Wednesday, March 4, 2020

மனமூடை..

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய….
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன
மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு
நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி
எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூட் டை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போல கிடந்து சிரிக்கும்
சிலசமயம் சிம்மாசனமாகி
அவனைத் திமிர்பிடித்தவன்போலக் காட்டும்
சிலசமயம் தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்
ஆனாலும் பலசமயம்
அவனுள் பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்து
லேசாக முகம் காட்டும்.
இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்

அவனை அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்
எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட
உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்
அந்த மூட் டையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
அறுந்து போகாது….
அந்த மூடையை அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்
அல்லது
அவன் சரியானால் கூட அந்த மூடை
அவனைவிட்டுச் சாகுமென
அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்
ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்
அந்த அழுக்கு மூட் டையை உயரப்பிடித்தப டி
போவோர் வருவோரின்
மார்பினை  உற்று நோக்கி-
இதுதான் இதுதான் – என உரக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண் வெடித்துத் திறப்பதுபோலவும்
அனைவருக்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்து விரிந்து அம்மணமாவது போலவும்
என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்
என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// அனைவருக்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை //

நீங்கினால் / நீக்கினால் சரி...

G.M Balasubramaniam said...

எண்ணங்கள் கவித்துவம்பெருகின்றன ரசித்தேன்

வெங்கட் நாகராஜ் said...

மன அழுக்குகள்... ஒவ்வொருவருக்குள்ளும்....

நல்ல கவிதை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஸ்ரீராம். said...

நர்தனமாடும் எண்ண ஜாலங்கள்.

Post a Comment