Thursday, June 15, 2017

திரிசங்கு நரகத்தில்....

செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது

வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது

எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்

ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்

 பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி  ஏங்கியே தேய்கிறது

கௌசிக  மனம் தானே  படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று  வாழ்ந்தே சாகிறது

12 comments:

Rajeevan Ramalingam said...

மத்திமரின் அவலம் குறித்த இன்னொரு படைப்பு - ஐயாவிடம் இருந்து..!

உங்கள் ஆதங்கம் நியாயமே ஐயா..!!

KILLERGEE Devakottai said...

மத்தியில் நிற்பவர் நிலைப்பாடு அந்தோ பரிதாபம்
த.ம.

முற்றும் அறிந்த அதிரா said...

//பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது//

உண்மையான விளக்கம்.. அருமை.

Unknown said...

மத்திமர் நிலையே உத்தமம் ,மிகவும் மோசமில்லை :)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம+1

Kasthuri Rengan said...

மத்திமர் மனநிலை .. படம்பிடித்த விதம் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரிசங்கு நரகத்தில்....

தலைப்புத் தேர்வு மிக அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சொல்லியுள்ள சொற்கள் யாவும் மிகவும் சிந்திக்க வைப்பவை.

வறுமையில் இருப்போர் செல்வம் அடையவும்

செல்வம் உள்ளோர் தான தர்மங்கள் செய்யவும்

நடுவில் இருப்போர் நசுங்காமல் இருக்கவும்

அனைவரும் பிரார்த்தித்து நரகம் இல்லாமல் சொர்க்கத்தை அடைய நாளும் முயற்சிப்போம்.

பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

கோமதி அரசு said...

//பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது//

மேலேயும் போகமுடியாமல், கீழேயும் இறங்க முடியாமல் மத்திமர் நிலை திரிசங்கு நிலைதான்.
அருமையான கவிதை.

G.M Balasubramaniam said...

வாழ்வின் நியதிகளைச் சொல்லிப்போகும் விதம் நன்று வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// வாழ்வின் நியதியை நாம் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்? வேறு வழியில்லையே?

ஆன்மீக மணம் வீசும் said...

உண்மை தான்.

செல்வந்தர் போல் அனுபவிக்கவும் முடியாமல், வறியவர் போல் இப்படி ஒரு அனுபவம் இருப்பதும் அறியாமல் இருக்க மத்திமரால் முடியத்தான் முடியாது.

எளிமையான சொற்கள்
அருமையான கருத்து.

Post a Comment