதுக்கும் உளியாக ஏற்றுக்கொள்வார்….

கடைசிப்பத்தி தாய்மையின் தவிப்பை மிக அற்புதமாக உவமையாகச்சொன்னவிதம் அற்புதம் ரமணிசார்.. ஹாட்ஸ் ஆஃப்…

வெற்றிவேல் said...

கவிதையின் குறை பிரசவத்தை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்.... தாய்மையின் தவிப்பை அழகாய் கூறியுள்ளீர்கள்...

கலக்கல்...

இளமதி said...

அருமையான நல்ல கருத்தினை மிக நல்ல உவமையொடு பகிர்ந்தீர்கள் ஐயா!
வாழ்த்துக்கள்!

பால கணேஷ் said...

பிரமிக்க வைத்தது கருப்பொருளும், தாங்கள் கையாண்ட நடையும். அசத்தல் ரமணி ஸார்!

கவியாழி said...

தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? என்ன உங்களுக்கே தடுமாற்றமா? சரியான நியாயமான பகிர்வு

”தளிர் சுரேஷ்” said...

பொருள் ததும்பும் கவிதை! குறைபிரசவம் சில சமயம் நிகழ்ந்து நீங்கள் சொன்ன தவிப்பு எனக்கும் ஏற்பட்டதுண்டு! அருமையான உவமைகளுடன் சிறப்பான படைப்பு! நன்றி!

Seeni said...

ayyaaa...!
nallaa irukku...

antha thodarin mudivu....!?

சாந்தி மாரியப்பன் said...

எப்படிப்பிறந்திருந்தாலும் குழந்தை குழந்தைதானே..

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

உண்மைக் கவிமனம் ஓதும் எழுத்துக்கள்
தண்மை அளித்துத் தழைப்பன! - வன்மை
உடையன! தீதை உடைப்பன! காக்கும்
படையன நல்கும் பயன்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அய்யா அருமை

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கே தத்தளிப்புன்னா நாங்கெல்லாம் எங்கே குரு ? பொருள் மிக்க கவிதை...!

RajalakshmiParamasivam said...

கவிதையாய் எழுதித் தள்ளும் ரமணி சாருக்கே கலக்கமா?

தி.தமிழ் இளங்கோ said...

// விலக்கவும் திறனற்று
ஏற்கவும் மனமின்றி
தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம் //

” காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு “ - எழுதித் தள்ளிய ஒரு பக்கக் கவிதைகளை இன்றும் பாதுகாப்பாய் வைத்திருப்பவர்கள் அநேகர்.

மாதேவி said...

"தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? "

உயிர்புள்ள கவியாக பிறந்தாலும் அதுவும் குறைபிரசவம்போல் தோன்றும் கவிஞர்களுக்கு.

டிபிஆர்.ஜோசப் said...

கடைசி வரி மிகவும் அருமை. இன்றுதான் முதல் முறையாக இங்கு வருகிறேன். இனியும் வரவேண்டும் என தூண்டுகிறது உங்களுடைய பல பதிவுகள். வாழ்த்துக்க்ள்.

கோமதி அரசு said...

தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? "
//

ஒரு கவிதையை நன்றாக வடிக்க வேண்டும் என்று நினைக்கும்
போதும் முன்பு எழுதிய கவிதையை தூக்கி எறிய மனம் வாராத தாய் மனம் கொண்டவர்கள் கவிஞர்கள்.
அதை அழகாய் கவிதை வடித்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதை தாய் நிச்சயம் எப்படி இருப்பினும் ஏற்றுக் கொள்வாள். தாய்க்கு நல்ல குழந்தையும் ஒன்றுதான் குறையுடைய குழந்தையும் ஒன்றுதான்.
இருந்தா போதிலும் தாயை சங்கடப் படுத்தப் படுத்தாமல் இருப்பது தனயனின் கடமை. மிக அழகாக சொல்லி விட்டீர்கள்
இது மிகச் சிறந்த கவிதை இதைக் கண்டு கவித்தாய் மகிழவே செய்வாள்

கீதமஞ்சரி said...

பிண்டமானாலும் பிள்ளையானாலும் பிரசவ வேதனை ஒன்றுதான் அந்த தாய்க்கு. ஒரு தாயின் மனநிலையில் கவிஞனை வைத்து அவன் தடுமாற்றத்தைக் கவியாக்கிய விதம் மனந்தொட்டது. பாராட்டுகள் ரமணி சார்.

அருணா செல்வம் said...

குறைப்பிரசவம் நிறைவைத் தந்தது இரமணி ஐயா.

Unknown said...

குழந்தை எப்படி இருந்தாலும் தாயின் பாசம் மாறுமோ, கவிதை குறை பிரசவமாக இருந்தாலும் படைத்தவன் வெறுப்பானோ ?!

Post a Comment