Monday, July 20, 2015

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..

அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்

எனவே....

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் ஐயா... சின்னதாக... ஆறுதலாக... ஓர் பார்வை கூட போதும்...

Unknown said...

உங்களின் லேசான கருணைப் பார்வை நீண்ட நாட்களுக்கு பின் இன்று என் தளத்தில் விழுந்து இருப்பதே மகிழ்ச்சியை தருகிறதே !நானும் ,நீங்கள் சொன்ன லேசான கருணைப் பார்வையை மற்றவர்கள் மேல் திருப்பலாம் என்று இருக்கிறேன் !

கோமதி அரசு said...

நீங்கள் கவிதையில் சொன்னது உண்மை. கவிதை அருமை.

புன்சிரிப்பு , கைகளை ஆதரவாய் பிடித்து, எப்படி இருக்கிறீர்கள் நலமா? என்று கேட்டாலே போதும்.அப்புறம் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டாலே போதும் மகிழ்வார்கள்.
திருமூலரும் யாவருக்கும் ஒரு இன்னுரை என்கிறார்.

சசிகலா said...

நாம் செய்யும் அசட்டைத்தனத்த அசாத்தியமாக சொல்லிச்சென்ற விதம் சிறப்புங்க ஐயா.

UmayalGayathri said...

ஆம். ஒரு சிறு ஆறுதல் அவர்களுக்கு பெரும் பலத்தை சேர்க்கும்.
தம +1

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் பதிவை மீண்டும் படித்ததும், இயேசு கிறிஸ்து சொல்லிய ” வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள்
உங்களுக்கு இளைப்பாற என்னிடம் இடம் உள்ளது ” – என்ற வார்த்தைதான் நினைவுக்கு வந்தது. உங்களது நல்ல எண்ணத்திற்கு இறைவன் அருள் புரிவானாக.

த.ம.7

G.M Balasubramaniam said...

அன்பு செலுத்தப் பணம் தேவையில்லை. கருணை காட்டக் காசு தேவையில்லை. ஆனால் உதாசீனம் வலி ஏற்படுத்தும்

Thulasidharan V Thillaiakathu said...

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய லேசான கருணைப் பார்வை
நம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு// ஆம் பெரிய மேஜிக்கையே நிகழ்த்திவிடும் ஆங்கே..அவர்களிடம் ...பலத்தைக் கொடுக்கும்...அழகான கருத்து!

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான கருத்தை சொன்னீர்கள்! நம் சிறு ஆறுதலான பேச்சு பெரும் மாற்றத்தையே நிகழ்த்தக் கூடிய வாய்ப்பு இருக்கிறது! அருமை! நன்றி!

வெட்டிப்பேச்சு said...

பிரமாதம். மிக அற்புதமான கவிதை.

ஒவ்வொருவருக்குள்ளேயும் இப்படி ஒரு நிலை இருக்கத்தான் செய்கிறது. அது நம்மால் அச்சு ஒடிந்து போன வண்டியாக மாறக்கூடாதுதான். அதனினும் அவனது சோகங்களுக்கு நமது பார்வையே ஒரு தோளைக் கொடுக்கும் செயலாக, நுகத்தடி சுமக்க விழையும் ஆவினமாக ஒரு ஆறுதலைக் கொடுக்கும்.

மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

God Bless You

Athisaya said...

வணக்கம் ஐயா.அல்லலுற்று அவதியாய் வரும் நேரத்தில் நம்மை நோக்கி வரும் சிறு முகம் சுழிப்பும் மலையளவு அதையம் விட பாரமானது என்பதை நன்களிவேன்.நன்றி இப்பதிவிற்காய்.

சிலசமயங்களில் ஒரே ஒரு கட்டிக்தழுவல் கூட தற்கொலையை தடுக்குமளவிற்கு வல்லமைகொண்டது

Post a Comment