Saturday, August 29, 2015

கவிஞனே நினைவில் கொள்ளவேண்டும்

அறியாமைச் சிறையில்
அகப்பட்டிருக்கும் வரையில்
தெளிவின்மையும் குழப்பமும்
தவிர்க்கமுடியாததென்று
அறிவுக்குத் தெரியும்
மனம்தான் புரிந்து கொள்ளவேண்டும்

உடற்கூட்டினுள்
ஒடுங்கிக் கிடக்கத் துவங்கின்
பிறப்பதுவும் இறப்பதுவும்
அனுபவித்தே ஆகவேண்டியதென்பது
ஆன்மாவுக்குத் தெரியும்
அறிவுதான் தெளிவு பெறவேண்டும்

நிற்காது சுழலும்
பூமியினின்று காணும் வரை
உதித்தலென மறைதலென
பொய்யாய் உணரப்படுவோமென்பது
பகலவனுக்குத் தெரியும்
பகுத்தறிவாளரே தெளிவு கொள்ளவேண்டும்

வார்த்தைகளை மட்டுமேநம்பி
பயணம் செய்கிற வரையில்
சிறப்புறவும் நிலைபெறவும்
நிச்சயமாய் வாய்ப்பில்லையென்பது
கவிதைக்கும் தெரியும்
கவிஞனே இதனை நினைவில் கொள்ளவேண்டும்

9 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான சிந்தனையில் விளைந்த முத்து! அருமை!

இளமதி said...

மனதிலும் நினைவிலும் நிறுத்திக் கொள்ளவேண்டிய
நிதர்சனமான நல்ல கருத்துக்களை அருமையான கவிதையாகத் தந்தீர்கள் ஐயா!

வாழ்த்துக்கள்!
த ம.2

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கவிதைக்கும் தெரியும் என்ற சூசகமான சொற்கள் கவிதைக்கு மெருகூட்டுகின்றன.

வலிப்போக்கன் said...

கவிஞர்கள் மட்டும்தான் நிணைவில் கொள்ள வேண்டுமா...???மற்றவர்கள் விதிவிலக்கா...அய்யா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வார்த்தை ஜாலம் மாட்டும் போதாது கவிதைக்கு என்பதை அழுத்தமாகக் கூறுகிறது கவிதை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Thulasidharan V Thillaiakathu said...


வார்த்தைகளை மட்டுமேநம்பி
பயணம் செய்கிற வரையில்
சிறப்புறவும் நிலைபெறவும்
நிச்சயமாய் வாய்ப்பில்லையென்பது//
அருமையான சிந்தனைக் கவிதை!

S.Venkatachalapathy said...

குழந்தைகளின் மழலை, வார்த்தைகளை நம்பாத கவிதை. இவை சிறப்புறுவதும், நினைவுகளில் நிலை பெறுவதும் அன்றாடம் நடக்கிறதே.

வளரும் கவிஞர்களுக்கு சிறந்த அறிவுரை.

அப்பாதுரை said...

எல்லாவற்றையும் மொத்தமாக முடிச்சு போட்டுட்டீங்க்களே? கவிஞன் இல்லாவிடில் கவிதை கிடையாது.
(பகலவன் விவகாரம் கண்மூடிகள் அல்லவா புரிந்து கொள்ள வேண்டும்?)

Post a Comment