Saturday, May 16, 2020

சுகப்பிரசவம் வேண்டி...

எதிர்பாராது
நாவில் தித்திப்பாய்
ஒரு வார்த்தை
நர்த்தனமாடி
இப்போதே
என்னை அரங்கேற்று என்கும்

சட்டென
உள்மனதில்
ஓர் உணர்வு
நிர்வானமாய் நின்று
உடனடியாய்
எனக்கு ஆடை அணிவி என்கும்

திடீரென
அடிமனதில்
ஒரு இராகம்
சுயம்புவாய்த் தோன்றி
மிகச் சரியாய்
எனக்கு வடிவு  கொடு என்கும்

சில நொடியில்
இமை இடுக்கில்
ஒரு நிகழ்வு
காட்சியாய் விரிந்து
அப்படியே
என்னைக் காட்சிப் படுத்து என்கும்

வார்த்தையா
உணர்வா
இராகமா
நிகழ்வா
எது சரிவரும்
நான் குழம்பித் தவிக்கையில்

உள்ளுணர்வு
"கண்டுகொள்ளாது விட்டுவிடு
வலுவுள்ளது ஜெயிக்கட்டும்"என்கும்

வழக்கம்போல்
சுமையும் வலியும்
தாங்கும் அளவைத் தாண்டினும்
இமைமூடித்
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
சுகப்பிரசவ சுகம்வேண்டி...

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உள்ளுணர்வு சொன்னதே சரி...

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே தொடர்ந்து பிரசவிக்கட்டும் கவிதைக் குழந்தைகள்.

G.M Balasubramaniam said...

இதுதான் பிரசவ வலியோ

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களது ஒவ்வொருக் கவியும் சுகப்பிரசவம்தான்.
சுகம்தான்

ஸ்ரீராம். said...

இந்தப் பிரசவத்துக்குக் கட்டுப்பாடு தேவையில்லை!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையாக கவிதை பிறப்பதை பற்றி சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொரு வரிகளையும் மிகவும் ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

சுகப் பிரசவம் வேண்டி - சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜி.

நிர்வானமாய் - நிர்வாணமாய்? எது சரி?

Post a Comment