Sunday, August 9, 2020

மதங்களும் மரணமும்....

 மதங்களும் மரணமும்....


பொல்லாத கோபத்துடன்

மதங்களை முறைத்துப் பார்த்தபடி

மரணம் இப்படிப் பேசத் துவங்கியது......


" என்னைக் காட்டிப் பயமுறுத்தியோ

இல்லை என் அணைப்புக்குப் பின் 

மறுமையில் கிடைக்கும்

சுகங்கள் என

அல்லது தண்டனைகள் என

மகிழ்வூட்டியோ அச்சமூட்டியோ

மனிதனிடம் மனச்சாட்சியை

உருவாக்கிக் கொடுங்கள்..

.

அதன் காரணமாய்

எப்படியோ தனிமனித ஒழுக்கமும்

சமூக ஒழுங்கும்

சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பும்

சரியானால் சரியானால் சரி

எனச் சொல்லி உங்களுக்கு 

என்னைப் பயன்படுத்திக் கொள்ளும்

அதிகாரம் அளித்திருந்தேன்.


நீங்கள் சடங்குகளும் சம்பிரதாயங்களுமே

நம்பிக்கையை ஏற்படுத்தும்

அதன் தொடர்ச்சியாய்

மதமும் வளரும்

மனச் சாட்சியும் உருவாகும் என்றீர்கள்


எதற்குச் சடங்குகள்

எதற்குச் சம்பிரதாயங்கள் என்பதைத்

தொடர்ந்து போதிக்காமையால்

காரணம் மறந்த காரியங்களாய்

அவைகள் தொடர

அதனையே பித்தலாட்டம் எனக் காரணம் சொல்லி

பகுத்தறிவு என புதுப் பூச்சாண்டிக்காட்டி

மனிதன் அனைத்தையும் பாழ்ப்படுத்திவிட்டான்

எம் நோக்கத்தையே சீர்குலைத்துவிட்டான்.


அதன் காரணமாய்

மனச்சாட்சியின் மூலம்

நிலை நிறுத்தப்பட வேண்டிய 

ஒழுக்கமும் தர்மமும் இப்போது

இப்போது சட்டத்தினாலும் தண்டனையாலும்

என்றாகிப் போனது


சமூக ஒழுக்கமும்

சுற்றுப்புறச் சூழலும்...

கேலிக் கூத்தாகிப் போனது....


ஆம் இனி நியாய மான முறையில்

சீர் செய்யவே முடியாது என்கிறபடி

நாசமாகிப் போனது..


எனவே இனியும் 

உங்களை நம்பிப் பயனில்லை

என முடிவெடுத்துவிட்டேன்


நானே களத்தில் இறங்கி

நிலைமையை கட்டுப்படுத்த

உறுதிஎடுத்துவிட்டேன்.


அதனால்.. இனி...                                          உங்கள் பிழைப்புக்கெனவே ஆகிப் போன

கோவில் குளங்கள்

மசூதிகள் தேவாலயங்கள் எல்லாம்

அடைபடும்...


பூசைகள் தொழுகைகள்

பிரார்த்தனைகள் எல்லாம்

சிலகாலம் நிறுத்தப்படும் சரியா..."

எனச் சொல்லி தலைகவிழ்ந்திருந்த

எல்லா மதங்களையும் ஒரு நோட்டம் விட்டது


யாரும் பதில் பேசவில்லை


அதில் உலகளாவிய

எனப் பெயர் கொண்ட மதம் மட்டும்

மெல்லத் தலைத் தூக்கி...

"எங்களாலேயே இத்தனை ஆண்டுகள்

முழுமூச்சாய் முயன்றும் முடியவில்லை

நீ தனியாய் எப்படி....." என

மெல்ல முனங்கியது.....


சபதம் போட்டுச் சிரித்த மரணம்

இப்படிப் பிரகடனம் செய்தது


"ஆம் தனியாகவே

நான் மட்டுமே இந்த ஆண்டில்

நான் யார் எனபதை நிரூபிக்கப் போகிறேன்


உங்களைப் போல இனி

நிலையாமைக் குறித்து

பாடம் நடத்திக் கொண்டிருக்கப் போவதில்லை

நிலையாமையை 

மனிதர்களுக்குக் கண்ணெதிரேயே காட்டப் போகிறேன்


அறிவின் ஆணவத்தில்

எதற்கும் அடங்காத மனிதனை

அடக்கிவைக்கப் போகிறேன்

வீட்டிற்குள் முடக்கிவைக்கப் போகிறேன்....


அதன் காரணமாகவே

அவனை மட்டுமல்ல

நாசமாகிக் கொண்டிருக்கும் இந்தப் பூமியையும்-

சீராக்கப் போகிறேன் " எனச் சொல்லிச்

குரூரமாய்ச் சிரித்தபடி- எங்கோ

வெறித்துப் பார்த்தது


மதங்கள் மெல்ல மெல்ல

பயம் விலக்கி

தலை நிமிர்த்தி மரணம் பார்த்த

திசையை நோக்க.....


அது சைனாவின் ஹூஹானாய் இருந்தது..


7 comments:

balu said...

அருமையான காலத்திற்கேற்ற பதிவு. சமூக ஒழுக்கம் பற்றிய அடிப்படைகளைத் தகற்பது போல் சில தீர்ப்புகள் (living together) வந்துள்ளன.

Yaathoramani.blogspot.com said...

ஆம் எதற்காக இது என யோசிக்கத் துவங்கினால் இதுபோன்ற சமூக அவலங்கள் ஒழியச் சாத்தியம்...

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு தீவிரம் ஆகியும்
இன்னும் திருந்தவில்லையே
எனும் நினைப்பும் வருகிறது...

koilpillai said...

தங்களின் கருத்து பிடித்திருக்கிறது.

G.M Balasubramaniam said...

மனிதனுக்கு மரணம் பற்றய பயம் போகிறதோ

ஸ்ரீராம். said...

கடைசி வரியை எடுத்து விடலாம் என்று தோன்றியது.  

அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

கருத்து நன்றாக இருக்கிறது.

துளசிதரன்

Post a Comment