Sunday, September 27, 2020

நிஜமாவேவா...

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

8 comments:

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே நானும் முயல்கிறேன்...

Yaathoramani.blogspot.com said...

மெட்டுக்கு மிகச் சிறப்பாகப் பாட்டெழுதும் உங்களுக்கு இது பெரிய விசயமே இல்லை..வாழ்த்துகளுடன்..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஜி.

கரந்தை ஜெயக்குமார் said...

வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

அருமை
அற்புதம் ஐயா

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந் நன்றி வெங்கட்ஜி

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கரந்தை சார்

Jayakumar Chandrasekaran said...

மடை திறந்த வெள்ளம் போல் சொற்கள் வீழ 
தடையேதும் இன்றி எழுதிய கவி கண்ணதாசன் போல் 
இடையில் குறுக்கிட ஏதும் இல்லை என்ற மகிழ்வுடன் 
படைப்பீர் பல வசன கவிதைகளை இன்புறுவோம் நாமும். 

Jayakumar

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக ஊக்கமளிக்கிறது..மனமார்ந்த நன்றி..

Post a Comment