Sunday, September 15, 2024

ஆனந்தத்தின் அற்புதம்..

 அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்


யானையைக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்கப் பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடி
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேட்டையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

3 comments:

தமிழ்ப்பூ said...

சிந்திக்க வைக்கும் சிறந்த கவிதை.

ஸ்ரீராம். said...

இவர்கள் ஜெயிப்பதில்தான் சந்தோஷம்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பு. நல்ல பதிவுகளுக்கு வரவேற்பு இருப்பதில்லை என்றாலும் தொடர்ந்து கொண்டு இருப்பதும் நல்லதே. அவர்களுக்கு வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

Post a Comment