என் கவிதை தாங்கிய புத்தகத்துடன் வந்த
என்னை மகிழ்ச்சியுடன் வாழ்த்திய தோழர் வாசு
பின் அருகில் அமரச் சொல்லி
கொஞ்சம் விரிவாகவே பேசினார்
"உண்மையில் இந்தக் கவிதையைப் படித்ததும்
செம்மலருக்கோ தீக்கதிருக்கோ அனுப்பலாம்
எனத்தான் எழுதி வாங்கினேன்
அதன் பின் ஒரு யோசனை வந்தது
இந்த இரண்டு இதழ்களும் மதுரையில் இருந்து
வெளிவருபவை..நானும் அன்றாடம் இந்த
இதழ்களின் ஆசிரியருடன் தொடர்பில் உள்ளவன்.
அப்படியிருக்க இந்த இதழ்களில் வெளிவருமானால்
நிச்சயமாக நான் சிபாரிசு செய்யாது வெளிவந்தால் கூட
என் சிபாரிசினால்தான் வெளியிடப்பட்டிருக்கும்
எனற எண்ணம் உங்களுக்கும்
உங்கள் நண்பர்களுக்கும் வரக்கூடும்.
மேலும் இந்த இரண்டு இதழ்களும் விவசாயிகள்
நெசவாளர்கள் முதலான அதிகம் வாசிப்பனுபவம்
இல்லாத தோழர்களுக்காக அவர்களுடைய அளவில்
மொழியில்/ நடையில் இருக்கும்
உங்கள் முதல் கவிதையே வாசிப்பனுவம்
உள்ளவர்களிடம் சென்றால் அது நல்ல
அங்கீரமாகவும் இருக்கும்./கூடுதல் உற்சாகம்
அளிப்பதாகவும் இருக்கும் எனச் சென்னையில்
இருந்து வெளி வருகிற இந்த இதழுக்கு
எவ்வித சிபாரிசும் இன்றி வெளியிடுவதற்கான தகுதி
இருந்தால் அவர்கள் வெளியிடட்டும் என
அனுப்பி இருந்தேன்
தகுதி இருந்திருக்கிறது..இதோ வெளிவந்திருக்கிறது"
என்றார்..
ஒரு சிறு விஷயத்தை எனக்காக எவ்வளவு
யோசித்துச் செய்திருக்கிறார் என நினைக்க
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது
உண்மையில் அவர் சொல்வது போல்
மதுரையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த
இதழ்களில் வெளி வந்திருந்தால்
அவர் எப்படித்தான் மறுத்துச் சொன்னாலும்
அவருடைய சிபாரிசில்தான் வந்திருக்கும்
எனத்தான் நிச்சயம் நினைத்திருப்பேன்
பின் ஒவ்வொருமுறையும் யார் சிபாரிசு மூலம்
வெளியிடச் செய்யலாம் என்ற எண்ணமே
என்னுள் திண்ணமாய் வளர்ந்திருக்கும்
பின் அவரே தொடர்ந்தார்.
" இது போன்ற சிற்றிதழ்கள் பொது வெளியில்
அதிகம் கிடைக்காது.ஆர்வமுள்ளவர்கள்
சந்தாக் கட்டித் தபாலில் வாங்கிக் கொள்வார்கள்
மற்றபடி தனியாகவெனில் நம் மதுரை போன்ற\
நகரங்களில் சில குறிப்பிட்டக் கடைகளில்
சில பிரதிகள் மட்டுமே கிடைக்கும்
நம் மதுரையில் இதுபோன்ற சிற்றிதழ்கள்\
டவுன்ஹால் சாலையில் பாரதி புத்தக நிலையம் அருகில்
ஒரு சின்னப் பெட்டிக் கடையில் தான் கிடைக்கும்
நாளை நான் செல்லுகையில்
இரண்டு பிரதிகள் வாங்கி ஒன்றை
நூலகத்திலும் மற்றொன்றை நம் தோழர்களிடமும்
உங்கள் கைப்பிரதிப் போல சுற்றுக்கு விடுகிறேன்
அது நம்மில் எழுதத் தெரிந்த சிலருக்கு
நாமும் எழுதலாமே என்கிற எண்ணம் தோன்றவும்
அதன் காரணமாக அவர்களும் எழுதலாம்தானே"
என்றார்..
பின் சொன்னதைப் போலவே மறு நாளே
இரண்டு பிரதிகள் வாங்கி வந்து ஒன்றை
நூலகத்திலும் ஒன்றை ஊரில் அவருடன்
தோழமையுடன் தொடர்பில் இருந்த
இளைஞர்களிடம் சுற்றுக்கு விட்டார்
இரண்டு மாதம் கழித்து இந்தச் சிறு
செயல்பாடு எனக்கு அத்தனைப் பெரிய
கௌரவத்தைத் பெற்றுத்தரும் என நான்
கனவிலும் எண்ணவில்லை..
( தொடரும் )
6 comments:
உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் குறித்து தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன். தோழரின் சிந்தனையும் செயலும் சிறப்பு.
யதார்த்தமாக நிறைய கற்றுக் கொடுத்த சிறந்த அனுபவங்கள் பெற்றிருக்கிறீர்கள். நல்ல நட்பு வட்டம். நீங்கள் பெற்ற பெரிய கௌரவம் என்ன என்பதை அறிய தொடர்கிறோம்
கீதா
அவர் மிகவும் அருமையாக சிந்தித்து செயல்படுத்தி உள்ளார்...
காத்திருக்கிறேன்.. தொடர்கிறேன். டவுன் ஹாலில் பாரதி புத்தகக் கடையா? எங்கே?
டவுன்ஹால் சாலையின் மேற்கு வாயில் வழி நுழைந்ததும் இடதுபுறம் மூன்றாவதாக இருந்தது..தற்சமயம் அது மசூதியாக உள்ளது..
ஓ... நன்றி தகவலுக்கு.
Post a Comment