Friday, March 20, 2020

நம்மவர்கள் நமக்காக...

கடந்த வாரம், தன்னுடைய மகனை சிங்கப்பூரில் போய் பார்த்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்கள் பெற்றோர்கள்.கொரானா ஆரம்பகட்டச் சோதனைகள், உடல் நலம் குறித்த கேள்விகள் மற்றும் பயண விபரப் படிவங்களை நிரப்பிய பிறகு, வெளியேற அனுமதித்திருக்கிறார்கள்.  “ப்பூ..இவ்வளவு தான் சோதனையா.. ரத்தம் எடுக்கல..GH போகச் சொல்லல, என்னத்த கண்ரோல் பண்ணி, Very lethargic” ..என மனக் குமுறல்களுடன் வீடடைந்திருக்கிறார்கள். எங்கும் செல்லவில்லை. யாரையும் பார்க்கவில்லை. தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

அன்று மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சிறப்புப் பிரிவில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. இருமல், காய்ச்சல் இருக்கிறதா.. உடல் நிலை எப்படி உள்ளது என விசாரித்து விட்டு, ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க ! என்று அவசர எண்ணைப் பகிர்ந்திருக்கிறார்கள். அடுத்த நாளும் அழைப்பு தொடர்ந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அழைப்பு வரவில்லை, மாறாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கு வந்து விசாரித்துச் சென்றிருக்கிறார்கள்.

இது ஏதோ மேலை நாடுகளில் நிகழவில்லை, “நல்லவேளை, இந்த வைரஸ் இந்தியாவில் தோன்றவில்லை, அதன் மெத்தனத்திற்கு இந்நேரம் உலகம் அழிந்திருக்கும், Thanks to China” என்று கடந்த வாரம் ஒரு ஐரோப்பியன் கேலி செய்த இந்தியா வில் தான் இது சாத்தியப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் நாமும் இப்படியே எண்ணியிருப்போம். இந்தியா என்றால் ஏழ்மை, அழுக்கு, சுகாதாரம் என்ன விலை, மெத்தனத்தின் மொத்தம் என்று உலகம் நினைத்திருந்த தேசம் தான் கொரானா வைரஸ் பரவலைத் தடுப்பதில் முன்மாதிரியாக மாறிவருகிறது.

வைரஸ் தாக்கத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாடுகளாக உள்ள பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நாள், Jan 25. ஐந்து நாட்களுக்குப் பிறகு ( Jan 30 ) இந்தியாவில் முதல் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றளவில் பிரான்சில் 4400, ஜெர்மனியில் 3795. இந்தியாவில் 124.

இதற்குத் தட்பவெட்பம், நிலவேம்பு, மஞ்சள், தமிழர் பாரம்பரியம், வாட்சப், கோமியம், நல்ல மனசுங்க எனப் பல காரணங்களை நீங்களே அனுமானித்தாலும், இதற்கு முக்கியக் காரணம், முடிவெடுக்கும் அரசும், அதை செயல்படுத்த உழைக்கும் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறைப் பணியாளர்களும் தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழைக்கிறார்கள். தெருத் தெருவாக, வீடு வீடாகச் செல்கிறார்கள், தப்பியோடும் கிறுக்கு நோயாளிகளைத் தேடி ஓடுகிறார்கள், அவன் யார் யாரைச் சந்தித்தான் என விசாரித்து அங்கு விரைகிறார்கள். காரணம் !

இந்தியாவிற்கு அடுத்த பத்து நாட்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவர்கள் அறிவார்கள். இவர்கள் ஓய்ந்து போனால், இத்தேசம் ஒழிந்து போகும் என்பது தான் நிதர்சனம். கேரளாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர், அதற்கு முந்தைய இரண்டு நாட்களில் மட்டும், கல்யாண ரிசப்ஷன் விழா, பார்ட்டி, சினிமா என மகிழ்ந்ததன் விளைவு, அவருடைய Contact Road mapல் மட்டும் 1000 பேர் இருக்கிறார்கள். இதில் Close contacts 335 பேரைத் தேடி அலுவலர்கள் விரைந்திருக்கிறார்கள். அதில் யாரேனும் Positve என வந்தால் இனி அவர்கள் பயணப்பாதை தயாரித்து அதற்கு அதிகாரிகள் விரைய வேண்டும். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கும் இதைத்தான் நம் தேசம் செய்து வருகிறது. தன்னால் இயன்றதை விட ஒரு நிலை அதிகமாகவே மக்களைக் காக்க முயல்கிறது. அதற்குக் கைமாறாக இவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அது, சுய ஒழுக்கம்.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது என்றதும் கட்டுச் சோறு சகிதம் அதைக் காணச் சென்றவர்கள் நாம், வைரஸிற்கு பயந்து விடுவோமா, ஊரடங்கு என்பதெல்லாம் விடுமுறை என்றளவில் தான் நாம் அணுகுகிறோம். ஆனால் உலகே தற்சமயம் அடங்கி தான் இருக்கிறது. நாம் நம்மைத் தனிமைப்படுத்தலன்றி இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க வழியே இல்லை. பாசிட்டிவாக இருப்பது பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இப்போதைய மிக முக்கியத் தேவை பாதுகாப்பாக இருப்பது !

விழாக்களை, விருந்தோம்பல்களைத் தவிர்த்து விட்டு, வீட்டில் இருங்கள் நண்பர்களே ! தனித்திரு, விழித்திரு என்பது போல, தனித்திருங்கள்.. யாரிடமும் சற்றுத் தள்ளியே இருங்கள். அது போதும்(.இது படிப்பதற்காக மட்டுமல்ல...தாங்கள் அக்கறை கொண்ட அனைவருக்கும் பகிர்வதற்காகவும்..)

15 comments:

வலை ஓலை said...

சிறந்த விழிப்புணர்வு. அனைவரையும் சென்றடைய வேண்டும்.

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது நம்மவர்கள் நமக்காக… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியெல்லாம் பரவுகிறது என்பதின் விளக்கமும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் காணொளி அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

காலத்திற்கேற்ற விழிப்புணர்வுக் காணொலி

balu said...

சிறப்பான மிகவும் உயர்ந்த பதிவுகள். சரி ரிரிரி நமது பகுத்தறிவு பகலவன்கள் சப்தத்தையே காணவில்லையே.

balu said...

சிறப்பான மிகவும் உயர்ந்த பதிவுகள். சரி ரிரிரி நமது பகுத்தறிவு பகலவன்கள் சப்தத்தையே காணவில்லையே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் நல்ல விழிப்புணர்வுப் பதிவு. காணொலி அனைத்தையும் எடுத்துரைத்து விடுகிறது.

நம் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து வருகிறது.

இருப்பினும் நம் தேசம் மிகப்பெரியது மட்டுமல்ல, சுய கட்டுப்பாடுகள் அற்ற, சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அற்ற மக்களை அதிகமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும் இந்த மாபெரும் ஆபத்துக்களைத் தானும் உணர்ந்து, பிறருக்கும் உணர்த்தி, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இந்தப் பேராபத்துக்களிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும்.

கும்பல் எங்கும் கூடவே கூடாது. திருமணங்கள் உள்பட, கும்பலைக்கூட்டி எங்கும் எந்த ஒரு விழாக்களும் நடக்க அனுமதிக்கக்கூடாது.

பகிர்வுக்கு நன்றிகள்.

நெல்லைத் தமிழன் said...

நல்ல பதிவு.

அரசாங்கத்தைவிட, மக்கள் கையில்தான் கொரோனாவிலிருந்து தப்பிக்கும் வழி இருக்கிறது. பார்ப்போம் எத்தனை பொறுப்புள்ளவர்களாகச் செயல்படுகிறார்கள் என்று.

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு!
நானும் என் கணவரும் சென்ற வாரம் தான் துபாயிலிருந்து சென்னை வந்தோம். மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட்டில் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதித்து விட்டு, சில கேள்விகள் அடங்கிய படிவத்தை நிரப்பச் சொல்லி விட்டு அனுப்பி விட்டார்கள். உடனே அனுப்பியதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அந்த சமயத்தில் ஐக்கிய அரபுக்குடியரசில் [ துபாய், ஷார்ஜா உள்ளிட்ட ஏழு எமிரேட்கள் அடங்கிய நாடு] கொரோனா மரணங்கள் இல்லை. அதிகமான பாதிப்பும் மரணங்களும் ஏற்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத்தான் அந்த சமயத்தில் அதிகமான பரிசோதனைகள் இருந்தன. இருந்தாலும் பாதிப்புகள் சைனாவிலிருந்து உலக நாடுகளூக்கு பரவிய சமயத்திலேயே நம் இந்தியா கவனமாக இருந்திருந்தால் இந்த அளவு பாதிப்புகள் கூட ஏற்பட்டிருக்காது என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனாலும் இப்போது போர்க்கால நடவடிக்கைகள் எடுத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு!
நானும் என் கணவரும் சென்ற வாரம் தான் துபாயிலிருந்து சென்னை வந்தோம். மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட்டில் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதித்து விட்டு, சில கேள்விகள் அடங்கிய படிவத்தை நிரப்பச் சொல்லி விட்டு அனுப்பி விட்டார்கள். உடனே அனுப்பியதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அந்த சமயத்தில் ஐக்கிய அரபுக்குடியரசில் [ துபாய், ஷார்ஜா உள்ளிட்ட ஏழு எமிரேட்கள் அடங்கிய நாடு] கொரோனா மரணங்கள் இல்லை. அதிகமான பாதிப்பும் மரணங்களும் ஏற்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத்தான் அந்த சமயத்தில் அதிகமான பரிசோதனைகள் இருந்தன. இருந்தாலும் பாதிப்புகள் சைனாவிலிருந்து உலக நாடுகளூக்கு பரவிய சமயத்திலேயே நம் இந்தியா கவனமாக இருந்திருந்தால் இந்த அளவு பாதிப்புகள் கூட ஏற்பட்டிருக்காது என்ற விமர்சனங்களும் உண்டு. ஆனாலும் இப்போது போர்க்கால நடவடிக்கைகள் எடுத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

ஸ்ரீராம். said...

செம....   செம பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. அனைவருக்கும் இந்த பேரிடர் பற்றிய புரிதல் வேண்டும். நலமே விளையட்டும்.

ஸ்ரீமலையப்பன் said...

அருமை

Srimalaiyappanb said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

மிகவும் தேவையான பதிவு.
இன்று அமைச்சரின் நேர்காணலைப் பார்த்தேன்.
மிக மிக அமைதியாக எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் இருக்கும் ஊரில் கூட இந்தத் தெளிவு இல்லை.
மக்கள் தனிமையாக இருக்கப் பழகுகிறார்கள்.
ஆனால் அரசு இயந்திரம் பதில் சொல்ல்வே தடுமாறுகிறது.
மருத்துவர்கள் எங்கள் குழந்தைகளுக்காக எங்களை வாழ விடுங்கள்.
நோயின் விபரீதத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
என்று கேட்டு உணர வைக்கிறார்கள்.
நம் பாரதம் வெற்றி பெறும். மக்கள் சட்டங்களை மதிக்க வேண்டும்.
மிக நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு பதிவு.

Post a Comment