Saturday, February 4, 2017

பல்லவிக் கிடைத்தப் புலவன் போல.....

பல்லவிக்  கிடைத்தப்  புலவன் போலப்
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்தப்  பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்டக்  கணத்தில் நானும்
கவிஞன்  ஆகிறேன்

நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனமும்  கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய்ச்  சுரக்குதே

உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே

பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும்  நிகராமோ

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உன் நினைவு ஒன்றே போதும் என்று மனதும் சொல்லுதே- உன் நினைவும் கனவும் கலந்த நிலையில் சொர்க்கம் தெரியுதே//

//உன் மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு இவைகள் ஈடாமோ//

இதுபோன்ற தித்திக்கும் வரிகளுடன், மனதைத் திக்குமுக்காட வைக்கும் அழகான கவிதைக்குப் பாராட்டுகள்.

Nagendra Bharathi said...

அருமை

Massy spl France. said...

அற்புதமான கவிதை.

சுவையான தமிழில் இளம் வார்த்தைகள் துள்ளி குதித்து நெளிந்து வளைந்து உணர்வுகளை பதமாக அணைத்து மனதில் இனிப்பு கொட்டுகிறது.

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

சிவகுமாரன் said...

ஆகா ரமணி சார்.
சொக்க வைக்கும் கவிதை.

இராய செல்லப்பா said...

அது சரி, மடி தரும் சுகம் போல் இன்னொன்றில்லை என்று தெரிந்துகொண்டேன்!..அழகான கவிதை.
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

G.M Balasubramaniam said...

வார்த்தைகள் அருவிபோல் வந்து விழுகின்றன ரசித்தேன்

Post a Comment