Tuesday, June 30, 2020

கொரோனா கூட முகவுரையே

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
நம் உடல் நம்மை
ஆரோக்கியமாய் உலவவிடுகிறது

நாவின் போக்கில்
மனதின் இழுப்புக்கு
நாம் அந்த வரன்முறைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு நோயாக வெளிப்படுத்தி
எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம்போக்கில் தொடர்கையில்
பெரும் எரிச்சல் கொள்கிறது

அது நம்மை முடக்கி வைத்து
தன்னை சில நாட்களில்
தானே சரி செய்து கொள்கிறது..

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
இப் பிரபஞ்சமும்
வாழத்தக்கதாய் விரிந்துக் கிடக்கிறது

ஆசையின் போக்கில்
ஆணவத்திற்கு அடிபணிந்து
நாம் அந்த வரன்மு\றைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு பருவ மாறுதல்களால
பதிவு செய்து காட்டுகிறது

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம் போக்கில் தொடர்கையில்
அது மெல்லத் தன் தன்மை மாறுகிறது

அது நம்மை முற்றிலுமாக
முடக்கி வைத்து
தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது

மனச் சாட்சியை மீறி
தர்ம எல்லைகளைக் கடக்கையில்
சட்டத்தின் தலையீட்டைத் தவிர்க்க இயலாது

இயற்கை நியதிகளை மீறி
பொதுவெளி அறம் கடக்கையில்
பேரிடர்களை நிச்சயம் தவிர்க்க இயலாது

இந்தப்  பாலபாடம் அறிந்து
தெளியாத வரையில்
அழிவு என்பது தொடர்கதையே..

கொரோனா தொற்றுக் கூட
இந்தப்  பாலபாட நூலுக்கான
சுருக்கமான முகவுரையே

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்து யோசிக்கையில் இப்படித்தான் தோன்றுகிறது...

கரந்தை ஜெயக்குமார் said...

இயற்கை நியதிகளை மீறி
பொதுவெளி அறம் கடக்கையில்
பேரிடர்களை நிச்சயம் தவிர்க்க இயலாது

உண்மை
உண்மை

koilpillai said...

கருத்துக்கள் ஒவ்வொன்றும் சரியே என தோன்றுகின்றது. தங்களின் தளத்தின் பெயருக்கேற்ப, உடல் வலி வியாதிகளை, துன்பங்களை நாமேதான் தேடிப்பிடித்து அழைத்து வருகிறோம் பிறர் தருவதல்ல. அருமை..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கருத்துகள்.

kowsy said...

நமக்கு நாமே எதிரி என்று நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். இயற்கை எமக்கு கோடை அதனால் அதை பாதுகாக்க வேண்டியதும் பணிந்து நடப்பதும் எமது கடன். வழமை போல் சிந்திக்கத் தகுந்த பதிவு. சிறப்பு.

Post a Comment