Monday, March 16, 2020

காதலும் கவிதையும்...

"காதலர்கள் காதலில் தோற்று
தற்கொலை செய்துகொள்வது
தொடர்ந்து நடக்கிற போதும்...

கவிதைகள் என்கிற பெயரில்
குப்பை கூளங்கள்
தொடர்ந்துப் பெருகிடும் போதும்...

காதலும் கவிதையும் மட்டும்
எப்படி நித்தமும் புத்தம் புதிதாய்த்
தழைத்தபடியே இருக்கிறது

பதினாறு வயது மார்க்கண்டேயனாய்
எப்படி இளமைத் துடிப்புடன்
நிலைத்தபடியே இருக்கிறது " என்றான்
புதிதாய்க் காதல்வலையில் சிக்கிய நண்பன்

" எல்லாம்
அசட்டுத் துணிச்சலும்
குருட்டு நம்பிக்கையும்
 தரும் பலத்தால் தான் "என்றேன் சிரித்தபடி

"இது காதலை அறியாதவனின்
பொறாமைப் புலம்பல் " என்றான் எரிச்சலுடன்

"அரசியல் செய்யவில்லை என்றால்
அரசியல் தெரியாது என்று அர்த்தமில்லை
அப்படித்தான்
காதலிக்கவில்லை என்றால்
காதல் புரியாது என்றும் அர்த்தமில்லை" என்றேன்

"எனக்குத் தேவை
 புத்திசாலித்தனப் புலம்பல் இல்லை
ஏற்றுக் கொள்ளும்படியான
தெளிவான விளக்கம் " என்றான்

"பகைவனின் கோட்டைக்குள்
காதலி இருக்கிறாள் எனில்..

கிடைக்கும் நூலேணி பிடித்தோ
ஒட்டடை நூல் பிடித்தோ
ஏறும் அசட்டுச் துணிச்சலையும்...

ஒரு சந்தம் கிடைத்ததென்றால்
ஒரு சொல் கவர்ந்ததென்றால்...

அதைக் கொண்டே
ஒரு காவியம் இயற்றிவிடலாம் எனும்
குருட்டு நம்பிக்கையையும்

நிச்சயம்
காதல் உணர்வும்
கவிதை மனமும் மட்டுமே தரும்.

அதனால்தான்
காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்..

குப்பைகள் நிறைந்தபோதும்
கவிதையும் வீரியம் குறையாதும்

தொடர்ந்து கொண்டிருக்கிறது "என்றேன்

இதனை ஒப்புக் கொண்டானா
எனத் தெரியவில்லை
ஆனால் பதில் கேள்வி எழுப்பவில்லை

10 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல சிந்தனை.. தங்கள் விளக்கம் வெகு அருமை. அந்த நண்பர் இறுதியில் பதில் ஏதும் எழுப்ப முடியாமல் போனதே, உங்களின் ஆணித்தரமான விளக்கங்கள் வெற்றி அடைந்து விட்டதை உறுதியாக்கி விட்டது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பதில்...

kowsy said...

இதை ஒருதன் உங்களுடன் கேட்டானா இல்லை நீங்களே உங்களுக்குள் சிந்தித்தீர்களா. அப்பப்பா எத்தனை சிந்தனை இது உங்களால் மட்டும்தான் முடியும் உங்களுக்கு என்றே ஒரு தனிப் பாணி. ஒவ்வொரு பதிவிலும் இதை உணர்கின்றேன்

சிகரம் பாரதி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது காதலும் கவிதையும்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

ஸ்ரீமலையப்பன் said...

அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல பதில்

ஸ்ரீராம். said...

தெளிவான அலசல்.  கூட கொஞ்சம் ஹார்மோனையும் சேர்த்திருக்கலாம்!

Yarlpavanan said...

நல்லெண்ணங்கள் அலசப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

Bhanumathy Venkateswaran said...

//"அரசியல் செய்யவில்லை என்றால்அரசியல் தெரியாது என்று அர்த்தமில்லைஅப்படித்தான்காதலிக்கவில்லை என்றால்காதல் புரியாது என்றும் அர்த்தமில்லை" என்றேன்// ஆனால் காதலில் இருப்பபவர்களுக்கு இது புரியாது, உங்களின் அடுத்த அடியில் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே. சபாஷ்!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விளக்கம் ரமணி ஜி.

Post a Comment