நல்லதை நல்லவிதமாக துவக்கமட்டும்
செய்தால் போதும் பின் அது தன்னைத்தானே
மிகச் சரியாகத் தகவமைத்துக் கொள்ளும்
என்பதற்கு எங்கள் முதல் கைப்பிரதியே
நல்ல உதாரணமாக இருந்தது
இரண்டு கைப்பிரதியிலும் படித்தவர்கள்
தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதற்காக
ஒதுக்கி இருந்த காலிப் பக்கத்தில்
பாராட்டுரையோடு நிறையப் பேர் நானும்
இதில் எழுதலாமா/ நானும் உங்கள்
குழுவில் இணைந்து கொள்ளலாமா என
எழுதி இருந்தார்கள்..
(ஒருவர் மட்டும் " இளைஞர்களில்
எழுத்துக்களில் எல்லாம் ஒரே சிவப்புக் கவிச்சி
ஆனாலும் பச்சை நாற்றத்திற்கு சிவப்புக் கவிச்சி
தேவலாம்தானே " என எதிர்க்கருத்தைப்
பதிவு செய்திருந்தார்.)
அவர்களையும் நேரடியாக சந்தித்து
இணைத்துக் கொண்டதால் கைப்பிரதிக்கான
விஷயங்கள் அதிகமாகவே கிடைக்கப் பெற்றது
நூலகர் மூலம் ஸ்டேசனரிப் பொருட்கள்
தடையின்றிக் கிடைத்ததால் பொருளாதாரப்
பிரச்சனையும் இல்லை..
பின் நாங்கள் ஆசிரியர் குழுவாக எங்களை
மாற்றிக் கொண்டு புதியவர்கள் அதிகம்
எழுதும்படியாகச் செய்தோம்..
முதல் கைப்பிரதிக்கு கொஞ்சம்
சிரமப்பட்டதைப் போல பின்னால் நாங்கள்
சிரமமப்படவே இல்லை.
எல்லாம் இயல்பாக எளிதாக நடந்தது
ஜூலையில் கல்லூரி திறந்துவிட்டபடியால்
நாங்களும் பிஸி ஆகிப் போனோம்
ஜுலை மாதம் ஒரு சனிக்கிழமை
கல்லூரி முடிந்து மதியம் வீடு திரும்பியதும்
என் தாயார் காலைத் தபாலில் ஏதோ
புஸ்தகம் வந்திருப்பதாகவும் அதை
சாமி ஷெல்ப்பில் வைத்திருப்பதாகவும் சொன்னார்
என்னவாக இருக்கும் என என்னால்
யூகிக்க முடியவில்லை.கல்லூரியில் இருந்து
ஏதாவது வந்திருக்கலாம் என நினைத்துக்
கையில் எடுத்தால் அது மாதந்திர சஞ்சிகைபோல
இருந்தது...
நாம் எதற்கும் சந்தா கட்டவில்லையே
பின் விலாசம் எதுவும் மாற்றிக் கொடுத்து
விட்டானா என விலாசம் பார்க்க
விலாசம் கூட சரியாகவே இருந்தது..
அது எனக்குத்தான் என உறுதியானதும்
அதைப் பிரிக்க "சிகரம் " எனப் பெயர்
கொண்ட பத்திரிக்கையாக இருந்தது
ஆசிரியர் செந்தில்நாதன் என இருந்தது
அதைப் பார்த்ததுமே அது முற்போக்குக் கொள்கை
சார்ந்த புத்தகம் எனத் தெரிந்தது
சரி படித்துப் பார்ப்போம் என ஊஞ்சலில்
அமர்ந்து ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டு
வந்தேன்..
இன்குலாப் அக்னிபுத்திரன் என முற்போக்கு
எழுத்தாளர்களால் அப்போது அதிகம்
அறியப்பட்டவர்களின் படைப்புகள் இருந்தன.
அப்படியே புரட்டிக் கொண்டே வர
பன்னிரெண்டாம் பக்கத்தில் இடது பக்கம்
எனது பெயருடன் எனது கவிதை
பிரசுரமாகி இருந்தது..
என்னால் நம்பவே முடியவில்லை
அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அதிகமாக
ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்தி
உண்மைதானா என மீண்டும்
மீண்டும் மீண்டும் பார்த்தேன்..
உண்மைதான் என உறுதியானதும்
இது தோழர் வாசு அவர்கள் மூலம்
வெளியாகி இருக்கவே சாத்தியம் என
முடிவு செய்து அவரைப் பார்க்க உடனே
அவர் வீடு தேடி ஓடினேன்..
அவர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்...
என்னையும் கையில் புத்தகத்தையும்
பார்த்ததும் " வாங்க தோழரே
கவிஞருக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டதா
வாழ்த்துக்கள் " என்றார்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்ததும் அவர் சொன்ன இன்னொரு
விஷயம் எனக்கு இதை விடக்
கூடுதல் மகிழ்வளித்தது..
(தொடரும் )
5 comments:
ஆவலுடன் காத்திருக்கிறேன்...
அதி சந்தோஷ தருணங்கள்.
அருமையான அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள்! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
மிக்வும் மகிழ்வான நொடிகள். உங்கள் அனுபவங்களும் சுவாரசியமாக இருக்கின்றன.
வாழ்த்துகள் பாராட்டுகள்
கீதா
சிறப்பான அனுபவம். முதல் கவிதை/படைப்பு பத்திரிகையில் வெளியீடு - மிகவும் மகிழ்ச்சியான தருணம் தான் அது. மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
Post a Comment