Tuesday, May 31, 2016

கறிக்கடை வாசல் ஆடு

வாகனம் விட்டு இறங்கியதும்
சப்தமாய் கதறியபடி
வீட்டிக்குள் ஓடுபவர்கள்...

வாகனம் விட்டு இறங்கியதும்
வாசலில் அமர்ந்திருப்பவர்களிடம்
விசாரித்துவிட்டுப் பின்
சாவதானமாய் உள் நுழைபவர்கள்

அடுத்து ஆகவேண்டியதைக்
கவனிக்கும் முகத்தான்
ஆட்களை மௌனமாய் ஏவியபடி
அலைந்து கொண்டிருப்பவர்கள்
.......................................
..............................................

துக்கம் விசாரித்த பின்
அந்த வீட்டு வாசலில் அமர்ந்து
இவை அனைத்தையும்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

சாவுக்கும் எனக்கும் சம்பந்தம்
இல்லாதவனைப் போலவும்

சாவு வீட்டுக்கு மட்டும்
சம்பந்தப்பட்டவனைப் போலவும்...

எல்லாம் முடிந்துத்
திரும்பும் வழியில்
ஒரு கறிக்கடை வாசலில்
கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது

குடல் கேட்டபடியும்
சுவரொட்டிக் கேட்டபடியும்
மூளைக் கேட்டபடியும்....

அந்தக் கறிக் கடை வாசலில்
கட்டப்பட்டிருந்த ஆடு
இவை அனைத்தையும்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது

கறிக்கும் தனக்கும் சம்பந்தம்
இல்லாததைப் போலவும்

கறிக்கடைக்கு மட்டும்தான்
சம்பந்தப்பட்டதைப் போலவும்...

9 comments:

ஸ்ரீராம். said...

"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்... அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்..."

கவியாழி said...

கடக்கும் காலச்சுவடு...விதியா? வேதனையா? பசியா?

Jayakumar Chandrasekaran said...

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

அதாவது உறங்கப்போகிறவன் உறங்கியனைப் பார்த்தது போன்று இருந்தது உங்கள் நினைப்பு. அது வெறுமை துக்கம் மகிழ்ச்சி இல்லாதது.

--
Jayakumar


G.M Balasubramaniam said...

எதிலும் பட்டும் படாமலிருப்பதே புத்திசாலித்தனம் கறிக்கடை ஆடு புத்திசாலியா?

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

பட்டும் படாமலும் இல்லை
வெட்டு நமக்கும்தான்
எனபதை உணராமலும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆட்டின் நிலையும் நம் நிலையும் ஒன்றுதான்.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல உவமை நயத்தோடு ஓர் வாழ்க்கைப் பாடம்! அருமை ஐயா!

KILLERGEE Devakottai said...

உவமை அருமை கவிஞரே
தமிழ் மணம் 4

Post a Comment