Thursday, March 26, 2015

தீதும் நன்றும்...

விஞ்ஞான வளர்ச்சியின் கருணையால்
நாற்பதாண்டுகளுக்கு முந்தைய
பள்ளிக் கூட நண்பர்களைத்
தேடித் தேடிக் கண்டெடுத்தோம்

உருவ அமைப்பில் பலர்
முற்றிலும் மாறிப் போயிருந்தார்கள்
பலரை அவர்கள்
அறிமுகப் படுத்திக் கொண்டபின்தான்
அறிந்து கொள்ளவே முடிந்தது

அறிந்த பின்தான்
அவர்கள் குண இயல்பு
துளியும் மாறாதிருந்தது
அப்பட்டமாய்த் தெரிந்தது

எத்தனை நிறைவினுள்ளும்
ஒரு சிறு குறையை
மிகத் தெளிவாய்க் கண்டுவிடும் இராமசாமி

"என்னடா எங்குடா போய்ச்சு
அத்தனை சுருள் முடியும்
இப்படி வழுக்கையாய் நிற்கிறாய் " என்றான்

எத்தனைக் குறைவினுள்ளும்
ஒரு நிறைவினைக் கண்டுவிடும் முருகன்

" எப்படிடா இப்படிக் கலரானே
என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு " என்றான்

முழுதாக விசாரித்து முடிக்கையில்

குறைகண்டுபிடித்து விடும்
"இராமசாமிகள் " எல்லாம்
அனைத்து விதத்திலும்
குறையுடையவர்களாய் இருக்க

நிறைகண்டு மகிழும்
"முருகன்கள் " எல்லாம்
எல்லாவகையிலும்
நிறைவுடைவர்களாய் இருக்க

காலம் எதையும் எவரையும்
மாற்றிப் போவதில்லையென்பதையும்
இருப்பதைத்தான் கூட்டித்தான் போகிறதென்பதையும்

விதி இருப்பதற்கு மாறாக எதையும்
மாற்றித் தருவதில்லையென்பதையும்
பார்ப்பதைத்தான் பரிசளித்துப் போகிறதென்பதையும்

உறுதி செய்து போனது

ஆம்
தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லையென்பதை
மீண்டும்
அழுத்திச் சொல்லிப் போனது

15 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! இந்த விஞ்ஞான வளர்ச்சி பலரையும் கண்டெடுக்க உதவினாலும், குணங்கள் மாறுவது மனம் பக்குவம் அடைவது அவரவர் கையில்தானே! மனிதன் வளர்ந்து பக்குவம் அடைய விரும்புவதில்லை வயது ஏறினாலும். சுருக்கமாக மனிதன் வளர விரும்புவதில்லை! அருமையான வரிகள்!

bandhu said...

ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். people never change !

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

நல்ல கருத்தாடல் மிக்க வரிகள் சொல்லியது உண்மைதான் ஐயா..
பகிர்வுக்கு நன்றித.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

koilpillai said...

ஆழமான கருத்துரைக்கும் அழகான பதிவு.

கோ

தனிமரம் said...

அருமையான கவிதை ஐயா. இன்னும் நட்பு வாழும் இப்படியான சினேகம் இருக்கும் வரை.

திண்டுக்கல் தனபாலன் said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா - உணரத்தான் நாளாகும்...

கீதமஞ்சரி said...

\\காலம் எதையும் எவரையும்
மாற்றிப் போவதில்லையென்பதையும்
இருப்பதைத்தான் கூட்டித்தான் போகிறதென்பதையும்

விதி இருப்பதற்கு மாறாக எதையும்
மாற்றித் தருவதில்லையென்பதையும்
பார்ப்பதைத்தான் பரிசளித்துப் போகிறதென்பதையும்
உறுதி செய்து போனது\\

மிக நேரிய அலசல்... உணர்ந்தாலும் எத்தனைப் பேரால் இவ்வளவு துல்லியமாக வரையறுக்க இயலும்? அருமை ரமணி சார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தத்தை மிகவும் யதார்த்தமாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள பொதுவாக யாருக்கும் மனம் வராது. (எனக்கும் சேர்த்து)

kingraj said...

மிகமிக உண்மை அய்யா.

MANO நாஞ்சில் மனோ said...

மனதை தொடும் வரிகள் குரு...!

G.M Balasubramaniam said...

என் பழைய நட்புகள் வலையுலகில் உலா வருவதில்லை என நினைக்கிறேன். என்னையும் யாராவது தேடுகிறார்களா என்பதும் தெரியவில்லை. நாள் ஆக ஆக குணம் மாறுவதில்லையா.சந்தேகம்தான்

RAMA RAVI (RAMVI) said...

ஆம்.தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை -உண்மை. மிக அருமை சார்..

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான கருத்தை எளிமையாக உணர்த்திவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

கவியாழி said...

எல்லா சந்திப்புமே இனிமையாக இருந்திருக்குமே

வை.கோபாலகிருஷ்ணன் said...

நிறைகண்டு மகிழும் "முருகன்கள் " எல்லாம்
எல்லாவகையிலும் நிறைவுடைவர்களாய் இருக்க//

தீதும் நன்றும் பிறர் தர வாரா ....
எவ்வளவு உண்மை!

அழகான பகிர்வுக்கு நன்றிகள்.

Post a Comment