Sunday, May 1, 2016

மே தினச் சிறப்புப் பட்டி மன்றம்



நமது பதிவர் கவிஞர் முத்து நிலவன் ஐயா
அவர்கள் கலந்து கொண்ட மே தினச்  சிறப்புப்
பட்டி மன்ற நிகழ்வினைக்
கலைஞர் தொலைக்காட்சியில் கண்டேன்

முத்து நிலவன் ஐயா  தன் பதிவில்
குறிப்பிட்டிருப்பதைப் போல தொழிலாளர் தினத்தை
கௌரவிக்கும்படியாக கலைஞர் தொலைக்காட்சி
சிறப்புப் பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது
முதலில் பாராட்டப் படவேண்டிய விஷயம்.

மதுரைதான் பட்ட மன்றத்திற்குப் பூர்வீகம்
மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில்தான்
அதற்கான ஆஸ்தான இடம்.

குன்றக்குடி அடிகளார் அவர்கள்தான்
அப்போதெல்லாம் ஆஸ்தான நடுவர்
.
அந்தக் காலங்களில் தமிழகத்தின் மிகச் சிறந்த
பேச்சாளர்கள் எல்லாம் வருடம் ஒருமுறை
நடைபெறும் இங்கு நடைபெறும் பட்ட மன்ற
நிகழ்வில் கலந்து கொள்வதில் அதிக
ஆர்வம் காட்டுவார்கள்

அப்போதைய பட்டிமன்றத் தலைப்புகள் எல்லாம்
அதிகம் இலக்கியம் மற்றும் இலக்கியக்
கதாபாத்திரங்கள் சம்பத்தப்பட்டதாகவே
இருக்கும் என்பதால் பேச்சில் அதிகம் பண்டை
இலக்கிய சாராம்சங்களே இருக்கும்.

ஒருமுறை தமிழர் மரபில் தாலி கட்டும்
 பழக்கம் உண்டா என்கிற தலைப்பில்,
ஒரு புறம் தலைமைப் பேச்சாளராக
கண்ணதாசன் அவர்களும் மறுபுறம்
ம.பொ.சி அவர்களும் நடுவராக அடிகளார்
இருந்து நடத்திய பட்டி மன்றம்
மிகச் சிறப்பானது, அந்தப் பட்டி மன்றப் பேச்சுக் கூட
புத்தகமாக வந்த நினைவு இருக்கிறது

அந்த வகையில் மதுரைக்காரர்களுக்கு இந்தப்
பட்டிமன்ற விஷயத்தில் கொஞ்சம் கூடுதல்
நெருக்கம் உண்டு.அந்த வகையில்தான் எனக்கும்.

( எதற்கு இத்தனைப் பீடிகை. என்றால்
காரணம் இருக்கிறது

ஒரு மாறுபட்ட விமர்சனம் வழங்குறோம்
என்றால்அதற்கான தகுதியை கொஞ்சம் விளக்கிப்
 போனால்தானே சரியாக இருக்கும்)

விளையாட்டுப் போட்டியில் ஜெயிக்க எப்படி
அணியின் தலைவர் மிக மிக முக்கியமோ
அதைப்போல பட்டி மன்றம் சிறக்க நடுவரின்
பங்களிப்பே மிக மிக முக்கியமானது

முன்பு அடிகளார் அவர்களின் தீர்ப்புக்காகவே
பட்டிமன்றம் முடிய 11 மணிக்கு மேல்
ஆனாலும் கூட ( பத்துக்கு மேல் பஸ் கிடையாது
ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் ஊருக்குப்
போகவேண்டும் )இருந்து கேட்டுவிட்டுத்தான்
போவோம்

இரு அணிகளின் கருத்துக்களைத்
தொகுத்துச் சொல்வதும் அதற்கு மிக மிக
அருமையாக மறுப்புச் சொல்வதும்
இறுதி நொடி வரை எப்பக்கம் தீர்ப்பு வழங்கப் போகிறார்
என்பதை யாரும் சிறிதும் யூகித்துவிட முடியாதபடி
இறுதிச் சொற்பொழிவு இருப்பதும் மிகவும்
இரசிக்கத் தக்கதாயிருக்கும்

தற்போது பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்
இடையிடையே கருத்துச் சொன்னாலும்
அது மிகச் சுருக்கமாக பேச்சாளரின் சிந்தனையை
தடை செய்யாவண்ணம்
சட்டென சொல்லிப் போவது போலத்தான்
அப்போதும் அடிகளார் அவர்களும்
சொல்லிப் போவார்கள்

முன்னுரை, பேச்சாளர்கள் அறிமுகம், முடிவுரை தவிர
பிற இடங்களில் நடுவரின் குறுக்கீடு அதிகம் இருக்காது

நடுவர் லியோனி அவர்களின் பேச்சில் இவையெல்லாம்
நேர் எதிர்மாறாக இருப்பது இந்தப் பட்டி மன்றத்தில்
ஒரு குறை

இடையில் நடுவர் குறுக்கிட்டுப் பேசுகையில்
எப்போது முடிப்பார் என பேச்சாளரும்
புரிந்து கொள்ளமுடியாத அளவு சில சமயம்
மிக நீண்டும் சில சமயம் மிகச் சுருக்கியும்
இருப்பதால் தாளக்கட்டைப் பிடிக்கத் திணறும்
 பாடகனின் கஷ்டம் அனைத்துப்
பேச்சாளருக்கும் இருந்தது

மிகக் குறிப்பாக அதன் காரணமாகவே
வானொலி அடுத்து தொலைக்காட்சி என்கிற
விஷயத்தில் மிக அருமையாக ஒரு கோர்வையாக
ஒரு விஷயத்தைச் சொல்ல முயன்ற
முத்து நிலவன் அவர்களால் மிகச் சரியாகச்
சொல்ல இயலவில்லை என நினைக்கிறேன்

இன்னும் நிறைய எழுத ஆசை. ஆயினும் நீளம்
கருதி ஒரே ஒரு கருத்தை மிக அழுத்தமாகப் பதிவு
செய்து முடிக்கலாம் என நினைக்கிறேன்

தொலைக்காட்சியில் தோன்றிப் பேசுவதும்
பட்டிமன்றத்திற்கென உள்ள சில ஜன ரஞ்சகமான
துணுக்குகளை அதிகம் சொல்வதும்
தலைப்பை ஒட்டியும் பேசவேண்டுமே என்கிற
விதத்தில் அது குறித்தும் கொஞ்சம்
சொல்லிப் போவதுமான இது போன்ற
பட்டிமன்ற குழுக்கள் .....

நமது முத்து நிலவன் ஐயா
போன்று, கிடைக்கிற வாய்ப்பை மிகச் சரியாக
முறையாகப் பயனபடுத்த வேண்டும்
தலைப்பை ஒட்டி விலகாது
தலைப்பை மிகவும் நீர்த்துப் போகச் செய்து விடாது
பேசவேண்டும் என்னும் கொள்கை, கோட்பாடு
கொண்டவர்களுக்கு ( ஐயா அவர்களின் பேச்சை
கேட்டவர்களுக்கு நான் சொல்ல வருகிற விஷயம்
தெளிவாகப் புரியும் ) சரிப்பட்டு வராது என்பதே
எனது ஆணித்தரமான கருத்து

வாழ்த்துக்களுடன்

5 comments:

தி.தமிழ் இளங்கோ said...

ஆமாம் அய்யா. நீங்கள் சொல்வது சரிதான். இப்போதெல்லாம் பட்டிமன்றம் என்ற பெயரில் வெட்டி மன்றம்தான் நடக்கிறது. நடுவர் என்ற பெயரில் இவர்கள் செய்யும் குறுக்கீடுகள் எரிச்சலைத்தான் தருகின்றன. பேசுபவருக்கும் தொடர்ந்து பேசும் ஆர்வம் குறைந்து விடுகிறது.

இன்று (01.05.16) காலை ஒரு பட்டிமன்றம் சென்றேன். ஏண்டா போனோம் (வேறு வழி இல்லை) என்று ஆகி விட்டது. நடுவர் செய்த அலப்பறை தாங்க முடியவில்லை. எல்லோரும் நேரத்தை கொன்றே விட்டார்கள். போய் வந்தவுடன் (மாலையிலிருந்து) தூக்கம். இப்போது கொஞ்சம் விழிப்பு.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

”நமது முத்து நிலவன் ஐயா போன்றவர்க்கு,
சரிப்பட்டு வராது என்பதே
எனது ஆணித்தரமான கருத்து”
ஊடகங்கள் நம் கையில் இல்லை என்பதால் கிடைக்கும் வரை கிடைக்கின்ற வாய்ப்பை, முடிந்த வரை பயன்படுத்த வேண்டும் என்பதே என்கருத்து. நன்றி

Yaathoramani.blogspot.com said...

Muthu Nilavan said...//

தீவிர சமுக சிந்தனையுடன் கூடிய
ஒரு குழுவினை நீங்களே ஏற்படுத்தலாம்
கொஞ்சம் கால தாமத மாயினும்
அதுவே மிகச் சிறந்த குழுவாகவும்
விரும்பத் தக்க ஜனரஞ்சகமான
குழுவாகவும் நிச்சயம் இருக்கும் என்பது
என் எண்ணம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முத்து நிலவன் அவர்கள் சிறப்பாகப் பேசினார்.நல்ல கருத்துக்களை அழகாக சொன்னார். நீங்கள் சொன்னது போல நடுவரின் குறுக்கீடு முத்துநிலவன் அவர்களின் சில நிமிடங்களை வீணாக்கிவிட்டது.

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று //

நான் சொல்ல முயன்றதும் அதுவே
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Post a Comment