Tuesday, July 28, 2015

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து
நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்

கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்

வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே
 நினைவூட்டிப்போகின்றன

மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தானோ  ? "
என்றாள் துணைவி

"குழம்பு எப்படிக்  கவிதையாகும் ? "
என்றேன் குழப்பத்துடன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும்
கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப்
படைக்கும் குழம்பு - கவிதை

நாங்கள் பிறர்
ருசிக்கச் செய்யும்
கவிதை- குழம்பு" என்றாள்

12 comments:

ஸ்ரீராம். said...

ருசித்து ரசித்தேன்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கவிதைக் குழம்பு நன்று.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை ஐயா
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்... அருமை ஐயா...

Thulasidharan V Thillaiakathu said...

அட! குழம்பும் கவிதையானதோ! ருசித்தோம்! ரசித்தோம்!

Unknown said...

குழம்பு கவிதை ருசியோ ருசி :)

Yarlpavanan said...

இல்லாள் குழம்பு வைத்த வேளை
உப்பு, புளி, காரம் சேர்த்தாலும்
கண்ணுக்குத் தெரியாது போனாலும்
நாம் உண்ணும் வேளை
நாவுக்குச் சுவையே! - அது போல
நாம் புனையும் கவிதையிலே
வேண்டியன சேர்த்தாலும்
சமமாய், அளவாய் சேர்த்தால்
சுவையான கவிதை தான் - அதை
படிக்கும் சுவைஞருக்கும் நிறைவு தான்!

”தளிர் சுரேஷ்” said...

நல்ல ஓப்பீடு! அருமை! வாழ்த்துக்கள்!

Jayakumar Chandrasekaran said...

கவிதையிலே குழம்பையும்
குழம்பிலே கவிதையும்
கண்டோரே
குழம்புக்கு சோறு வேண்டும்
கவிதைக்கு?

--
Jayakumar

G.M Balasubramaniam said...

படித்ததுதான் மீண்டும் படித்து ரசித்தேன்

Nagendra Bharathi said...

கவிதைக் குழம்பு ருசித்தது

கவியாழி said...

பெண்கள் படைப்பாளிகள் என்பதில் சந்தேகமிில்லை

Post a Comment