Friday, June 4, 2021

முதல் பிரசவம் ( 12 /-- )

 எங்களூர் வந்து சேர்ந்திருந்த மூன்று 

"சிகரம்" இதழ்களும் முப்படை போல

மிகத் தீவீரமாய் என் பெருமையை 

பறைசாற்றிக் கொண்டிருந்தன என்றால்

அது மிகையில்லை


1 )காலாட்படை 

என் தாயார் எங்கு சென்றாலும் மறக்காமல்

வீட்டிலிருந்த பிரதியைக் கையில் கொண்டு

சென்று விடுவாள்..

அன்று ஆங்காங்கு சந்திக்கிற எல்லோரிடம் 

பேச்சுவாக்கில் சொல்வது போல

"என் பையன் இப்போது

படிக்கிற காலத்திலேயே புத்தகத்திலும்

எழுத ஆரம்பித்துவிட்டான்" எனப் 

பெருமை அடித்து வருவாள்.


இது  நான் வெளியே செல்லுகையில் சந்திக்கிற

எல்லோரும்  இதுகுறித்து விசாரிக்கையில் தெரியும்.

உள்ளுக்குள் பெருமையாக இருந்தாலும்

அம்மாவிடம் "ஏனம்மா இப்படி பெருமை

பீத்துகிறாய்" எனக் கடிந்து கொள்வது போல்

கடிந்து கொள்வேன்.அம்மாவும் கேட்டுக்

கொள்வது போல் கேட்டுக் கொள்வாள்

ஆனால் தொடர்ந்து வெளியில் செல்லும் 

போதெல்லாம் கையில் அந்தப் புத்தகம்

இல்லாமல் செல்ல மாட்டாள்.


ஒரு நாள் மாலை தெருவைக் கடக்கையில்

எங்கள் தெருவில் குடி இருந்த தமிழ் ஐயா

இரங்கராஜன் அவர் வீட்டு வாசலில் நின்றிருந்தார்


வழக்கம்போல கொஞ்சம் குனிந்து பௌய்யமாக

வணக்கம் செலுத்தி விட்டுக் கடக்கையில்

"ஏ குட்டிக் கவிஞரே இங்கே வா.." என அழைத்தார்


என்ன சொல்லப்போகிறாரோ என நினைத்தபடி

அருகில் செல்ல என்னை திண்ணையில்

உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர்

கையில் பாரதியார் கவிதைகள் என்ற

கையடக்கப் பிரதியை கொண்டு வந்து

கையில் கொடுத்து ....

"இதை என் அன்பளிப்பாக வைத்துக் கொள்.

தொடர்ந்து படி தொடர்ந்து எழுது

தமிழில் எப்போது எந்த சந்தேகம் என்றாலும்

எந்த நேரமானாலும் என்னை வந்து கேள்.."

என உற்சாகமூட்டிப் பாராட்டினார்


இன்று குட்டி நூலகம் போல வீடு நிறைய

புத்தகங்கள் இருந்தாலும் பாடப்புத்தகங்கள்

நீங்கலாக வீட்டில் வந்த பொதுவான

முதல் புத்தகம் இதுதான்..


இன்றும் கூட அந்தப் புத்தகத்தை

ஒரு பொக்கிசம்போலப் பாதுகாத்து வருகிறேன்..


 (அடுத்து கப்பற்படை )

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அம்மாவின் மகிழ்வு மிகவும் மனதை கவர்ந்தது...

Jayakumar Chandrasekaran said...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகன்
கவிஞன் என்று கண்ட தாய்!!

வெங்கட் நாகராஜ் said...

அம்மா செய்த செயல் - சிறப்பு. அம்மான்னா அம்மா தான் இல்லையா! கப்பற்படை குறித்த தகவல்களுக்குக் காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

அம்மாவின் பெருமைதான் மனதை கவர்கிறது.

Post a Comment