Tuesday, June 20, 2017

எந்த அரசும் விசித்திர பூதங்களே...

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்று இருப்பின்
 அவைகள்  விசித்திர பூதங்கள் தானே

.குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தத்  தெரிந்த அவைகளுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரியாதிருக்கிறதெனில் 

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவைகளுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரியாதிருக்கிறதெனில் 

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லையெனில்

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவைகளுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூடத் துளியுமில்லையெனில்

எதிர்ப்பாளர்களை மிகச் சரியாகக்  கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய
ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 மூளையும் காதுகளும் அற்ற
இந்தக் கொடிய பூதங்கள்
நிச்சயம் விசித்திர பூதங்கள்  தானே

நாம் இப்படிப்   பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை
இதுவும் நிச்சயம் தானே 

13 comments:

ஸ்ரீராம். said...

ஆதாயத்துடன் பாதிக்கிணறு மட்டும் தாண்டுகிறார்கள் அரசியல்வாதிகள்!

TM +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் ஆதங்கம் நியாயமானது.

சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வு.

விரைவில் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்லதொரு நிரந்தர ஆட்சி மலர வேண்டும்.

KILLERGEE Devakottai said...

அரசியல்வாதிகளை குறை சொல்லி பயனில்லை இனியாவது மக்கள் மனங்களில் மாற்றம் காண வேண்டும்
த.ம.2

Unknown said...

இப்படியெல்லாம் யோசித்து திருந்தி விடக் கூடாது என்பதற்கு தானே இலவசங்களும் ,டாஸ்மாக்கும் :)

கரந்தை ஜெயக்குமார் said...

மக்கள் மாற வேண்டும்
தம +1

Kasthuri Rengan said...

ரௌத்திரம் பேசும் காத்திரக் கவிதைகள் தொடரட்டும்

Rajeevan Ramalingam said...

நாட்டு நிலைமையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளீர்கள் ஐயா... இந்த நிலைமை மாற வேண்டும். மாறும் என்று நம்புவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான். நமக்கும் பழகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. வேதனையே.

ராஜி said...

அரசியல்வாதிகள் நம் நாட்டின் அரசியல்வியாதிகளாகி ரொம்ப நாளாச்சு.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தங்களின் ஆதங்கம் தெரிகிறது மக்கள் புரட்சி வெடித்தால்தான் விடிவும் பிறக்கும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

உண்மை நிலைமையை உள்ளது உள்ளபடி சொல்கிறது கவிதை.
நல்லாட்சி நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல ஆட்சி அமைந்தால் நல்லது....

Unknown said...

ஆதங்கப் படத்தான் நம்மால் முடியும்!

Post a Comment