Thursday, May 19, 2016

தேர்தல்--ஒரு நுணுக்கப்பார்வை

செத்தவனுக்கு ஜாதகம் பார்ப்பதும்
தோற்றதற்குக் காரணம் பார்ப்பதும்
எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பது
நிஜம்தான் ஆயினும் கூட.

சில சந்தேக மரணங்களுக்கு உடல் பரிசோதனை
பல சந்தேகங்களை தீர்க்கும் என்கிற வகையிலும்
அடுத்து அதுபோல் நேராமல் இருக்க வழிவகுக்கும்
என்கிற வகையிலும் இந்த தேர்தல் முடிவுகள்
குறித்து கொஞ்சம் நுணுக்கமாகப் பார்க்கையில்
ஒரு விஷயம் புரிந்தது

குழந்தைக்கு வான வேடிக்கை காட்டுவது போல்
காட்டி நைஸாக சங்கிலியை லவட்டுகிற
மாதிரி, பீ டீம் என மக்கள் நலக் கூட்டணியைச்
சொல்லி அது ஓட்டைப் பிரிப்பதற்காகவே
ஏற்படுத்தப்பட்டக் கூட்டணி என எல்லோரும்
பிரச்சாரம் செய்து கொண்டிருக்க , நாமும்
அனைவரும் நம்பிக் கொண்டிருக்க,

உண்மையாகவே  புதிதாகச் சேர்க்கப்பட்ட
வாக்காளர்கள் மத்தியில் அவர்களைக்
குழப்பும் நோக்கில், அந்த  வாக்காளர்களே
மிகச் சிறிய எண்ணிக்கையாயினும்
முடிவு மாறக்  காரணமாய் இருப்பார்கள்
என்கிற வகையில்

எல்லா கட்சிகளும் மோசம்
புதிய சிந்தனை புதிய பாதை
என்கிற சாக்கில் மிகச் சாதுர்யமாக
சீமான் அவர்களை வைத்து ஆளும் கட்சி
செய்த திருவிளையாடலே  திராவிட
முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெறாமல்
போனதற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை

ஏனெனில் புதிதாக இணைக்கப்பட்ட
இளம் வயதினர் நிச்சயமாக அ.இ.அ.தி.மு.க விற்கு
ஓட்டளிக்க வாய்ப்பே இல்லை

விஜயகாந்தும்.வை.கோ அவர்களும் மீம்சில்
பட்டபாடு அவர்கள் மீது அவர்களுக்கு
பூரண நம்பிக்கையில்லை என்பதையே
தெளிவாக்க காட்டியது

அதை விடுத்தால் அவர்களுக்கு
ஸ்டாலின் அவர்களே நம்பிக்கையூட்டக் கூடியவாராய்
இருந்தார் ( கலைஞர் நிச்சயம்  இல்லை
அன்புமணி அவர்கள் அந்த ஓட்டைக் கவரவே
நடை உடை பாவனைகளில் அதிகம் முயன்றாலும்
பா.மா.க மீது பூசப்பட்டிருக்கும் ஜாதிச் சாயம்
அவர்களை ஒட்ட விடவில்லை )

யாரும் மிகக் கவனம் கொள்ளாத அந்தப்
பகுதியை மிகக் கவனமாகக் கையாளும் விதமாக
ஆளும் கட்சி செய்த திருவிளையாடலே
நாம்தமிழர் கட்சியின் தனித்த போட்டி

அவர்கள் கணக்கு சரியாக வந்தது
என்பதற்கு கீழ்க்குறித்த தேர்தல் முடிவுகளே
அத்தாட்சி )

மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்
திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்பிழந்த
கீழ்க்குறித்த தொகுதிகளில் நான் தமிழர் கட்சிப்
பெற்ற வாக்குகள் இருந்தாலே தி. மு. க
வென்றிருக்கும்

1 ) ஆவடி 2 )பெரம்பூர் 3 )விருகம்பக்கம்

4 )திருப்போரூர் 5)கிணத்துக்கடவு 6 )கரூர்

7 )காட்டுமன்னார் கோவில் 8 )பேராவூரணி

9 )கோவில்பட்டி 10 )ஒட்ட்டப்பிடாரம்

11 )தென்காசி  (காங் ) 12 )ராதாபுரம் 13 ) சிவகாசி

இன்னும் கொஞ்சம் கவனமாகக் கணித்தால்

13 )மதுரவாயல்  14 )மொடக்குறிச்சி

15 ) சிதம்பரம்

உண்மையாக பழம் தின்னவர் தமிழரின்
தன்மான வுணர்வினைத் தட்டி எழுப்புவதாக
நாடகம் போட்ட சீமான் தான்

கொட்டையைத் தின்னவர்கள் தான்
பாவம் மக்கள் நலக் கூட்டணியினர்

(அலசல் தொடரும் )

17 comments:

Anonymous said...

நாம் தமிழர் கட்சிக்கு வோட் அளித்தவர்கள் , அந்தக் கட்சி நிர்கவில்லைஎன்றால், எப்படி தி.மு.கே. வுக்கு வோட் அளித்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள் ?
எனக்குப் புரியவில்லை. மேலும் விளக்கம் தேவை.
பல்வேறு கால கட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் நிலைபாடுகள் என்ன?
அந்த கால கட்டத்தில் தி.மு.க வின் நிலைப்பாடு என்ன ? இவற்றையெல்லாம் அந்த கட்சியின் தொண்டர்கள் நினைத்துப்பாராமலா ஒட் அளிப்பார்கள் .?

அப்படிப் பார்த்தால், நோட்டா வுக்கு வாக்கு அளித்திருந்த அந்த வோட்டுக்களையும் கூட்டி பார்க்கலாமே !!
இந்த தேர்தலில் அன்பு மணி ஒருவர் தான் கவனத்தை ஈர்ந்தார் . அவர் துவங்கிய மதுவிலக்கு போராட்டம் மட்டுமே பெரிய கட்சிகளைத் தமது நிலை என்ன என சொல்ல வைத்தது. இருந்தாலும் அந்த கட்சியின் பழைய செயல்பாடுகள் எல்லா மக்களையும் ஈர்க்க இயலவில்லை. தாம் வெற்றி பெற்றால் எப்படி செயல்படுவோம் என்று சொல்லிய செயற்திட்டம் வேறு எந்த கட்சியும் ஒரு விஞ்ஞான ரீதியில் அளிக்க இயலவில்லை. மற்றவர்கள் தந்தது வெறும் வாய்ச்சொல்.


தேர்தல் முடிந்து விட்டது. கூட்டல், கழித்தல், பெருக்கல் வகுத்தல் எல்லாமே நொந்தவருக்கு ஆறுதல் சொல்ல த்தான் பயன் படும்.

வகுத்தான் வகுத்த வகை அல்லான் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.



Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

நோடோவுக்குப் போட்டவர்கள் இந்தத்
தேர்தல் வேட்பாளர்கள் அனைவ்ரின் மீதும்
நம்பிக்கை யற்றவர்கள்

இருவருக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு
என நினைக்கிறேன்

அடுத்த பதிவில் விரிவாக

வாழ்த்துக்களுடன்,,,

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல அலசல் ஐயா. தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

நுணுக்கமான அலசல்! திமுக நிறுத்திய வேட்பாளர்களும் அழகிரியின் உள்ளடி வேலைகளும் கூட அவர்கள் வெற்றியை இழந்தமைக்கு காரணங்களாக சொல்லலாம். நன்றி ஐயா!

G.M Balasubramaniam said...

நாம் தமிழர் கட்சியா அப்படி ஒரு கட்சி தேர்தலில் நின்றதா கூட்டணியில் இருந்ததா . பொதுவாக அதிமுக வுக்கு இருந்த ஆதரவு இருந்தது எதிர்ப்பவரின் வாக்குகள் பிரிந்தன என்பதே சரிபோலத் தெரிகிறது முரளிதரனின் நோட்டா ஓட்டுகள் பற்றிய பதிவினைப் படித்தீர்களாநோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் தங்கள் கடமையினின்றும் பொறுப்பிலிருந்தும் மீறியவர்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

ஜி எம் பி ஐயா அவர்கள் சொல்வதை ஏற்கிறேன்
நோட்டாவுக்க வாக்களித்தவர்கள்
தங்களின் கடமையில்இருந்து விலகியவர்களே ஆவார்கள்
தமிழகம் முழுக்க 5 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு
கொடுமை
தம +1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தொடக்க வரிகள் அட்டகாசம்.வாக்கு சாவடி வரை சென்று நோட்டா போட்டு பல வாக்குகள் வீணடிக்கப் பட்டுவிட்டன

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தொடக்க வரிகள் அட்டகாசம்.வாக்கு சாவடி வரை சென்று நோட்டா போட்டு பல வாக்குகள் வீணடிக்கப் பட்டுவிட்டன

ஸ்ரீமலையப்பன் said...

நோட்டா பல இடங்களின் வேட்டா

Avargal Unmaigal said...

நல்லதொரு அலசல் இதைபற்றி பலரும் யோசிக்கவில்லை நான் உள்பட

Anonymous said...

//நோட்டாவுக்க வாக்களித்தவர்கள்
தங்களின் கடமையில்இருந்து விலகியவர்களே ஆவார்கள்//

வோட் போடுவது ஒன்று தான் ஜன நாயக கடமை.
யாருக்காவது ஓட் போட்டுத் தான் ஆக வெண்டும் என்று சொன்னால்,
வாக்காளர்களை நிர்ப்பந்தம் செய்வது போல் தான் இருக்கும்.

இது குறித்து பல் வேறு கோணங்களில் சிந்தனைகள், கருத்துக்கள், விவாதங்கள் இருந்தாலும், ஒன்று சொல்லவேண்டும்,

இன்று தேர்தல் களத்திலே நிற்பவர் பலர் மேலே கிரிமினல் குற்றங்கள் இருக்கின்றன. நியாயமான வழியில் பணம் சம்பாதித்து இருக்க முடியாத பலர் கோடீஸ்வரர்கள் இருக்கிரார்கள். செயித்தபின்னே தொகுதியைப் பற்றி சிறிதும் கவலைப் படாத பலர் இருக்கின்றனர். தொகுதி பக்கமே வராத, ஏன் ? சட்ட சபைக்கே வராத, வந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசாத பலர் இருக்கின்றார்கள். இவர்களை கட்சிகள் ஏன் நிறுத்திகின்றன என்றால், இவர்களிடம் ஜெயிக்கக்கொடிய சக்தி, திறன், யூகம், வியூகம் அதிகம் இருக்கிறது என்பதே.


இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு போட்டுத் தான் ஆகவேண்டும் என்று சொல்வது !!

நோட்டா விதியின் காரனமே தேர்தல் கட்சிகள் காலப்போக்கில் மனம் திருந்தி வாக்காளர் ஒப்புக்கொள்ளகூடிய மக்களை நிறுத்த வேண்டும் என்பதே .

இந்த தேர்தலில் 5 லட்சம் மக்கள் நோட்டா வுக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள் என்றால்,

அந்த ஐந்து லட்சம், சில கட்சிகள் வாங்கிய வோட் எண்ணிக்கையை விட அதிகம் என்று சொன்னால்,சற்றே சிந்தித்து பாருங்கள்.

நான் எந்தக் கட்சியைச் சார்ந்தவனும் அல்ல.

எனினும்,

நான் காமராஜ், கக்கன், காலத்தைச் சேர்ந்தவன். ஜீவா வை வாயார புகழ்ந்தவன். நல்லகண்ணு என்று ஒருவர் இன்னமும் இருக்கிறார் என்று பெருமைப் படுபவன்.

அரசியலில் அறம் புறம் தள்ளப்பட்ட பின்னே,
நோட்டா இல்லாமல் எப்படி இருக்கும் ? .



Yaathoramani.blogspot.com said...

விரிவான ஆக்கப்பூர்வமான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

இடையில் ஒரு பின்னூட்டம் கொஞ்சம்
தரம் தாழ்ந்து இருந்தது. அழித்துவிட்டேன்
(தங்களதா எனத் தெரிய வில்லை ஆனால்
இதைப் போல் முகமற்று இருந்தது )

நானும் கே.பிஜானகியம்மாள் , பி ஆர்
காலத்திலிருந்து தொடர்ந்து இயக்க
நடவடிக்கைகளில், தொழிற்சங்க நடவடிக்கைகளில்
இருந்தவன்தான்.. அனுபவத்தின் அடிப்படையில்
சில கருத்துக்களை முன் வைக்கிறோம்
இதுதான் மிகச் சரி எனச் சொல்வதில்லை

இதை மறுத்து ஆக்கப்பூர்வமான
சரியான கருத்து வரும் என எதிர்பார்த்துதான்
பதிவுகள் எழுதுகிறோம்.

தற்கொலை செய்து கொண்டு உண்மையை
நிரூபிக்க முயல்வதற்கும் நோட்டாவுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை என்பது
என் கருத்து. விரிவாக எழுத உத்தேசம்

வாழ்த்துக்களுடன்...

Anonymous said...

இடையில் ஒரு பின்னூட்டம் கொஞ்சம்
தரம் தாழ்ந்து இருந்தது. அழித்துவிட்டேன்
correct.
(தங்களதா எனத் தெரிய வில்லை ஆனால்
இதைப் போல் முகமற்று இருந்தது )//
this anony has a good face.
incidentally, u mention about PR...?
u mean P Ramamurthy ?
where do you find such people nowadays?
Incidentally , u belonged to the orgn where Mohan Kumaramangalam was the President in 1960s ?
My Goodness !
1.

Venkat said...
This comment has been removed by the author.
S.Venkatachalapathy said...

தேர்தல் என்பது ஒரு மிகப்பெரிய சூதாட்டக் களமாகத் தென்படுகிறது.

புதிதாக ஒருவர் நல்லதே நினைப்பவராகினும் இந்தப் போட்டிகளில் பங்கு பெறமுடியுமா?

ஓட்டுப் போட்டவர்கள் எதற்காக ஓட்டுப் போட்டார்கள் என்று பார்த்தால் அநேகம் பேர் தம் சுயநலத்திற்காகப் போட்டிருக்கிறார்கள்.

ஆசை சுயநலம் என்று வந்துவிட்டால் இப்படித்தான் இருக்கும். இந்த அமைப்பிலே வெற்றி பெற்ற யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என்று ஏங்கியே தமிழனின் வாழ்வு முடிந்துவிடும் போல் இருக்கிறது.

இப்பொழுது இருக்கும் விதிமுறைகள், மக்களின் மனப்பாங்கு எதுவுமே நல்ல ஆட்சி அமைய சாதகமாக இல்லை. இந்தத் தேர்தலை சந்தித்த யாருமே நல்ல ஆட்சி கொடுக்க முடியாதவர்கள். ஆதற்காக நான் நோட்டவையும் ஆதரிக்கவில்லை.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு அலசல்.....

சிவகுமாரன் said...

நல்ல அலசல் .

//நோட்டாவுக்க வாக்களித்தவர்கள்
தங்களின் கடமையில்இருந்து விலகியவர்களே ஆவார்கள்//

வன்மையாக் கண்டிக்கிறேன். எனக்கு எல்லா வேட்பாளர்களும் அயோக்கியர்களாக தெரியும் போது எப்படி யாராவது ஒருத்தருக்கு ஓட்டு போடுவேன்.? நோட்டா என்று ஒன்றை அறிமுகப்படுத்தி , அதற்கு மதிப்பு இல்லாமல் ஆக்கியது, ஏமாற்று வேலை. அரசியல் சாணக்கியர்களும் தேர்தல் கமிஷனும் சேர்ந்து செய்த சதி.

Post a Comment