Saturday, March 8, 2025

எதிர்திசையில் ஓரடி...

 புரியாது என புலம்பித் திரிந்ததைவிட

புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

3 comments:

ஸ்ரீராம். said...

எதை நோக்கியும் முதல் அடிதான் முக்கியம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. நல்ல அர்மையான வாசகங்கள்.

/என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது/

ஆம். நம்பிக்கைதானே வாழ்க்கை. எதுவுமே நடக்க வேண்டுமென இருக்கும் போது, இறைவன் துணையாக இருந்து அதை நடத்தி விடுவார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Jayakumar Chandrasekaran said...


​புரியாது என்று தான் புகுந்தேன்
கொஞ்சம் புரிந்தது
மீண்டும் வாசித்தேன்
புரிந்தது தெளிந்தது
நம்பிக்கையே வாழ்க்கை
நாளை என்பது எப்போதும்
நமக்குண்டு.

Jayakumar

Post a Comment