Friday, March 27, 2015

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
வழித்  தடங்கள்
ஏதும ற்ற வெளிதனில்
என்னை விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை

திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்

உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை
என்னைப் புரிந்து கொள்

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை

வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்

உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டுத்  தழும்பாகட்டும்

விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை

விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு

குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே

என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்
நகர்ந்து எனக்கு வழிவிடு

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

ஒரு தொண்டனாய்
ஒரு பூசாரியாய்
 ஒரு புத்தப்  பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது

ஒரு தலைவனாய்
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்

என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

////விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை///
எவ்வளவு எளிமையாய்
மிகப் பெரிய உண்மையை
விளக்கியுள்ளீர்கள்
நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

// விழுந்தாலும் எழப் பழகு //

அருமை ஐயா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

கருத்த மிக்க வரிகள்...சொல்வது உண்மைதான்... படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

என்னை நானே அறிய விடாமல் யார் தடுக்கிறார்கள்.

Yaathoramani.blogspot.com said...


G.M Balasubramaniam said...
என்னை நானே அறிய விடாமல் யார் தடுக்கிறார்கள்.

வேறு யார் ?
நம் மீது அதிக அன்பும்
அக்கறையும் கொண்டவர்கள்தான்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விழுந்தாலும் எழப்பழகு என்பதானது தன்னம்பிக்கையைத் தருகிறது.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் வழிகாட்டுதல் ஓரளவுக்கு மட்டுமே வேண்டும்! தன்னைத் தானே அறிவதில் ஓர் சுவாரஸ்யம் மட்டுமல்ல அனுபவமும் பிறக்கிறது! நன்றி!

ராமலக்ஷ்மி said...

அருமை.

UmayalGayathri said...


என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு//

ஆம்..விட்டு விடாமல்...துங்குவது தான் பாதி காரணம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எத்தகைய சுவையான பழமாயினும் உரித்துக் கொடுத்தவை யெல்லாம் கசக்கவே செய்கின்றன//

:) மிகவும் அருமையான உதாரணங்களுடன் கூடிய அற்புதமான படைப்பு :)

Post a Comment