Wednesday, March 25, 2020

அந்த நீலக்கடல்...


அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது
அந்த நீலக்கடல்

 கடற்கரையோரம்
யாருமற்ற தனிமையில்
"இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை "
என்கிற திடமான முடிவுடன்
கடல் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்
இளைஞன் ஒருவன்

தன்னுடன் விளையாடத்தான்
அலைகள் தத்தித் தத்தி வருவதான நினைப்புடன்
கரைக்கும் கடலுக்கும் இடையில் ஓடி
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி

"காமத்தில் திளைப்பவர்களுக்குத் தேவை
அடர் இருளும் யாருமற்ற தனிமையும்
தூய காதலுக்குத் தேவை
காற்று வெளியும் கடற்கரையும்தான் "
காதல் மொழிகள் பேசி
காதலியைக் கரைத்துக் கொண்டிருந்தான்
காதலன் ஒருவன்

ஒவ்வொரு பருவத்திலும்
கடல் தன்னுடன் கொண்ட பரிச்சியத்தை
நெருக்கத்தை நேசத்தை
அசைபோட்டபடி கடல் தாண்டிய வெறுமையில்
எதையோ தேடிக்கொண்டிருந்தார்
பெரியவர் ஒருவர்

என்றும் போல
எப்போதும் போல
தனக்கென ஏதுமற்று
கண்போருக்குத் தக்கபடி
மிகச் சரியாகப் பொருந்தியபடி
அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
அந்த நீலக் கடல்             

5 comments:

ஸ்ரீராம். said...

கடலுக்கென்ன...     என்றும் இருக்கும்!

வெங்கட் நாகராஜ் said...

ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் நீலக் கடல்...

நல்ல கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கோமதி அரசு said...

//கண்போருக்குத் தக்கபடி
மிகச் சரியாகப் பொருந்தியபடி
அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
அந்த நீலக் கடல் //

அருமை.

Post a Comment