Sunday, May 3, 2020

அனுபவமே அறிவு


ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை

.'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை

*முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன் எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?

அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?

இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.

வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும் க்ரீன் சட்னி வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து புரோட்டின், கலோரி, விட்டமின் பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,

*'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;*
*எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி*
*பலாப் பழம் மாந்தம்*
*பச்சைப் பழம் கபம்*
*புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்* என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு? லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா,

'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

பியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

*வயிறு உப்புசமா இருக்காமாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.*

*ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.*

*'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.*

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

*பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!'*

சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க

பித்தக் கிறுகிறுப்புக்க முருங்கைக்காய் சூப்,

மூட்டு வலிக்க முடக்கத் தான் அடை,

மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,

குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,

வயசுப் பெண் சோகைக்கு கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்க வாழைத்தண்டுப் பச்சடி’

என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையு சில நேரம் மருந்துகள்;பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

வாட்சப்பிலும் முகநூலிலும் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிருங்கள.படித்ததில் பிடித்தது...                     
-

6 comments:

balu said...

இவையெல்லாம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதா என்று சொல்லி விதண்டாவாதம் செய்யும் திராவிடர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அற்ப மதிப்பெண் வாங்குவதற்காக குறள்களை படிக்க வைப்பது யார் தவறு...? குருவா...? தாய் தந்தையரா...?

G.M Balasubramaniam said...

எல்லாம் அனுபவம்தந்த அறிவு

வெங்கட் நாகராஜ் said...

அனுபவம் தந்த அறிவு - தொடர்ந்து தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டிய விஷயங்களை மறந்து போனது நம் பெரிய தவறு.

சிறப்பான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

இந்த கொரோன காலத்தில் யாரும் ஹார்லிக்ஸ் குடியுங்கள் என்றோ பூஸ்ட் குடியுங்கள் என்றோ சொல்லவே இல்லையே

G.M Balasubramaniam said...

அனுபவங்களை நாம்தானே கடத்தி இருக்க வேண்டும்

Post a Comment