வித்யா கர்வம் தந்த மிடுக்கில்
அவர் கண்களில் தெரியும்மேதமைத்தனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதற்காகவே நானும் கவிஞனாகத் துடித்தேன்
ஆயினும் "எப்படி" எனத்தான் தெரியவில்லை
அவர் அறிந்தோ அறியாமலோ
அவரது காலகள் தரையில் இருந்தபோது
"கவிஞனாவது எப்படி " என்றேன்
"படி நிறையப் படி
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
எவ்வப்போது முடியுமோ அப்போதெல்லாம் "என்றார்
நான் படிக்கத் துவங்கினேன்
எழுத்து புரிந்தது
எழுதுவோனின் எண்ணம் புரிந்தது
சில போது ஆடையிடும் அவசியமும்
சிலபோது அம்மணமாய் விடும் ரகசியமும்
ஆனாலும் கூட எப்படி எனப் புரிந்த எனக்கு
"எதனை" என்கிற புதுக் குழப்பம் வந்தது
இப்போது அவர் தளர்ந்திருந்தார்
நான் வாலிபனாய் வளர்ந்திருந்தேன்
"கண்ணில் படும் அனைத்தையும் பார்
எல்லோரையும் போலல்லாது வித்தியாசமாய்
இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில்
இனி யாரும் பார்க்க முடியாத கோணத்தில் " என்றார்
நான் பார்க்கத் துவங்கினேன்
பார்க்கத் தெரிந்தது
பார்வையைச் சார்ந்தே பொருளிருப்பதும்
பார்வைபடாத பகுதிகளே அதிகம் இருப்பதும்
உள் இமையை திறக்கும் உன்னத ரகசியமும்
ஆனாலும் கூட எதனைஎனப் புரிந்த எனக்கு
"ஏன் " என்கிற பெரிய குழ்ப்பம் வந்தது
இப்போது அவர் பழுத்தவராய் இருந்தார்
நான் தளரத் துவங்கியிருந்தேன்
முன்னிரண்டு கேள்விகளுக்கு
சட்டெனப் பதில் சொன்னவர்
இப்போது ஏனோ மௌனம் சாதித்தார்
பின் மெல்லிய குரலில்
"இதுவரை எனக்குத் தெரியவில்லை
உனக்கு ஒருவேளைதெரியக் கூடுமாயின்
அடுத்தவனுக்கு அவசியம் சொல் " என்றார்
இப்போது பதிலறியா கேள்வி என்னிடத்தில்
நான் அலைந்து கொண்டிருக்கிறேன்
6 comments:
நல்லது...
மிக அருமை!
அருமை.
கீதா
அருமை! தேடல் தொடரட்டும்.
சிறப்பு. தொடரட்டும் உங்கள் கவிதைகள்.
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை (2)
Post a Comment