Monday, August 17, 2015

அதிர்ஷ்டக்காற்று

கல்லூரி நாட்களில்
மூன்று மைல் தொலைவிலிருந்த கல்லூரிக்கு
மிதிவண்டியில்தான் செல்வேன் நிதமும்

சில சமயங்களில்
கல்லூரி செல்கையிலோ
திரும்ப வருகையிலோ
"தள்ளுக் காற்று" இருக்கும்

அப்போது
சக்தியும் குறைவாய்ச் செலவழியும்
தூரமும் விரைவில் கடப்பேன்

பலசமயங்களில்
கல்லூரி செல்கையிலோ
திரும்ப வருகையிலோ
"எதிர்க்காற்றே "அதிகம் இருக்கும்

அப்போதெல்லாம்
சக்தி விரையமும் அதிகம் இருக்கும்
தூரம் கடக்கவும் நேரம் பிடிக்கும்

ஆயினும்
எப்போதும் நான்
காற்றின் போக்கினைக் குறித்து
கவலைகொண்டதில்லை

எப்போதும்
அதற்கு ஏற்றார்ப்போல
என்னை தகவமைத்துக் கொள்வதிலேயே
அதிகக் கவனம் கொள்வேன்

அதிர்ஷ்டம் துரதிஷ்டம் குறித்து
கவலை கொள்ளாது
அன்றாடம் என் பயணத்தைத்
தொடர்வதைப் போலவே....

11 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாது..// அருமை...

ஆம் இதைப் பற்றிக் கவலை கொண்டால் நம் மனம் எதிர்மறை சிந்தனைகளால் நிரம்பிவிடும் அபாயம் உண்டு...மனம்பிறழவும்...வாழ்க்கையில் எதிர்காற்றுதான் அதிகம் அதை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொண்டுவிட்டால் வாழ்க்கை மகிழ்வுடன் சென்று விடும்....

ப.கந்தசாமி said...

ஆற்றைக் கடக்க ஆற்றின் போக்கிலேயேதான் நீந்தவேண்டும் என்பார்கள். எதிர் நீச்சல் போடுபவர்கள் முழுகிப்போய்விடும் அபாயம் அதிகம்.

G.M Balasubramaniam said...

நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவற்றோடு அனுசரித்துப் போவதே அறிவு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தகவமைத்துக்கொள்ள பக்குவம் வேண்டும். நல்ல அறிவுரை. நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அழகான ஒப்பீடு! அருமையான கவிதை! நன்றி!

KILLERGEE Devakottai said...

நல்லதொரு விடயங்கள் அருமை
தமிழ் மணம் 3

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//அதிர்ஷ்டம் துரதிஷ்டம் குறித்து
கவலை கொள்ளாது
அன்றாடம் என் பயணத்தைத்
தொடர்வதைப் போலவே....// செய்யவேண்டியதைச் செய்யும் பெரியோர்
கவிதை அருமை ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

வருவது வரட்டும்... நம் பாதையின் எண்ணம் மாறாமல் இருந்தால் சரி...

இராஜராஜேஸ்வரி said...

தகவமைத்துக் கொள்ளும்
பயணங்கள் முடிவதில்லையே..!

குட்டன்ஜி said...

ரமணி ஐயாவின் ஆக்கங்களே தனி!
நலந்தானே?
தமிழ் மணததைப் பாத்து போட்டாச்சுய்யா வோட்டு!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.

Post a Comment