சீர்மிகு கவிகள் செய்ய. சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்
உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்
மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்
தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்
9 comments:
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்
ஆகா...!
முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும் பதிலுரைக்கும் நல்வாழ்த்துகள்..
கவிதை கற்கிறேன் என்னும்பதிவை2011 ல் எழுதி இருந்தேன் சுட்டி http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_29.html
மீண்டும் போய் படித்து வந்தேன் உடன் என் பதிலுரையினையும்....பதிவினைத் தேடி எடுத்து இணைப்பைக் கொடுத்தமைக்கு வாழ்த்துகள்..
கவிதை மிக அருமை. கொஞ்சம் யாப்பு விதிகளைக் கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும்.
வரவுக்கும் வாழ்த்துக்கும் நல்வாழ்த்துகள்..
அருமை!
ஆஹா அருமை.
சிறப்பு. பேஸ்புக்கிலும் படித்து ரசித்தேன்.
Post a Comment