Monday, May 30, 2016

நீயும் கவியில் மன்னர் தானே

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நீயும் 
கவியில்  மன்னர் தானே

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்குக் காணும் காட்சி எல்லாம் கவிதைதான் ஐயா
அருமை

வைசாலி செல்வம் said...

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்..அருமையான வரிகள் ஐயா.இரசித்தேன் ஐயா.நன்றிகள்.

கீதமஞ்சரி said...

ரசனையும் கற்பனையும் இருந்தால் கவிபுனையத் தடையேதும் இல்லை.. சரளமாய் அருவியெனக் கொட்டும் வரிகள்.. ரசித்தேன். பாராட்டுகள் ரமணி சார்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உதாரணங்களுடன் அற்புத கவி படைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் ஐயா!

G.M Balasubramaniam said...

ரசித்தேன்

KILLERGEE Devakottai said...

கவிதையை மிகவும் ரசித்தேன் கவிஞரே
தமிழ் மணம் 2

Unknown said...

உயிரோட்டமான கவிதை இரமணி! ஆற்றொழுக்காக சொற்கள் அடுக்கி வந்துள்ளன!

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தோம் மிக வும். கற்பனை விரிந்துவிட்டால் கவிதைப் பறவை சிறகை விரித்து வானில் பறந்திடும்தான்!!!

வெங்கட் நாகராஜ் said...

கண்ணில் காணும் காட்சி அனைத்தும் கவிதை.....

சிறப்பான பகிர்வு ஜி!

Post a Comment