'உங்கள் வங்கிக் கணக்கில் உங்களுடைய PAN எண்ணினை இணைக்க வேண்டும். இந்த இணைப்புச் சுட்டியைச் சொடுக்கி உள்ளிடவும்’ என்று மொபைலில் வந்த குறுந்தகவலைச் சொடுக்கி தனது வங்கிக் கணக்கு விபரங்களை உள்ளிட்டிருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். அந்த இணைய தளம் அவருடைய வங்கியின் இணைய தளம் போலவே அச்சு அசலாக இருந்ததால் அவர் அது உண்மையான வங்கியின் இணைய தளம் என்று நம்பி ஏமாந்து விட்டார். அடுத்து அவருக்கு OTP வந்துள்ளது. அதையும் என்ன ஏதென்று சரியாகப் பார்க்காமல் உள்ளிட்டிருக்கிறார். ஒரு முறைக்கு மூன்று முறை வந்துள்ளது. மூன்று தடவையும் முடிந்த பிறகுதான் அவர் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டுள்ள விபரமே அவருக்குத் தெரிய வந்துள்ளது.
புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான ஒருவருக்கும் இதே போல சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. நன்கு படித்து, விபரம் புரிந்தவர்களுக்கே இப்படி என்றால்.. சாமானிய மக்களின் கதி என்ன?
நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் நம்முடைய கடமைதான். உங்கள் பெற்றோருக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் இப்போதே இது குறித்து தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். தொலைக்காட்சி, ஊடகங்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும் மொபைல் விளையாட்டுச் செயலிகளில் கூட நமக்குத் தெரியாமல் வினை ஒளிந்திருக்கலாம். எந்தவொரு மொபைல் செயலியைத் தரவிறக்கம் செய்யும் போதும் அது உங்கள் மொபைலில் என்னென்ன தரவுகளை எடுத்துக் கொள்கிறது என்பதைப் பார்க்கவும். மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள், இதர சேமிப்பு ஆவணங்கள் என்று சகலத்தையும் பார்க்க அனுமதி கேட்டால் ஒன்றுக்கு லட்சம் முறை யோசித்து, அந்தச் செயலி கட்டாயத் தேவைதானா என்று முடிவெடுத்த பிறகே அனுமதியைத் தரவும்.
வங்கிக் கடன் உள்ளிட்டவை வாங்கும் போது நான்கைந்து பக்கங்களில் பொடி எழுத்துகளில் terms and conditions என்று உள்ளதை படித்துக் கூட பார்க்காமல் கையெழுத்திடும் அவசரத்தை இதிலும் காட்ட வேண்டாம்.
சமீபத்தில் பிரபல சிட்ஃபண்டு நிறுவனம் ஒன்றில் மாதாந்திர சீட்டு ஒன்றில் இணைந்தேன். வந்தவர் வரிசையாக கையெழுத்துகள் கேட்டார். எதிலுமே விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்படவே இல்லை. கேட்டதற்கு, “ஆஃபீஸுக்குப் போய் பூர்த்தி செஞ்சிடுவேன் சார்” என்றார். “எனக்கு அவசரமே இல்லை. இங்கேயே பூர்த்தி செய்யுங்க. அப்புறம் நான் கையெழுத்து போடுறேன்” என்றேன். அதே போல கூடுதலாக சில படிவங்களில் கையெழுத்து கேட்டார். அது எதற்கு என்று கேட்டதற்கு, “ஏலத்திலே கலந்துக்கவோ, சீட்டு எடுக்கவோ நீங்க வரத்தேவையில்லை. அதையெல்லாம் நானே பார்த்துக்குவேன். அதற்கான அனுமதி ஒப்பந்தம்” என்றார். “இப்போதான் சீட்டுலேயே சேருறேன். அதுக்குள்ளே சீட்டு எடுக்கறதைப் பத்தி ஏன் யோசிக்கணும்? எனக்கு சீட்டு எடுக்கத் தேவை இருக்கும் போது, நானே வரேன். அப்படி இல்லைன்னா அப்போ கூப்பிட்டுச் சொல்றேன். நீங்க இந்தப் படிவங்களை எடுத்துட்டு வந்து கையெழுத்து வாங்கிக்குங்க” என்றேன். “எல்லாரும் இப்படித்தான் கையெழுத்து போட்டுக் கொடுத்துடுவாங்க சார்” என்றார். எல்லாரும் கிணத்திலே குதிக்கிறாங்கன்னு நாமளும் குதிக்க முடியுமா என்ன? நான் மறுத்து விட்டேன். எதுவாக இருந்தாலும் நாம் வாய் திறந்து கேட்க வேண்டும். கேட்டால் மட்டும்தான் விளக்கம் கிடைக்கும். லோன் கொடுக்கிறவன்கிட்ட கேள்வி கேட்டால் கொடுக்காம விட்டுடுவானோ.. கடைக்காரர்கிட்ட கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டாரோ.. என்று தயக்கத்திலும், கெளரவம் பார்ப்பதிலேயுமே இங்கே நாம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
நேரடியான விஷயங்களுக்கே இப்படி என்றால் மொபைல் செயலிகளில் இன்னமும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டாமா என்ன?
நான் பலமுறை சொல்வதுதான்.. வங்கிப் பரிமாற்றங்களுக்காக தனியே ஒரு மொபைல் எண் / மொபைல் போன் வாங்கிப் பயன்படுத்துங்கள். அந்த எண்ணிற்கு தனியே டாப்-அப் செய்ய வேண்டியிருக்கிறதே என்று நூற்றுக்கணக்கில் கணக்கு பார்த்து லட்சக் கணக்கில் இழந்து விட வேண்டாம். அப்படி வாங்கி வைத்திருக்கும் எண்ணையும், வங்கிக் கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியையும் ஏனைய பொதுப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம்.
ஒவ்வொரு முறை இணைய தளம் வழியாக உங்கள் வங்கிக் கணக்கை பார்க்கச் செல்லும் போது நீங்களே இணைய தள முகவரியை உள்ளிட்டு உள்ளே நுழையவும். மின்னஞ்சலிலோ அல்லது குறுந்தகவலிலோ வந்த இணைப்புச் சுட்டியைச் சொடுக்கி உள்நுழைய வேண்டாம்.
’அட்டை மேலே உள்ள 16 டிஜிட் நம்பர் சொல்லுங்கோ’ என்று கேட்டு மட்டும்தான் பணம் பறிபோகும் என்றில்லை. அதைத் தாண்டியும் பல புது டெக்னிக்குகள் உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டனர்.
கிரெடிட் / டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது மட்டும் ON செய்து வைத்துக் கொள்ளுங்கள். பயன்படுத்தி முடித்தவுடன் சோம்பல் படாமல் OFF செய்து விடவும். இதற்கான வழிமுறைகள் உங்கள் வங்கிச் செயலி / இணைய தளத்திலேயே இருக்கும். ஒரு நாளைக்கு நூறு முறை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டி இருந்தாலும் நூறு முறையும் இதைச் செய்யுங்கள். தவறில்லை.
அதே போல கிரெடிட் / டெபிட் கார்டுகளில் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் அதிகபட்சம் எவ்வளவு செய்ய விருப்பம் என்றொரு வசதி இருக்கும். அதையும் சொடுக்கி 5,000 அல்லது 10,000 என்பது போல வைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது லட்சக் கணக்கில் உபயோகிக்க வேண்டிய தேவை இருந்தால் அப்போது மட்டும் அதை மாற்றி வைத்துக் கொள்ளலாம். தப்பித்தவறி எதாவது ஒரு வழியில் பண இழப்பு வந்தாலும் அந்த அதிகபட்சத் தொகையோடு போய் விடும். (அதுவே ஏழெட்டு முறை OTP வந்து கவனிக்காமல் அனைத்தையும் கொடுத்து பறிபோனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது!)
இப்போதெல்லாம் கிரெடிட் / டெபிட் கார்டுகளை மெஷினில் தேய்க்காமல் அப்படியே தொட்டு செலவழிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. அதிலும் கூட அதிகபட்சத் தொகை என்று ஒரு சில ஆயிரங்களை மட்டும் வைக்கவும்.
இணைய தளம் வழியே பணப் பரிமாற்றம் செய்ய யாருடைய வங்கிக் கணக்கையாவது இணைத்திருந்தால், மாற்றி முடித்தவுடன் அதனை நீக்கி விடுங்கள். அடிக்கடி மாற்றத் தேவையுள்ள எண்ணை மட்டும் சேமிப்பில் வைத்திருந்தால் போதும். இல்லையென்றால் சமயத்தில் கை தவறுதலாக எதோ ஒரு எண்ணுக்கு மாற்றச் செய்ய நேரிடலாம். பணம் திரும்பப் பெறும் வரை மன உளைச்சல் வரும்.
சின்னச் சின்ன விஷயங்கள்தான்.. ஆனால் ஒவ்வொரு தடவையும் இதையெல்லாம் செய்து வந்தால் ஓரளவு நிம்மதியாக இருக்கலாமே!
- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்
fb.com/mayavarathaan
3 comments:
முன்பு குறைந்த அளவு இருக்க வேண்டிய பணம் (minimum balance) இருந்தால் ஏதோ கூடும்... இப்போது குறையும்... மேலும் பணம் செலுத்த வேண்டும்...
இவறல் வெங்கோலன்...
நான் ஒரு தனியார் வங்கியின் பங்குச்சந்தைக்கான தளத்தில் கணக்கு தொடங்கிய அடுத்தநாளே, அந்த வங்கியிலிருந்து வந்ததுபோல் ஒரு குறுந்தகவல் வந்தது. "உடனடியாக இந்த லிங்க்கை சொடுக்கி விவரங்களை அளிக்கவும். இல்லையேல் உங்கள் நெட்பேங்கிங்க் முடக்கப்படும்" என்றது. வியப்பு என்னவென்றால் அந்த வங்கியில் இன்னும் நான் சேமிப்பு கணக்கே தொடங்கவில்லை!
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நல்ல பகிர்வு.
Post a Comment