Wednesday, March 5, 2025

சராசரித்தனத்தின்‌சுகமும் .அதீதத்தின் ரணமும்..

 ஓவியக் கோடுகளின்

நளின வளைவுகளின் நேர்த்தியையும்
வண்ணங்களின் அர்த்தங்களையும்
அதிக்மாகத் தெரிந்து கொள்ளாதவரை
அனைத்து ஓவியங்களும்
மிக அழகாகத்தான் தெரிகின்றன

படிமம் குறியீடு
இருண்மை முதலான அறிவும்
இலக்கணம் குறித்த தெளிவும் 
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது

ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை
என்பது மட்டுமல்ல
உறவுகள் எல்லாம் 
மிக இறுக்கமாகத்தான் இருக்கின்றன

வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது

திண்ணையையும் தலைப்பாகையையும்
சிம்மாசனமாகவும் கிரீடமாகவும்
ஏற்றுக் கொண்டு
சாதாரணமான்வனாக இருத்தல்
சுகமாக மட்டும் அல்ல
அது பலருக்கு ஞானத்தின்
 எளிதான குறீயீடாகக் கூடப் படுகிறது

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக  இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு  இருத்தலுக்கான
 உன்னத அடையாளமாய  இருக்கிறது

3 comments:

ஸ்ரீராம். said...

// ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை //

நான்கு நாட்களுக்குமுன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மனம் முழுவதும் கசந்து போனது. 

ஸ்ரீராம். said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

Thanks sir

Post a Comment