Monday, November 17, 2014

நரக வாசம்

நூறு தடவ வந்து போன பின்னும்-இந்த
ஊரின் போக்கு மட்டும் விளங்கவே இல்லை
காது கொடுத்து உற்றுக் கேட்ட போதும்-இவர்கள்
பேசும் பாஷை மட்டும் புரியவே இல்லை

கரண்டு ரெயில் ஏறிப் போனா கூட்டம்-நல்ல
காத்து வாங்க பீச்சு போனாக் கூட்டம்
மிரண்டு பார்க்க வைக்கும் மாலில் கூட்டம்-இங்கே
எப்ப எங்கப் பாத்தாலும் கூட்டம் கூட்டம்

மேகம் தொட்டு கோடி வீடு இருந்தும்-இங்கே
ரோடு ஒரம் கோடிக் குடும்பம் நடக்கும்
வேகம் இவர்கள் விவேகம் தன்னைக் காட்ட-நாறும்
கூவம் இவர்கள் விவேக மின்மைக் காட்டும்

கணவன் மனைவி குழந்தை எனினும் கூட -இவர்கள்
இருப்பு எல்லாம் ஒன்றாய் எனினும் கூட
உணவு ஒன்றாய் உண்ண ஞாயிறு வேணும்-இந்த
நிலையை நினைக்க நெஞ்சில் பாரம் கூடும்

இரத்த உறவு என்றா னாலும் கூட-விடுமுறை
அன்று வந்தால் இருந்து பேச முடியும்
அடுத்த வீட்டில் இழவு என்றால் கூட-அது
கிழமைப் பொறுத்தே துக்க கூட்டம் கூடும்

நிமிட முள்ளைக் காலில் கட்டி நாளும்-இவர்கள்
ஓடும் ஒட்டம் காண மனமே வாடும்
சபிக்கப் பட்ட மனிதர் போல நாளும்-இவர்கள்
வாழும் வாழ்க்கை நரகச் சாயல் காட்டும்

நரக வாழ்க்கை நகர வாழ்க்கை என்று-நாளும்
சொல்லக் கேட்டுப் புரியா திருப்போரெல்லாம்
சிலநாள் அங்கே இருக்க நேர்ந்தால் போதும்-இந்தக்
கூற்றின் உண்மை எளிதாய் விளங்கிப் போகும்

14 comments:

ஸ்ரீராம். said...

//அடுத்த வீட்டில் இழவு என்றால் கூட-அது
கிழமைப் பொறுத்தே துக்க கூட்டம் கூடும்//

வேதனையான உண்மை.

இளமதி said...

நகரத்து வாசம் நரகமேதான் என்று
பகர்ந்திட்ட காணொளியே பா!

உண்மையை உரைத்தீர்கள் ஐயா நல்ல கவிதையிலே!..

வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

சபிக்கப் பட்ட மனிதர் போல நாளும்-இவர்கள்
வாழும் வாழ்க்கை நரகச் சாயல் காட்டும்

நரக வாழ்க்கை நகர வாழ்க்கை என்று-நாளும்
சொல்லக் கேட்டுப் புரியா திருப்போரெல்லாம்
சிலநாள் அங்கே இருக்க நேர்ந்தால் போதும்-

போதும் போதும் என்றே கதறிடத் தோன்றும்..!

”தளிர் சுரேஷ்” said...

நகர வாழ்க்கையின் நரகத்தை கவிதை வரிகள் சிறப்பாய் கூறுகின்றன! அருமை!

தி.தமிழ் இளங்கோ said...

நகர வாழ்க்கை நரக வாழ்க்கை என்பதனை நன்றாகவே படம் பிடித்துக் காட்டினீர்கள்.
த.ம.4

கோமதி அரசு said...

நிமிட முள்ளைக் காலில் கட்டி நாளும்-இவர்கள்
ஓடும் ஒட்டம் காண மனமே வாடும்//

உண்மை.
கவிதை அருமை.

Unknown said...

கரண்டு ரெயில் ஏறிப் போனா கூட்டம்-நல்ல
காத்து வாங்க பீச்சு போனாக் கூட்டம்
மிரண்டு பார்க்க வைக்கும் மாலில் கூட்டம்-இங்கே
எப்ப எங்கப் பாத்தாலும் கூட்டம் கூட்டம்

சென்னை நிலையை செப்பிட இயலா!
உண்மைதான் இரமணி!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
அற்புதமான வரிகள் சொல்ல வேண்டிய கருத்தை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற பாட்டு நினைவுக்கு வந்தது. வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

அடுத்த வீட்டில் இழவு என்றால் கூட அது
கிழமைப் பொறுத்தே கூட்டம் கூடும்

மனம் சுட்டு விட்டது ஐயா. இன்று நகர வாழ்க்கை நரக வாழ்க்கையே...

ஐயா எமது தொட(ர்)பதிவு காண்க....
http://killergee.blogspot.in/2014/11/1.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நரக வாழ்க்கை நகர வாழ்க்கை என்று கூறியுள்ளீர்கள். தற்போது கிராம வாழ்க்கையும் அவ்வாறு ஆகிவிட்டதாக அங்கிருந்து வரும் பல நண்பர்கள் சொல்லக் கேட்கிறேன். எந்த திசை நோக்கி நாம் போகிறோம் என புரியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மை...

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! உண்மையான யதார்த்தத்தைச் சொல்லும் கவிதை...அருமை சார்..இப்படித்தானே எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கின்றோம்...அதுவும்

அடுத்த வீட்டில் இழவு என்றால் கூட-அது
கிழமைப் பொறுத்தே துக்க கூட்டம் கூடும்// சே என்றாகின்றதுமனிதர்களை நினைக்கும் போது...

Iniya said...

நரகவாழ்வு என்றே உரைத்தீர் நயம்படவே
கரகமாடு வதுபோன்ற வாழ்விது!

அருமையான அர்த்தம் நிறைந்த கவிதை அனைத் டதும் நன்றாகவே உள்ளது சொன்ன விடம் அழகோ அழகு.வாழ்த்துக்கள்....! நன்றி !

Post a Comment