Wednesday, March 18, 2015

சீர்மிகு கவிகள் செய்ய.......

சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்

15 comments:

Unknown said...

நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்

உண்மைதான் இரமணி! ஆமாம்! எங்கே ? நீண்டநாள் காணோம்! நலமா!

திண்டுக்கல் தனபாலன் said...

நச்சென அமைந்து விட்டது ஐயா... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நான் கேட்க நினைத்தது புலவர் ஐயாவே கேட்டு விட்டார்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

என்ன வரிகள் ஐயா... கவிதையின் ஒவ்வொரு வரியும் நயம் மிக்கவை.சொல்லிய விதமும் முடித்த விதமும் நன்று... த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சசிகலா said...

தவழ்ந்திடும் குழந்தை போல... ஆஹா இதைவிட அருமையாக வேறென்ன சொல்ல முடியும்.

RAMA RAVI (RAMVI) said...

//தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்//
முயற்சி செய்தால் முடியாதது இல்லை.. மிக அருமை..

கோமதி அரசு said...

தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்//

அருமையான கருத்தை சொல்லும் கவிதை, வாழ்த்துக்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.!

நலமா? நல்லதோர் கருத்தைச்சொல்லும் ஆற்றலுடன் படைக்கப்பட்ட கவிதை.. சிறந்த கற்பானாசக்தி...

\\தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்//

முயற்சித்தலின் தத்துவத்தை, அழகாய் விளக்கிச் செல்லும் வரிகளுடன் ௬டிய கவிதை. இதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே....

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.


யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமை! அருமை!
ஆற்றொழுக்குப் போல் அழகு தமிழ்க் கவிதை!

G.M Balasubramaniam said...

ரமணி ஐயா வணக்கம்/
மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்/ வாசமில்லா மலர்களும் ஈர்க்கும் என்றும் ஒரு எண்ணம். எந்தக் கருவும் இல்லாமல் பல கவிதைகளை சந்திக்கவும் செய்கிறோம் பேஷ் பேஷ் எனப் புகழாரம் சூட்டவும் செய்கிறோம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சந்தக் கவிதைகளுக்கு ஒரு காந்த சக்தி உண்டு.அது இந்தக் கவிதையிலும் தெரிகிறது

தி.தமிழ் இளங்கோ said...

முன்புபோல என்னால் கவிதை எழுதிட முடியவில்லை. நீங்கள் சொல்வது போல நாளும் நான் தொடர்ந்து முயலுகின்றேன்.
த.ம.9

yathavan64@gmail.com said...


அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!

இன்றைய...
வலைச் சரத்திற்கு,

தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!

வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!

நட்புடன்,
புதுவை வேலு

வை.கோபாலகிருஷ்ணன் said...

சீர்மிகு கவிகள் செய்ய...... என்ற தலைப்பினில் அனைவருக்கும் பாடம் சொல்லி நம்பிக்கையூட்டும்
ஓர் அருமையான கவிதை ....... உங்களால் மட்டுமே இப்படித்தர இயலும்.

கிளி கொஞ்சும் விதமான ஒவ்வொரு வரிகளையும் மிகவும் ரசித்துப்படித்தேன். பாராட்டுக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்//

ஆம்! என்ன அருமையான வரிகள் ! சிறப்பானக் கவிதை!

Post a Comment