Saturday, June 26, 2021

படித்ததும் பகிரப் பிடித்தது..

 ☝️Dr. T. பெரியசாமி., M. Tech., Ph.D (IIT Madras) தெளிவான பதிவு. 


முழுமையாக படிப்பது அவசியம்.


நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??- ஒரு அலசல்

1.தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் சுமார் 28000 கோடி. அதில் 60% க்கும் மேல் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.

2. நுழைவு தேர்வு ரத்துசெய்யப்பட்ட பிறகு நீட் தேர்வு வருவதற்கு முன்னால் 2006 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரி மருத்துவ இடங்கள்(MBBS) -29925.

3. இந்த29925 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்துMBBS இடங்கள் வாங்கியவர்கள் 213. சராசரியாக ஆண்டிற்கு 19 மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானார்கள். இது 0.7% சதவிகிதத்திற்கும் குறைவானதாகும்.

4. NCERT எனப்படும் 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாடப்புத்தகத்தில் இருந்து Medical council of India (MCI) நீட் தேர்விற்க்கான syllabus ஐ வடிவமைத்துள்ளார்கள்.

5. NCERT பாடப்புத்தகங்களை CBSE அப்படியே எடுத்துக்கொண்டுள்ளார்கள். ஆந்திரா போன்ற சிலமாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றி அவர்களின் மாநில பாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோ அவ்வளவு குறைத்தார்கள்.

6. எனவே நீட் தேர்வு பாடத்திட்டம் NCERT படத்திட்டத்திலிருந்து MCI ஆல் எடுக்கப்பட்ட பாடத்திட்டமாகும். நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தில் நடத்தப்படுவதில்லை.

7. நீட் தேர்வில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அறிவாற்றல் திறனின் (Cognitive skills) முதல் மூன்று திறன்களை (Remembering, understanding and Application) சோதிக்கும் விதத்தில் இருக்கும்.

8. இந்த மூன்று திறன்கள் பள்ளிக்கல்வியில் வளர்ந்தால்தான் மீதமுள்ள திறன்களை (Analysis, synthesis and creativity) கல்லூரி கல்வியில் வளர்க்க முடியும் இந்த அறிவாற்றல் திறனின் மேல்திறன் (creativity) புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறனாகும்.

9. தமிழ்நாட்டில் Blue print எனப்படும் எந்த கேள்விக்கு எந்த பாடத்தில் எந்த பக்கத்தில் இருந்து கேள்வி கேட்க வேண்டும் என்ற தேர்வுமுறை 2017 வரை அமலில் இருந்தது. இந்த தேர்வுமுறை மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்காமல் மனப்பாடம் செய்யும் முறையை ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தது. இது கிட்டத்தட்ட தேர்விற்கு முன்னரே Question paper ஐ out செய்வதற்கு ஒப்பானதாகும். இந்த தேர்வுமுறையில் மாணவர்கள் சில பாடங்களை படிக்காமலேயே முழுமதிப்பெண் எடுக்க முடியும். இதுகூட 12ம் வகுப்பு பாடம் மட்டும்தான். 11ம் வகுப்பு பாடங்கள் 99% பள்ளிகளில் நடத்தப்படவே இல்லை.

10. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாட்டில்தான் ஆசிரியர்கள் பாடத்திட்டதை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

11. தமிழ்நாட்டின் பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2017 ம் ஆண்டுதான் மாற்றப்பட்டது. 2018ம் ஆண்டிலிருந்து Buleprint தேர்வுமுறை ஒழிக்கப்பட்டது. கேள்விகள் சிறிது அறிவாற்றல் திறனை சோதிக்கும் விதத்தில் கேட்கப்பட்டன. 2020ம் ஆண்டில் நம் மாணவர்களின் 12ம் வகுப்பு தேர்ச்சி 93%. ஆனால் அந்த 93% ல் 50% மாணவர்கள் வெறும் தேர்ச்சி மதிப்பெண்(pass mark) மற்றும்தான் பெற்றுள்ளார்கள்.

12. நீட் தேர்வானது 2013ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற தடைகளை கடந்து 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 2016ம் ஆண்டு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் நீட் மூலமாக மட்டுமே சேர்க்கை நடத்தப்படும் என்று ஒரு ஆண்டிற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வு வருவதன்முலம் இடஒதுக்கீடோ அல்லது சொந்த மாநிலத்தில் உள்ள எந்த ஒதுக்கீடும் பாதிக்கப்படாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசுகள் அவர்களின் மாநில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை வழக்கம் போல் நடத்தலாம். ஆனால் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது தமிழத்தின் அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவாகியது. இது நீட் தேர்வு வருவதற்கு முன்னிருந்த அதே நிலையாகும்.

இப்பொழுது.. சில கேள்விகள் :

1. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடத்தில் சேர முடியாமல் போனதற்கு நீட் தேர்வு மட்டும்தான் காரணமா? 28000 கோடி பணம் வெறும் 19 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேருவதற்குத்தான் உபயோகிக்கப்பட்டதா??

2. திறமைவாய்ந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் உள்ளபொழுது அவர்களை விட திறமை குறைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களால் result எப்படி கொடுக்க முடிந்தது? இது அரசின் தோல்வியா??? அரசு பள்ளி ஆசிரியர்களின் தோல்வியா???

3. வெறும் 19 மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பிற்கு சென்ற பொழுது நடைபெறாத போராட்டங்கள் நீட் தேர்வை எதிர்த்துமட்டும் நடப்பதன் காரணம் என்ன??

4. NCERT பாடத்திட்டத்தை குறைத்து.. தகுதி குறைந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் வைத்ததற்கு யார் பொறுப்பேற்பது???

5. 12 வருடங்களாக ஏன் பாடத்திட்டம் தமிழ்நாட்டில் மாற்றப்படவில்லை?? Blue print எனப்படும் மோசமான தேர்வுமுறை ஏன் மாற்றப்படவில்லை???

6. ஏன் அரசுப்பள்ளிகளின் தரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறவில்லை?? 28000 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்ட பொழுது ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை??

7. 11ம் வகுப்பு பாடத்தையே கற்று தராமல் மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்???

11ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்படாமல் போனதற்கு நாமும் நமது ஆசிரியர்களும் காரணமாக இருந்துகொண்டு நீட் தேர்வின் மேல் பழி போடுவது எவ்வகையில் நியாயம்??? அவ்வாறு கற்றுத்தரப்படாமல் போனதற்கு ஏன் இங்கு யாரும் போராடவில்லை??

இங்கு ஆசிரியர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை குறைத்துவிட்டு எங்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வந்தது என்று கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்???

8. ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும்பொழுது குறைந்தது 5 மாணவர்களின் தற்கொலை செய்தியை கடக்க நேரிடுகிறது. மிகவும் வருத்தமான விஷயம். ஆனால் நாம் மாணவர்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு மன உறுதி கொடுக்க வேண்டுமா??? அல்லது அவர்களின் தற்கொலையை காரணம் காட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டுமா??

9. அனிதாவின் மரணம் என்னை மிகவும் பதித்த ஒரு விஷயம் அந்த குழந்தையின் மரணத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தெளிவு பெறுவதற்க்காக சில விஷயங்களை நாம் இதில் விவாதிக்க வேண்டியுள்ளது.

(i) அனிதா அரசுப்பள்ளியில் படிக்கவில்லை

(ii) பெரம்பலூர் மாவட்டத்தில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்

(iii) தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் போல் அங்கும் 11ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை

(iv) 2016ம் ஆண்டே அடுத்த வருடம் நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடக்கும் என்று மத்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்த நிலையில் அதை சரியாக மாணவர்களுக்கு கொண்டு செல்லாதது யார் தவறு???

(v) அனிதாவுக்கு தவறான நம்பிக்கையை கொடுத்தது யார்?? 11ம் வகுப்பில் 50% கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 11ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் அவரால் எப்படி நீட் தேர்வில் மதிப்பெண் பெற முடியும்???

11ம் வகுப்பு பாடத்தை அவருக்கு கற்றுத்தராமல் போனதற்கு ஆசிரியர்கள் காரணமா?? அரசாங்கம் காரணமா??

(vi) நீட் 2017 தேர்விற்கு அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் மூலமாகத்தான் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தகவலை அவருக்கு உறுதியாக தெரிவிக்காதது யார் தவறு???

(vii) அந்த விண்ணப்பத்தில் நீட் தேர்வில் இப்படித்தான் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை அவருக்கு கற்றுக்கொடுக்காதது யார் தவறு??

நீட் தேர்வை எத்தனை முறை வேண்டுமென்றாலும் 25 வயதிற்குள் எழுதலாம் என்ற வாய்ப்பு உள்ள பொழுது அவருக்கு நம்பிக்கையை கொடுத்து மீண்டும் படிக்க வைக்காதது யார் தவறு??

அவரை உச்ச நீதிமன்றம் அழைத்து சென்ற செலவில் 10ல் 1 மடங்கு செலவு செய்திருந்தால் அவரை மீண்டும் படிக்க வைத்து மருத்துவராக்கி இருக்கலாமே?? அதை செய்யாதது யார் தவறு???

(viii) இப்படி அனைத்து தரப்பிலும் தவறு உள்ள பொழுது நீட் தேர்வின் மீது மட்டும் பழிபோட்டு மாணவர்களுக்கு அந்த தேர்வின் மீது வெறுப்பு வருமாறு செய்வது எந்த வகையில் நியாயம்???

10. நீட் வந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை மட்டுமே உள்ளது. நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் என்று தமிழ்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் சான்றிதழ் பொய்யாக வாங்கி வந்தால் ஒருவேளை அடுத்தமாநில மாணவர்கள் சேரலாம்.


12. இங்கு சென்ற வருட (2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாக கொடுத்துள்ளேன்.

a) மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050

b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945

(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679

(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110

(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20

(iv) பொதுப்பிரிவில் FC (Forward caste) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரை தவிர வேறு சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -1594)

d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)

e) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)

f) சென்ற வருடம் தமிழ்நாட்டில் சமூக வாரியாக பெற்ற MBBS இடங்கள்

(i) FC-136

(ii) BC-1594

(iii) MBC-720

(iv) SC/ST-600

நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமை செய்வது ஏன்? (நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன். இதை இங்கு நான் கூறாவிட்டால் என் சாதி வேறாக பார்க்கப்படும் என்பதால் குறிப்பிடுகிறேன்)



13. அடுத்த விவாதம் நீட் வந்ததால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என்பது. நீட் வருவதற்கு முன்னாலும் தனியார் பள்ளிகளில் படித்த பணக்கார மாணவர்கள்தான் சீட் வாங்கினர். நீட்டை ஒழிப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியமா??? அதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு சமூகத்தில் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடைந்து வரும் பணக்காரர்களை விடுத்தது பலனடையாத மக்களுக்கு இடஒதுக்கீடு சென்று சேருமாறு இடஒதுக்கீட்டு முறையை மாற்றவேண்டுமா??? அல்லது நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமா???



14. அடுத்ததாக நாங்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டோம். எங்கள் GER Ratio 49% உள்ளது. உத்திரபிரதேசத்தில் 20% தான் உள்ளது. எனவே எங்களுக்கெல்லாம் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்கிறார்கள் சிலர். அனைவரையும் படிக்காமலே pass செய்தால் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட பொய் செய்தியை போல் GER Ratio வில் நாம் அமெரிக்காவை கூட மீறலாம். ஆனால் பலன் என்ன??? மேலும் ஒரு தகவல் தமிழ்நாட்டில் 49% GER Ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்கள் 3.5 கோடி (total population-7cr) என்றால் உத்திரபிரதேசத்தில் 20% GER ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 கோடி (total population-23cr). நம்மை விட அதிகம் மக்கள் எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கிறார்கள். அவர்களும் நம்முடன் போட்டிக்கு வருவார்கள். எனவே யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.

15. GER Ratio பெருமை பேசுவதை விடுத்தது ஏன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 93% மாணவர்களில் 50% மாணவர்கள் ஏன் Just pass செய்தார்கள் என்று ஆராய்வது பயனளிக்குமா??? அல்லது நாங்கள் 93% pass என்று பெருமை பேசுவது பயனளிக்குமா???

இதுவரையில் நம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் என்ன குறை என்று யாராவது விவாதித்திருக்கிறோமா??? அதை மேம்படுத்தவேண்டும் என்று போராடியிருக்கிறோமா???

முதலில் நம் கல்வித்தரத்தை உயர்த்துவோம். நம் மாணவர்களுக்கு அபரிதமான ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் அவர்கள் நீட் என்ன எந்த தேர்வையும் ஊதி தள்ளிவிடுவார்கள்.

1 6. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் 50% முதலாண்டு MBBS மாணவர்கள் Human Physiology, Anatomy and Biochemistry என்ற மூன்று பாடங்களில் ஏன் தேர்ச்சி பெறவில்லை?? நீட் தேர்வு மூலம் சென்ற மாணவர்கள் 2017ம் ஆண்டிலிருந்து எப்படி 80% க்கும் மேல் அந்த மூன்று படங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்???

17. நம் கல்விமுறை மனப்பாடம் செய்யும் கல்விமுறை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது அதைவைத்து மருத்துவ மாணவர்களை தேர்தெடுப்பது சரியா???

உண்மையான கல்வியாளர்களை வைத்து ஒரு சிறந்த கல்விமுறையை கொண்டுவரவேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை அல்லவா??

நீட் தேர்வுமுறை சரியில்லை என்றால் அதில் உள்ள குறைகளை மத்திய அரசிடம் கூறி அதை மாற்றுவதும் நம் கடமை அல்லவா??

கல்வியின் தரம் சம்பந்தமாக இதுவரையில் எந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது போராளிகளோ போராட்டம் நடத்தியுள்ளார்களா??? அல்லது அதை பற்றியாவது பேசியுள்ளார்களா?? தயவுசெய்து யோசியுங்கள்!

18. நம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தி அதை சரிசெய்யும் முறைகளை என் மாணவர்களிடம் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறேன். அதுபோல் நீட் போன்ற திறனறி தேர்வுகள் ஒரு சிறந்த மருத்துவரை உருவாக்குவதில் எப்படி பங்காற்றுகின்றன என்று சில Case study களையும் மருத்துவ படிப்பு படிக்கும் என் மாணவர்கள் மூலம் செய்துள்ளேன். இந்த பதிவு மிக நீளமாக இருப்பதால் அந்தத் தகவல்களை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இந்தப் பதிவில் உள்ள அனைத்து விசயங்களும் என் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் மற்றும் மனதில் இருந்த கேள்விகள். நான் கொடுத்த எண்களில் மிகச் சிறிய தவறுகள் இருக்கலாம்.

இந்தப் பதிவு உங்களுக்கு நியாயமாகத் தெரிந்தால் மக்கள் பலரும் அறிந்துகொள்ளுமாறு அனைவருக்கும் தயவுசெய்து பகிருங்கள்.


Dr. T. பெரியசாமி., M. Tech., Ph. D(IIT Madras)


Shared by


Prof. Dr. K. B. Elango, Salem.


...

Friday, June 4, 2021

முதல் பிரசவம் ( 12 /-- )

 எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று 

"சிகரம்" இதழ்களும் முப்படை போல

மிகத் தீவீரமாய் என் பெருமையை 

பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால்

அது மிகையில்லை


1 )காலாட்படை 

என் தாயார் எங்கு சென்றாலும் மறக்காமல்

வீட்டிலிருந்த பிரதியைக் கையில் கொண்டு

சென்று விடுவாள்..

அன்று ஆங்காங்கு சந்திக்கிற எல்லோரிடம் 

பேச்சுவாக்கில் சொல்வது போல

"என் பையன் இப்போது

படிக்கிற காலத்திலேயே புத்தகத்திலும்

எழுத ஆரம்பித்துவிட்டான்" எனப் 

பெருமை அடித்து வருவாள்.


இது  நான் வெளியே செல்லுகையில் சந்திக்கிற

எல்லோரும்  இதுகுறித்து விசாரிக்கையில் தெரியும்.

உள்ளுக்குள் பெருமையாக இருந்தாலும்

அம்மாவிடம் "ஏனம்மா இப்படி பெருமை

பீத்துகிறாய்" எனக் கடிந்து கொள்வது போல்

கடிந்து கொள்வேன்.அம்மாவும் கேட்டுக்

கொள்வது போல் கேட்டுக் கொள்வாள்

ஆனால் தொடர்ந்து வெளியில் செல்லும் 

போதெல்லாம் கையில் அந்தப் புத்தகம்

இல்லாமல் செல்ல மாட்டாள்.


ஒரு நாள் மாலை தெருவைக் கடக்கையில்

எங்கள் தெருவில் குடி இருந்த தமிழ் ஐயா

இரங்கராஜன் அவர் வீட்டு வாசலில் நின்றிருந்தார்


வழக்கம்போல கொஞ்சம் குனிந்து பௌய்யமாக

வணக்கம் செலுத்தி விட்டுக் கடக்கையில்

"ஏ குட்டிக் கவிஞரே இங்கே வா.." என அழைத்தார்


என்ன சொல்லப்போகிறாரோ என நினைத்தபடி

அருகில் செல்ல என்னை திண்ணையில்

உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர்

கையில் பாரதியார் கவிதைகள் என்ற

கையடக்கப் பிரதியை கொண்டு வந்து

கையில் கொடுத்து ....

"இதை என் அன்பளிப்பாக வைத்துக் கொள்.

தொடர்ந்து படி தொடர்ந்து எழுது

தமிழில் எப்போது எந்த சந்தேகம் என்றாலும்

எந்த நேரமானாலும் என்னை வந்து கேள்.."

என உற்சாகமூட்டிப் பாராட்டினார்


இன்று குட்டி நூலகம் போல வீடு நிறைய

புத்தகங்கள் இருந்தாலும் பாடப்புத்தகங்கள்

நீங்கலாக வீட்டில் வந்த பொதுவான

முதல் புத்தகம் இதுதான்..


இன்றும் கூட அந்தப் புத்தகத்தை

ஒரு பொக்கிசம்போலப் பாதுகாத்து வருகிறேன்..


 (அடுத்து கப்பற்படை )

Thursday, June 3, 2021

முதல் பிரசவம் ( 11/-- )

 என் கவிதை தாங்கிய புத்தகத்துடன் வந்த

என்னை மகிழ்ச்சியுடன் வாழ்த்திய தோழர் வாசு

பின் அருகில் அமரச் சொல்லி

கொஞ்சம் விரிவாகவே பேசினார் 


"உண்மையில் இந்தக் கவிதையைப் படித்ததும்

செம்மலருக்கோ தீக்கதிருக்கோ அனுப்பலாம்

எனத்தான் எழுதி வாங்கினேன் 

அதன் பின் ஒரு யோசனை வந்தது


இந்த இரண்டு இதழ்களும் மதுரையில் இருந்து

வெளிவருபவை..நானும் அன்றாடம் இந்த

இதழ்களின் ஆசிரியருடன் தொடர்பில் உள்ளவன்.

அப்படியிருக்க இந்த இதழ்களில் வெளிவருமானால்

நிச்சயமாக நான் சிபாரிசு செய்யாது வெளிவந்தால் கூட

என் சிபாரிசினால்தான் வெளியிடப்பட்டிருக்கும்  

எனற எண்ணம் உங்களுக்கும் 

உங்கள்  நண்பர்களுக்கும் வரக்கூடும்.


மேலும் இந்த இரண்டு இதழ்களும் விவசாயிகள்

நெசவாளர்கள் முதலான அதிகம் வாசிப்பனுபவம்

இல்லாத தோழர்களுக்காக  அவர்களுடைய அளவில்

மொழியில்/ நடையில் இருக்கும்


உங்கள்  முதல் கவிதையே வாசிப்பனுவம் 

உள்ளவர்களிடம் சென்றால் அது நல்ல

அங்கீரமாகவும் இருக்கும்./கூடுதல் உற்சாகம்

அளிப்பதாகவும் இருக்கும் எனச் சென்னையில்

இருந்து வெளி வருகிற இந்த இதழுக்கு

எவ்வித சிபாரிசும்  இன்றி வெளியிடுவதற்கான தகுதி

இருந்தால் அவர்கள் வெளியிடட்டும் என

அனுப்பி இருந்தேன்


தகுதி இருந்திருக்கிறது..இதோ வெளிவந்திருக்கிறது"

என்றார்..


ஒரு சிறு விஷயத்தை எனக்காக எவ்வளவு

யோசித்துச் செய்திருக்கிறார் என நினைக்க

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது


உண்மையில் அவர் சொல்வது போல் 

மதுரையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த

இதழ்களில் வெளி வந்திருந்தால்

அவர் எப்படித்தான் மறுத்துச் சொன்னாலும்

அவருடைய சிபாரிசில்தான் வந்திருக்கும்

எனத்தான் நிச்சயம் நினைத்திருப்பேன்

பின் ஒவ்வொருமுறையும் யார் சிபாரிசு மூலம்

வெளியிடச் செய்யலாம் என்ற எண்ணமே

என்னுள் திண்ணமாய் வளர்ந்திருக்கும்


பின் அவரே தொடர்ந்தார்.

" இது போன்ற சிற்றிதழ்கள் பொது வெளியில்

அதிகம் கிடைக்காது.ஆர்வமுள்ளவர்கள்

சந்தாக் கட்டித் தபாலில் வாங்கிக் கொள்வார்கள்

மற்றபடி தனியாகவெனில் நம் மதுரை போன்ற\

நகரங்களில் சில குறிப்பிட்டக் கடைகளில்

சில பிரதிகள் மட்டுமே கிடைக்கும்


நம் மதுரையில் இதுபோன்ற சிற்றிதழ்கள்\

டவுன்ஹால் சாலையில் பாரதி புத்தக நிலையம் அருகில்

ஒரு சின்னப் பெட்டிக் கடையில் தான் கிடைக்கும்


நாளை நான் செல்லுகையில்

இரண்டு பிரதிகள் வாங்கி ஒன்றை

நூலகத்திலும் மற்றொன்றை நம் தோழர்களிடமும்

உங்கள்  கைப்பிரதிப் போல சுற்றுக்கு விடுகிறேன்


அது நம்மில் எழுதத் தெரிந்த சிலருக்கு

நாமும் எழுதலாமே என்கிற எண்ணம் தோன்றவும்

அதன் காரணமாக அவர்களும் எழுதலாம்தானே"

என்றார்..


பின் சொன்னதைப் போலவே மறு நாளே

இரண்டு பிரதிகள் வாங்கி வந்து ஒன்றை

நூலகத்திலும் ஒன்றை ஊரில் அவருடன்

தோழமையுடன்  தொடர்பில் இருந்த 

இளைஞர்களிடம் சுற்றுக்கு விட்டார்


இரண்டு மாதம் கழித்து இந்தச் சிறு

செயல்பாடு எனக்கு அத்தனைப் பெரிய

கௌரவத்தைத் பெற்றுத்தரும் என நான்

கனவிலும் எண்ணவில்லை..


( தொடரும் )


Wednesday, June 2, 2021

முதல் பிரசவம் (10 /--)

 நல்லதை நல்லவிதமாக துவக்கமட்டும்

செய்தால் போதும் பின் அது தன்னைத்தானே

மிகச் சரியாகத் தகவமைத்துக் கொள்ளும் 

என்பதற்கு எங்கள் முதல் கைப்பிரதியே

நல்ல உதாரணமாக இருந்தது


இரண்டு கைப்பிரதியிலும் படித்தவர்கள்

தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதற்காக

ஒதுக்கி இருந்த காலிப் பக்கத்தில்

பாராட்டுரையோடு நிறையப் பேர் நானும் 

இதில் எழுதலாமா/ நானும் உங்கள்

குழுவில் இணைந்து கொள்ளலாமா என

எழுதி இருந்தார்கள்..


(ஒருவர் மட்டும் " இளைஞர்களில்

எழுத்துக்களில் எல்லாம் ஒரே சிவப்புக் கவிச்சி

ஆனாலும் பச்சை நாற்றத்திற்கு சிவப்புக் கவிச்சி

தேவலாம்தானே " என எதிர்க்கருத்தைப்

பதிவு செய்திருந்தார்.)


அவர்களையும் நேரடியாக சந்தித்து

இணைத்துக் கொண்டதால்  கைப்பிரதிக்கான

விஷயங்கள் அதிகமாகவே கிடைக்கப் பெற்றது


நூலகர் மூலம் ஸ்டேசனரிப் பொருட்கள்

தடையின்றிக் கிடைத்ததால் பொருளாதாரப்

பிரச்சனையும் இல்லை..


பின் நாங்கள் ஆசிரியர் குழுவாக எங்களை

மாற்றிக் கொண்டு புதியவர்கள் அதிகம்

எழுதும்படியாகச் செய்தோம்..


முதல் கைப்பிரதிக்கு கொஞ்சம் 

சிரமப்பட்டதைப் போல பின்னால் நாங்கள்

சிரமமப்படவே இல்லை. 

எல்லாம் இயல்பாக எளிதாக நடந்தது


ஜூலையில் கல்லூரி திறந்துவிட்டபடியால்

நாங்களும் பிஸி ஆகிப் போனோம்


ஜுலை மாதம் ஒரு சனிக்கிழமை

கல்லூரி முடிந்து மதியம் வீடு திரும்பியதும்

என் தாயார் காலைத் தபாலில் ஏதோ

புஸ்தகம் வந்திருப்பதாகவும் அதை

சாமி ஷெல்ப்பில் வைத்திருப்பதாகவும் சொன்னார்


என்னவாக இருக்கும் என என்னால்

யூகிக்க முடியவில்லை.கல்லூரியில் இருந்து

ஏதாவது வந்திருக்கலாம் என நினைத்துக்

கையில் எடுத்தால் அது மாதந்திர சஞ்சிகைபோல

இருந்தது...


நாம் எதற்கும் சந்தா கட்டவில்லையே

பின் விலாசம் எதுவும் மாற்றிக் கொடுத்து

விட்டானா என விலாசம் பார்க்க 

விலாசம் கூட சரியாகவே இருந்தது..


அது எனக்குத்தான் என உறுதியானதும்

அதைப் பிரிக்க  "சிகரம் " எனப் பெயர்

கொண்ட பத்திரிக்கையாக இருந்தது

ஆசிரியர் செந்தில்நாதன் என இருந்தது

அதைப் பார்த்ததுமே அது முற்போக்குக் கொள்கை 

சார்ந்த புத்தகம் எனத் தெரிந்தது


சரி படித்துப் பார்ப்போம் என ஊஞ்சலில்

அமர்ந்து ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டு

வந்தேன்..


இன்குலாப் அக்னிபுத்திரன் என முற்போக்கு

எழுத்தாளர்களால் அப்போது  அதிகம்

அறியப்பட்டவர்களின் படைப்புகள் இருந்தன.

அப்படியே புரட்டிக் கொண்டே வர 

பன்னிரெண்டாம் பக்கத்தில் இடது பக்கம்

எனது பெயருடன் எனது கவிதை

பிரசுரமாகி இருந்தது..


என்னால் நம்பவே முடியவில்லை

அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அதிகமாக

ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்தி

உண்மைதானா என மீண்டும்

மீண்டும் மீண்டும் பார்த்தேன்..


உண்மைதான் என உறுதியானதும்

இது தோழர் வாசு அவர்கள் மூலம்

வெளியாகி இருக்கவே சாத்தியம் என

முடிவு செய்து அவரைப் பார்க்க உடனே

அவர் வீடு தேடி ஓடினேன்..

அவர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்...


என்னையும் கையில் புத்தகத்தையும்

பார்த்ததும் " வாங்க தோழரே

கவிஞருக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டதா

வாழ்த்துக்கள் " என்றார்.


அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத்

தெரிவித்ததும் அவர் சொன்ன இன்னொரு

விஷயம் எனக்கு இதை விடக்

கூடுதல் மகிழ்வளித்தது..


(தொடரும் )

Tuesday, June 1, 2021

முதல் பிரசவம் (9 /--)

 விமர்சன ஆர்வத்தில் தூங்க 

வெகு நேரம் ஆனதால் காலையில்

எப்போதையும் விட தாமதமாகவே 

எழ நேர்ந்ததால் நூலகம் செல்லவும்

அன்று தாமதமாகிவிட்டது


நான் உள்ளே நுழைகையில் கைப்பிரதித்

தொடர்புடையவர்கள் அனைவரும் 

நூலகரைச்சுற்றி சேரில் அமர்ந்திருந்தார்கள்..


நான் உள்ளே நுழைந்ததும் " வாங்க

கவிஞரே வாங்க வாங்க ..உங்களுக்காகத்தான்

எல்லோரும் காத்திருக்கிறோம் "

என்றதும் எனக்கு வெகு லஜ்ஜையாயிருந்தது.


என்னையும் ஒரு சேரை எடுத்து அவர்

முன்னால் உட்காரச் சொன்னார்.

நான் இதுவரைஅவர் முன்னால் அப்படி

உட்கார்ந்ததில்லை என்பதால்

 உட்காரத் தயங்கினேன்..


அதற்குள் காண்டீபனே ஒரு சேரை 

எடுத்து வந்து அவர் அருகில் போட்டு

என் தோள்பட்டையை அழுத்தி 

உட்கார வைத்தார்..


பின் நூலகர் " உண்மையில் கைப்பிரதி

மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது.

புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை

எனது கருத்தை பின் பக்கம் நானே

விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்

படித்துக் கொள்ளுங்கள் " எனக் கைப்பிரதியை

சேதுப்பாண்டியனிடம் கொடுத்தார்.


அவர் படித்து அடுத்தவரிடம் கொடுக்க

அப்படியே கைமாறி கை மாறி என் கையில்

வந்து சேர்ந்தது..அவர் அதில் அனைவரின் 

படைப்புகள் குறித்தும் சுருக்கமாக தனித்தனியாக

எழுதி இருந்தார்.


அதில் என் கவிதை குறித்து இப்படி

எழுதி இருந்தார்." அற்புதமான கவிதை

இது வரி வடிவில் வேண்டுமானால் முதல்

கவிதையாக இருக்கலாம்.மற்றபடி இயல்பாகவே

கவித்துவமிக்கவராக இல்லாத ஒருவரால்

முதல் கவிதையையே இவ்வளவு சிறப்பாக

எழுத முடியாது..வாழ்த்துக்கள்" என

எழுதி இருந்தார்.


தலையில் ஒரு பானை ஐஸ் கட்டியைக்

கொட்டியது போல் இருந்தது..


பின் நூலகர் முன் வராண்டாவில் பேப்பர்

பகுதியில் படித்துக் கொண்டிருந்த என் வயதொத்த

பையனை அழைத்து இதை உள்ளே

வார மாத இதழ்கள் இருக்கும் பகுதியில்

போடச் சொல்லிவிட்டு அவர் கணக்கில்

உடுப்பி கடையில் ஆறு கேஸரியும்

இரண்டு மிக்ஸர்  பாக்கெட்டும் வாங்கி வரச்

சொன்னார்.


எப்போதும் முக்கியஸ்தர்கள் யாரும் வந்தால்

இதுபோல் கடைக்குச் செல்பவனாக நானே

இருந்திருக்கிறேன்.இப்போது முக்கியஸ்தர்போல்

நானிருப்பதே மிகப் பெரிய கௌரவத்தை

அடைந்தது போல் இருந்தது..


பின் நூலகர் "எதிரே சுதந்திரா ஷாப்பில் எனக்கு

அக்கவுண்ட் உள்ளது.கைப் பிரதிக்கான

பேப்பர் கலர் பென்சில் எதுவானாலும்

நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்..

ஒவ்வொரு முறையும் கேட்கச் சங்கடப்படுவீர்கள்

என்பதால்தான் இந்த ஏற்பாடு

வேறு காரணமில்லை "என்றார்


நாங்கள் அவருக்கு எப்படி நன்றி சொல்வது

எனத் தெரியாமல் மலைத்து நின்றோம்


அதற்கிடையில் தோழர் நூலகரிடம்

ஒரு வெள்ளைத் தாளை வாங்கி என்னிடம் கொடுத்துஎன் கவிதையை நிறுத்தி அழகாக எழுதிகீழே என் வீட்டு விலாசத்தையும்எழுதித் தரச் சொன்னார்.


எழுதி கொடுத்து விட்டு மெல்ல

"இது எதற்கு " என்றேன்


" சும்மா பசிக்கிற போது வறுத்துத் திங்கத்தான்"

எனச் சிரித்தபடிச் சொல்லி நான்காக 

அழகாக மடித்து பையில் வைத்துக் கொண்டார்


அவர் எதற்காக வாங்கினார் என்பது

இரண்டு மாதம் கழித்து  எனக்குத் தெரிய

விக்கித்துப் போனேன்..


(தொடரும் )