Friday, July 24, 2015

யதார்த்தவாதி-பொதுஜனவிரோதி.

தகவிலர்கள் எல்லாம்
தக்கார்களாகியிருந்த
அந்நாளில் ஒரு நாள்
நான் அந்தக் கோவிலில் இருந்தேன்

ஆண்டவருக்கும் அர்ச்சகருக்கும்
இடைப்பட்ட ஒருஅதிகாரப்பதவியில்
இருப்பதான மமதையோடு
தக்கார் இருக்கையில்
இருந்தார்  அந்தத் தகவிலர்

அன்றைய சிறப்புப் பூஜையின்
பிரசாதத் தட்டுடன்
பணிவுடன் நின்றிருந்தார் அர்ச்சகர்

தொண்டையைச் சரிசெய்தவாறே
தகவிலர் இப்படி சொல்லத் துவங்கினார்
" நான் பாண்டி கோவிலுக்குத்தான்
தக்காருக்கு முயற்சி செய்தேன்
அது கிடைத்திருந்தால்
இப்போது தேங்காய் பழம் இருக்கும் தட்டில்
வேறு இருந்திருக்கும்" என்றார்

பதட்டமான அர்ச்சகர்
"அபச்சாரம் அபச்சாரம்
இது சிவ ஸ்தலம்
நீங்கள் அப்படியெல்லாம்
சொல்லக் கூடாது " என்றார்

தகவிலர் தொடர்ந்தார்
"சாமி என்ன தேங்காய் பழம் தான் கேட்டதா
உங்களுக்கு அது தேவை
அதனால்தான் அதைப் படைக்கிறீர்கள்" என்றார்

"இது காலம் காலமாக உள்ளது
பெரியவர்கள் உண்டாக்கி வைத்தது
காரணம் ஏதும் இல்லாமல் இருக்காது"
கொஞ்சம் பம்மியபடிப் பேசினார் அர்ச்சகர்

இருவரின் பேச்சினையும்
கேட்கக் கேட்கக்
எனக்கு எரிச்சல் கூடிக்கொண்டேபோனது
நானாக அவர்கள் எதிர்போய் நின்றேன்
நேராக விஷயத்திற்கும் வந்தேன்

"சாமிக்கு படைக்கும் பொருட்கள்
புனிதமானவைகளாக இருக்க வேண்டும்
எச்சல் படுத்தியதாக இருக்கக் கூடாது
தின்று போட்ட கொட்டையிலிருந்து
வேறு பழங்கள் விளையக் கூடும்

தேங்காயும் வாழையும்
அப்படி வளர வழி இல்லை
எனவே புனிதம் கெட வழி இல்லை

எனவே இவைகளை முன்னோர்கள்
படையல் பொருட்களாகி  இருக்கக் கூடும் " என்றேன்

இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள
நான் தொடர்ந்து சொன்னேன்
"தேங்காய் வாழைக்கு மட்டும்
சீஸன் என்பது இல்லை
மற்ற பழங்கள் காய்கள் எனில்
குறிப்பிட்ட சீஸன்களில்தான் விளையும்

நாமும்
குறிப்பிட்ட சீஸன்களில்தான்
சாமி கும்பிட இயலும் " என்றேன்

இருவரும் மீண்டும் ஏனோ
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

நான் அர்ச்சகரைப் பார்த்துச் சொன்னேன்
"காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல
காரணம் சொல்லத் தெரியாத பல
நல்ல காரியங்கள் கூட
மூடச் செயல்கள் போலத் தோன்றக் காரணம்
தங்களைப் போல
தங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத
ஒப்புக்கு வேலை செய்யும்
அசடுகளால்தான் " என்றேன்
அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்

பின் தக்காராயிருந்த தகவிலரைப் பார்த்து
இப்படிச் சொன்னேன்
"இது நம்பிக்கையை விளைவிக்கிற இடம்
உங்களுக்கு  நம்பிக்கையற்ற
பல விஷயங்கள் இங்கு இருக்கலாம்
உங்களது நம்பிக்கை கூட
சரியானதாக இருக்கலாம்

ஆயினும்
உங்களுக்கான இடம் இது இல்லை
இது நம்புகிறவர்களுக்கான இடம்"என்றேன்
அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்

இது நடந்து பல நாட்கள்
அந்தக் கோவில் போனேன்
தக்கார் என்னைக் கண்டதும்
வேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்
அர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை

நானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை
யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....

18 comments:

ஸ்ரீராம். said...

உண்மை, உண்மை.

கோவணம் கட்டும் ஊரில் வேட்டி கட்டுபவர்கள் பைத்தியக்காரர்கள் என்பார்களே அது போல!

KILLERGEE Devakottai said...

Mutrilum Unmai

வெங்கட் நாகராஜ் said...

யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....

உண்மை..... படைத்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது!

த.ம. 3

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....
உண்மைதான்...

த.ம.4

Seeni said...

நல்ல பதில்...

நல்ல பகிர்வு

G.M Balasubramaniam said...

தக்காராயிருந்த தகவலரை யாரும் கட்டாயப் படுத்தவில்லையே. விருப்பமில்லாமலிருந்தால் போயிருக்கலாம் தேங்காய் பழம் படைப்பதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் லாஜிகல்.

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாகவே சொன்னீர்கள். சிலருக்கு என்ன சொன்னாலும் புரியாது; நல்லது சொன்னவனையே எதிரியாக நினைக்கும் காலம் இது.
த.ம.5

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்ததை அருமையாகக் கூறினீர்கள்.

UmayalGayathri said...

நல்லா போய் சொன்னீங்க...ஆனாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள். யதார்த்தவாதிகள் விரோதிகள் தான் சரியாச் சொன்னீங்க ஐயா. நன்றி
தம +1

ஊமைக்கனவுகள் said...

வணக்கம்.

தக்காராய் எண்ணும் தகவிலார், தங்களைப் போன்ற அறிவின் மிக்கார் வாய்மொழி கேட்டேனும், திருந்தினால் நன்மையே.

தேங்காய் வாழை குறித்த செய்திகள் புதியது.

அறிந்தேன்.

நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

தேங்காய் - வாழைக்கான விளக்கம் அருமை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

Unknown said...

பொதுஜன விரோதி மட்டுமல்ல ,வெகுஜன விரோதியாவும் ஆகிவிடக்கூடும் :)

Thulasidharan V Thillaiakathu said...

உண்மை உண்மை உண்மை!!! அருமையான விளக்கங்கள்! தேங்காய், வாழைப்பழம்...மட்டுமல்ல இருவருக்கும் சொல்லிய கருத்துகளும்!!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மைதான் நல்லவன் யார் கெட்டவன் யார் என்று தெரியாத காலம் ஐயா. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

ப.கந்தசாமி said...

//கோவணம் கட்டும் ஊரில் வேட்டி கட்டுபவர்கள் பைத்தியக்காரர்கள்//

சரியான பழமொழி = நிர்வாணபுரியில் கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன்.

கரந்தை ஜெயக்குமார் said...

யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....

உண்மை ஐயா
உண்மை
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

100% உண்மை...

கோமதி அரசு said...

உண்மையை சொல்லும் கவிதை அருமை.

Post a Comment