Sunday, February 23, 2020

புரட்சித் தலைவியே...

மகம் ஜெகம் ஆளும் என்னும்
ஆன்றோரின் வாக்கினுக்கு
ஒரு நிரூபனமாய் விளங்கிய
அற்புதமே அதிசயமே

படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்செமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரித்திருப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை                                                                                                                     வாழ்க நின் புகழ்                                                                                                                                                                           

3 comments:

G.M Balasubramaniam said...

கூடா நட்பால் கெட்டுப் போனவர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகப் பொருத்தமான புகழ்மாலை. பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பா மாலை. பாராடுகளும் வாழ்த்துகளும்.

Post a Comment