Sunday, May 22, 2016

வாழ்க "குடி" அரசு வாழ்க "குடி" மக்கள்

புரட்சித் தலைவியின்
மக்களால் நான் மக்களுக்காக நான்"
என்னும் பிரச்சாரத்தின் உறுதி
நம்மை உருக வைத்துவிட்டது

வாக்குக் காணிக்கைகளை
வரையின்றிச் செலுத்திவிட்டோம்

இப்போது
வாக்குறுதியை நிறைவேற்றும்
நிலையில் அவர்கள்
பெறும் நிலையில் நாம்

நிதிப்பெருக்கமின்றி
இது எப்படிச் சாத்தியம் ?

நம்மால் ஆன அரசை
நமக்கான அரசைத்
தவிக்க விடலாமா?

அரசுக்காக நாம்
நம்மாலானதைச்
செய்யவேண்டாமா ?

இனி
சாவு வீடுகளில்
சந்தோஷ தருணங்களில்
குடித்து மகிழ்வோர்
வார இறுதியிலும் முயல்வோம்

"வார இறுதிக்காரர் "
இனி தினம் குடிக்க முயல்வோம்

இப்படியே
கட்டிங் விடுத்து குவாட்டராய்
குவாட்டர் ஆஃப்பாய்
ஆஃப் ஃபுல்லாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கூட்ட முயல்வோம்

நிதித் தேவை முடிந்ததும்
அரசும்
"படிப்படியாய்"
செய்ய வேண்டியதைச் செய்யும்

நாமும்
சக்தியுள்ளோர்
 "படிப்படியாய்"
சம நிலை அடைவோம்

சக்தியற்றோர்
"படிப்படியாய்  "
சவ நிலை அடைவோம் 

ஆம்
மே 23 முதல்

"மக்களால் நான்
மக்களுக்கான நான்" என்பதை
அவர்கள் செயல்படுத்தத் துவங்க

நாமும்
நம்மால் அரசு
அரசுக்காக நாம் " என்பதை
நிரூபிக்கத் துவங்குவோம்

வாழ்க "குடி" அரசு
வாழ்க "குடி" மக்கள்

7 comments:

Anonymous said...

வேதனை.. எந்த சிறப்பான செயல்களும் செய்யாமல் மீண்டும் வந்து என்ன பயன்? ஒரு முறையாவது உண்மையாக வெறும் வாய் கூச்சல் இல்லாமல் மக்களுக்காக ஆட்சி நடத்தினால் பரவாயில்லை. மீண்டும் கடைசி மாநிலமாகவே வைத்திருக்க முடிவு செய்யாமல் இருக்க வேண்டும்.

ப.கந்தசாமி said...

வாழ்க, வாழ்கவே.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துவோம்

Yaathoramani.blogspot.com said...

Anonymous //

அதாவது பின்னிருந்துப் பார்க்க
முதலாவது
பாஸிடிவ் திங்கிங்
(வயித்தெரிச்சலுடன் )

Anonymous said...

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.

என்பார் பொய்யா மொழியார்.

ரோமாபுரியில் ரோமனைப்போல் இரு
என்று ஒரு சொலவடை யும் உண்டு.

ஆழியைக் கடைந்து எடுத்த அமுதத்தில் தங்களுக்கு அல்லது தாங்கள் பெரிதாகப் போற்றுபவருக்கு பங்கு இல்லை. மெய்தான.
தங்களுக்கு களிப்பு இல்லை. இருக்காது. உங்களுடைய உள் உணர்வுகள் அனுபவங்கள் சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் அதற்கு
இடம் தராது இருக்கலாம்.

ஆயினும் வெறுப்பு தோன்றிட , அதன் காரணமாய் விரக்தி தோன்றிட நேரம் இன்னும் ஆகிவிட வில்லையே ?

கிஷ்கிந்தா காண்டத்திலே, ஒரு நிகழ்வு .
வாலியைக் கொன்றபின், சுக்ரீவன் ஆட்சி பீடத்தில் அமர, அவன் தனக்கு கொடுத்த வாக்கினை உடனடியாக நிறைவேற்ற வில்லையே என்ற எண்ணம் ராமன் மனதிலே தோன்றுகிறது.
மழைக் காலமோ விட்ட பாடில்லை. சீதையைத் தேடும் பணியில் இப்போது வானர சைனியங்களை அனுப்பினால் அவை இருக்குமே தவிர நினைத்த இலக்கு நோக்கி செல்ல இயலாது.
இருப்பினும் ராமனுக்கு வரும் துயரும், துயரினால் விளையும் கோபமும் , கோபத்தினால் உருவாகும் மதிச் சலனமும் கம்பன் எழுத்திலே ஒரு முறை படித்துப் பாருங்கள். அவன் தன இளையோனுக்கு விடுக்கும் ஆணையை பாருங்கள்.

ஐம்பது வருடங்களாக ஐந்து தலைமுறையைக் கெடுத்த குடியை
ஐந்தே நாட்களில் இல்லை ஐந்தே நொடிகளில் ஒழிப்பது சாத்தியமா?

ஒன்று, உடனே அதைச் செய்யத்தான் வேண்டும் என்று நினைத்திருந்தால் மக்கள் அன்பின் பால் மனம் கொண்டு மணி அடித்திருப்பார்கள் .
சாவு மணி அடித்திருப்பார்கள்.
இரு தீரா விடங்களுக்குமே.
இல்லையே.

எது எது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கவேண்டுமோ
அது அது அப்ப அப்ப அப்படி அப்படி நடக்கத்தான் நடக்கும்.

இது அவன் சுட்டிய வழி. நியதி.

பொறுத்தார் பூமி ஆள்வார் .

சினம் காக்க.

சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற் கோடாமை சான்றோர்க்கணி.

”தளிர் சுரேஷ்” said...

நல்லது நடக்கும் என்று நம்புவோம்!

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் முழுவதும் மூடிவிடுவார்கள் என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கப் போகிறது - இலவசங்கள் நிற்கும் வரை.

Post a Comment