Wednesday, October 23, 2013

சராசரித்தனத்தின் சிறப்பு

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும் தொண்டனுக்கும்
இடைப்பட்ட அல்லக்கைகள் போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
கீறிவிட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கும்
வெகுஜனம் தரும் மரியாதைக்குப்
பங்கமும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணி ஓரத்துப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை

மௌனங் காத்தலே
அறியாமைக்கு உற்றதிரையென
ஒதுங்கியே  நட்புகொள்ளும் வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளை அறிய ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

43 comments:

ஸ்ரீராம். said...

பட்டிமன்ற நடுவர் போல....!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சராசரி கவிஞனாய் நானும் இதை முன்மொழிகிறேன்....

முனைவர் இரா.குணசீலன் said...

சராசரிகளைச் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை.

த.ம. 5

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை... உண்மை என்றே தோன்றவும் செய்கிறது ஐயா...

கோமதி அரசு said...

நீங்கள் எப்படி எல்லாம் யோசித்து இயல்பாய் கவிதை எழுதுகிறீர்கள்!
அருமை..

இராஜராஜேஸ்வரி said...

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

அனுபவ மொழிகள் அல்லவா..அருமை..!

கவியாழி said...

உங்கள் எழுத்திலும் புலமை ஒளிர்கிறது

சக்தி கல்வி மையம் said...

சரியான சிந்தனை..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வெகு அருமை ரமணி ஐயா! உண்மைதான்..

Unknown said...

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

முப்போதும் சிந்தனையோ -நாளும்
முரண்பட்டு வந்தனையோ
ஒப்பேதும் இல்லையே -இரமணி
உரைத்திட எல்லையே!

கே. பி. ஜனா... said...

// மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது//
உண்மை!(ஆயினும் உங்கள் இந்தப் படைப்பு சராசரிக்கு மிகவும் மேலே! உங்களின் பல கவிதைகளைப் போலவே...

Seeni said...

arumaingayyaa...!

Yarlpavanan said...


தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்.
சராசரிப் படைப்பாளியாக இருப்பது
நல்லது தான் - ஆனால்
நடுநிலையாக இருப்பது
மிகவும் நன்று!

வை.கோபாலகிருஷ்ணன் said...

சராசரித்தனத்தின் சிறப்பு பற்றியும், அதிலுள்ள செளகர்யம் + கூடுதல் சந்தோஷங்கள் பற்றியும், சராசரிக்கு மிகவும் மேலேயுள்ள ஒருவரால் சொல்லப்பட்டிருப்பதில், சராசரிப் பதிவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கக்கூடும். பகிர்வுக்கு நன்றிகள்.

இளமதி said...

உண்மையைச் சொன்னீர்கள் ஐயா...
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்பதைவிட அவலாக இருந்தாலும் அது அமிர்தமே!...

வாழ்த்துக்கள் ஐயா!

MANO நாஞ்சில் மனோ said...

வெகு இயல்பாக சொல்லிட்டீங்க குரு...!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை. மலை உச்சியிலும் இல்லாது, பாதாளத்தில் அடியிலும் இல்லாது, தரையில் காலூன்றி திடமாய் நிற்பதுதான் சுகம். அருமை ஐயா நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சராசரியாய் வாழ்வதில் இவ்வளவு சவுகரியங்கள் உண்டு என்பதை உணர்த்தி விட்டீர்கள் ஐயா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த ம 12

Anonymous said...

படிப்பில் மட்டும் அல்ல வாழ்விலும் ஓர் சாராசரியாக
இருக்கும் போது மட்டுமே அதை நன்றாக அனுபவிக்க முடியும்.

Anonymous said...

படைப்பில்

உஷா அன்பரசு said...

இயல்பாயிருப்பது சௌகர்யமானதுதான்..!

Thooral said...

//சராசரி என்பதால்
கீறிவிட்டுச் சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை
//

100 % unmai
சராசரித்தனத்தின் சிறப்பு
சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
மிகவும் சௌகரியமாகத்தான் இருக்கிறது

ADHI VENKAT said...

சிறப்பான சிந்தனை....

த.ம.13

Unknown said...

நீங்களே உங்களை சராசரி என்று சொல்லிக் கொண்டால் ,நான் ஒன்றுமே இல்லைன்னு ஆயிடுவேன்...இது நியாயமா ?
த.ம 14

G.M Balasubramaniam said...

சராசரி மனதில் தோன்றுவதையே படைப்பாக்கி விட்டீர். நீங்கள் சராசரி அல்ல. வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

சாராசரி மனிதர்களைப் போல!
ரொம்பவும் உயரத்திற்கு போனால் விழுந்தால் அதோகதி! கீழேயே இருந்தால் எப்பத்தான் மேலே போவோமோ என்ற தவிப்பு! இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டு சாராசரியாக இருப்பது மேல் தான்.
இந்தக் கவிதை மூலம் நீங்கள் கவிதை உலகில் செங்கோல் செலுத்தும் கவி அரசு என்று நிரூபித்துவிட்டீர்கள், ரமணி ஸார்!
பாராட்டுக்கள்!

அருணா செல்வம் said...

எழுத்தாளர்கள் என்றுமே தராசின் நடுமுள்ளாகத் தான் இருக்க வெண்டும். அப்பொழுது தான் தராசு எந்தப்பக்கம் சாய்ந்தாலும் அதிலிருந்து கொஞ்சம் எடுத்து மற்றதை நிரப்ப முடியும்.

அதனால் நடுநிலை என்பதை நீங்கள் சராசரி என்ற அர்த்தத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அருமையான கற்பனை!
வாழ்த்தி வணங்குகிறேன் இரமணி ஐயா.

மாதேவி said...

நன்றாக எடுத்துச்சொல்கின்றது கவிதை.

”தளிர் சுரேஷ்” said...

சராசரி கவிஞர் என்றாலும் சரக்குள்ள கவிஞர் நீங்கள் என்பது உங்கள் படைப்புகளின் தரத்தில் புரிகிறது! மிக அருமையான சிந்தனை! பாராட்டுக்கள்!

பால கணேஷ் said...

சராசரியாக இருந்தாலும் சரமாரியாக அர்த்தம் பொதிந்த பதிவுகளால் அசத்துகிறவர் நீங்கள்! சராசரியாக வாழ்வதில் உள்ள சுகத்தை நீங்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! நன்று!

Iniya said...

இதை இப்படியும் சொல்வார்களோ?
சித்திரை என்று சிறுக்கவும் கூடாது
பங்குனி என்று பருக்கவும் கூடாது
எப்போதும் ஒரே மாதிரியாக நடு நிலையில் இருப்பதே சௌகரியம் தான்.
அருமையான யோசனை. பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

கதம்ப உணர்வுகள் said...

எல்லோருக்கும் பொதுவான ஒரு கருவைக்கையிலெடுத்து அதற்கு தனித்துவமாய் வர்ணமிட்டு வரிகள் அமைப்பது உங்களுடைய ஸ்பெஷாலிட்டி ரமணிசார் ”எப்போதுமே”.


இம்முறையும் அப்படியே.. எல்லோரும் ஏதோ ஒரு திறமையை தனக்குள் வளர்த்துக்கொண்டு அதன் வழியில் சிறப்பாக செயல்படத்தான் செய்கிறார்கள். வெற்றியை நோக்கியே தன் பயணம் என்றாலும் அதில் ஒவ்வொருவரும் பெறும் அனுபவங்கள் பிறருக்கு கண்டிப்பாக வழிக்காட்டியாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


சராசரி படைப்பாளியாக தன்னை உருவகப்படுத்தி வரைந்த கவிதை வரிகளில் இருக்கும் வார்த்தைகள் நடுநிலையாக செயல்படும் அற்புதத்தை சொல்லிச்செல்கிறது ரமணிசார்.

கதம்ப உணர்வுகள் said...

சராசரி என்ற வார்த்தையே எப்போதும் ஒரு மனிதனின் சிந்தனை செயல் வார்த்தை நடவடிக்கை ஒரே மாதிரி என்பதாக தான் அர்த்தம். ஆனால் இங்கே இந்த கவிதையை படித்தப்பின் நான் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

சராசரி என்றுச்சொல்லியே தினம் ஒரு கருவை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு கவிதை அசத்தலாக அமைத்து ஆழ்ந்து ஒரு கருத்தும் இருக்கும் கண்டிப்பாக.. இதிலும் அப்படியே.

எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் என்ன செய்துக்கொண்டிருந்தாலும் நடுநிலையாக செயல்படுவது தான் என் இயல்பு என்று நச் என்று சொல்லிச்செல்கிறது.

கதம்ப உணர்வுகள் said...

அதற்கு உவமையாக எடுத்துக்கொண்டவை ஆச்சர்யப்படும்படியான அருமையான விஷயங்கள்.

சராசரி படைப்பாளி…. தினம் ஒரு கவிதை… சிலது அழகைச்சொல்லி, சிலது நிகழ்வைச்சொல்லி, சிலது சமூகச்சிந்தனையைச்சொல்லி, சிலது காதலைச்சொல்லி, சிலது அறிவுரையைச்சொல்லி, சிலது மாற்றங்களை உடுத்தி… இப்படி நிறையச்சொல்லிக்கொண்டே செல்லலாம் ரமணிசார் உங்க கவிதைகளை ஆய்வுக்கென எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அவர்களுக்கு கிடைக்கும் நிறைய விஷயங்கள் பயனுள்ளவையாக பிரமாதமனாதாகவே இருக்கும்.

அரசியலில் உச்சாணிக்கொம்பாய் ஆட்சி செய்துக்கொண்டிருப்போரையும் அல்லாது எதிர்க்கட்சியாக இருந்துக்கொண்டு ஆட்சியில் நடக்கும் சங்கடங்களை மட்டுமே சுட்டிக்காட்டும் தன்மையாக இல்லாது நடுநிலையாக இருப்பது எத்தனை உத்தமம்… இயலமுடியாததை இருத்திக்காண்பிப்பது தான் சாதனை. அப்படிப்பார்க்கும்போது இந்த சராசரி படைப்பாளியின் சாதனை அற்புதம் தானே?

தனித்துவமாயும் ஜனரஞ்சகமாயும் கலந்து நடுநிலையாக தைரியமாக இருப்பதை இருப்பதாகவேச்சொல்லும் சராசரி மனோநிலை அசத்தல் தானே?

கதம்ப உணர்வுகள் said...

எல்லாம் எனக்குத்தெரியும் என்றுச்சொல்லி அறிவுஜீவியாக திரியாமல், வெறுமனே திரிந்துக்கொண்டிருந்தால் தான் பிரச்சனை இல்லையே.. தனக்கு தெரிந்த அளவு ம்க்கும் வேறு யாருக்கும் தெரியவில்லை என்று மட்டம் தட்டும் மனோபாவம் இல்லாமல் இருப்பது அற்புதமான சராசரி நிலை தானே?

ஐயோ தன்னால் இது இயலவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையுடன் குறுகாமல் தலையில் கிரீடம் வைத்தது தலை குனிந்தால் எங்கே விழுந்துவிடுமோ என்பது போன்ற சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸோடு அலையும் நிலையும் அல்லாது சராசரி நிலையோடு நின்ற இடத்திலேயே அழுத்தமாக தன் வரிகளை ஆணித்தரமாக பதிக்கும் சராசரி நிலை போற்றக்கூடியது தானே?

இப்படி ஒவ்வொரு உவமையையும் சொல்லி சொல்லி சாட்டையடி வரிகளாக வீசிடும் திண்மை மிக்க வரிகள் எளிமையாக இருந்தாலும் ஒரு துளி காரம் அதிகமாகவே தூவி பதிந்த வைர வரிகள் தான் ரமணிசார் இந்த கவிதை வரிகள்.

சராசரியின் நிலை சௌகர்யம் இல்லை. ஆனால் சௌகர்யப்படுத்திக்கொள்ள ஸ்திரமாக ஒரே இடத்தில் நிலையாக நிற்க எடுக்கும் பிரயத்தனம் மிக மிக மிக சிரமம். ” ஒன்னு பணக்காரனா இருந்துடலாம்டா. இல்லை ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை ஓட்டிடலாம். ஆனால் இந்த நடுத்தரவர்க்கமாக பிறந்து அல்லல்படுவது இருக்கே. அதைவிட சிரமம் எதுவுமே இல்லை “ இதே போன்று தான் சராசரியின் நிலையும்.

தன்னால் முடியாது என்று ஒதுங்கி உட்காருவதும் இல்லை. தன்னால் மட்டும் தான் முடியும் என்று மார்த்தட்டிக்கொண்டதும் இல்லை. அமைதியாக, அழகாக, தனக்கே தனக்கென்ற ஸ்தானத்தை அழுத்தமாய் பதித்துவிட்டே நகர்கிறது சராசரியின் படைப்பாளியின் வரிகள்.

ஒவ்வொரு வரியும் ரசித்து ரசித்து வாசித்தேன் ரமணிசார். இதிலும் உண்டு ஒரு ஆழ்கருத்து. இப்படியும் வாழலாம் அப்படியும் வாழலாம் எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ்வேன் என்ற வைராக்கிய வைர வரிகள் தந்த சிறப்பான கவிதைக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரமணிசார்.

இந்த சராசரி படைப்பாளியின் வரிகளை எட்ட இன்னும் ஒரு கோடி கவிதைகள் எழுதினாலும் ஹுஹும்.. என்னால் இயலாது….

கதம்ப உணர்வுகள் said...

த.ம.15

சென்னை பித்தன் said...

உலகத்தில் சராசரிகள்தான் அதிகம்!அனால் யார் சரசரி என்பதே கேள்வி?!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தி.தமிழ் இளங்கோ said...

சராசரி மனிதனாய் ச்ராசரி வாழ்க்கை நடத்துவதில் உள்ள நிம்மதியை நாசுக்காய் சொன்னீர்கள்.

அப்பாதுரை said...

பிரமாதம்.

Matangi Mawley said...

"ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச் சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை" ---- Brilliant! My interpretation of this poetry is that- on their quest to become the "extraordinary"- most become victims of the cliché that's "extraordinary"- that is- what is being portrayed as "extraordinary".. Under such a situation- being ordinary- makes one truly extraordinary... Brilliant thought!!

Post a Comment