Thursday, October 27, 2022

சும்மா ஜாலிக்கு ஒரு டெஸ்ட்..

.  

               

           

 நீங்கள் சுயநலவாதியா? பொது நல வாதியா? இதைப் படியுங்கள் தெரிந்துவிடும்...*


நாம் எல்லோருமே நமக்குப் பிறர் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வண்டி `பஞ்சர்' ஆகி நடுவழியில் அல்லாடிக் கொண்டிருந்தாலும் சரி, முன்பின் பழக்கமில்லாத இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாலும் சரி... தேடி வந்து யாராவது நமக்கு உதவாவிட்டால், `என்னடா உலகம் இது' என்று சலித்துக்கொள்கிறோம்.


ஆனால், பிறருக்கு உதவி செய்வதில் நாம் எப்படி என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா!


நீங்கள் சுயநலவாதியா.. இல்லையா? இதோ ஒரு `டெஸ்ட்'...


1. ஆளவரமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு நபர், லிப்ட் கேட்டு கட்டை விரல் உயர்த்திக்கொண்டிருக்கிறார். அப்போது...


அ. வண்டியை நிறுத்தி, அவர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்பேன். நான் செல்லும் வழியில் அந்த இடம் இருந்தால் அவரை ஏற்றிச் செல்வேன்.


ஆ. வண்டியின் வேகத்தைக் குறைப்பேன். அவர் நாகரீகமாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத் தோன்றினால் லிப்ட் கொடுப்பேன். இல்லாவிட்டால் வேகமெடுத்து வண்டியை ஓட்டுவேன்.


இ. `ஓசி கிராக்கி' என்று மனதுக்குள் கடுகடுத்துக் கொண்டு நிற்காமல் சென்றுவிடுவேன்.



2. வண்டியில் செல்லும்போது ஒரு விபத்தைக் கண்டால்...


அ. நின்று, வண்டியை ஓரங்கட்டிவிட்டு, காயம்பட்டவர்களை மீட்டு உதவி செய்வேன்.


ஆ. விபத்தில் சிக்கிய வாகனங்களின் எண்களைக் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நகர்வேன்.


இ. திரண்டிருக்கும் கூட்டத்தை `ஹாரன்' அடித்து ஒதுங்கவைத்துவிட்டு, போய்க்கொண்டே இருப்பேன்.



3. நாட்டிலோ, உங்கள் மாநிலத்திலோ இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?


அ. என் நேரம், பணம், வசதிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டோருக்கு உதவுவேன்.


ஆ. பிரதமரின் நிவாரண நிதிக்குக் காசோலை அனுப்புவேன். நிவாரணப் பொருட்களைச் சேகரிப்போரிடம் பழைய ஆடைகளைக் கொடுப்பேன்.


இ. அதிகபட்சமாய் எனது ஒருநாள் சம்பளத்தை உதவியாய் அளிப்பேன்.



4. தெருவில் சில இளைஞர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டிருப்பதைக் காணும் நீங்கள்...


அ. அவர்களை ஜாக்கிரதையாக நெருங்கி, சமாதானப்படுத்த முயல்வேன்.


ஆ. `கலைந்து போங்கள்... இல்லாவிட்டால் போலீசை கூப்பிடுவேன்' என்று எச்சரிப்பேன்.


இ. `எனக்கென்ன வந்தது?' என்று என் பாட்டுக்குப் போவேன்.



5. நடந்து செல்கையில், காயம்பட்ட ஒரு பிராணியைக் காண்கிறீர்கள். உடனே...


அ. அந்த பிராணியை அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வேன். அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.


ஆ. பிராணிகள் நல அமைப்பை தொலைபேசியில் அழைத்து, விவரம் சொல்வேன்.


இ. யாராவது கவனிப்பார்கள். எனக்கு வேலையிருக்கிறது என்று நடையைக் கட்டுவேன்.



6. உங்கள் கண் முன்னே கத்தியால் தாக்கி வழிப்பறிக் கொள்ளை நடக்கிறது. அவ்வேளையில்...


அ. கொள்ளையைத் தடுப்பதற்கு ஓடுவேன். ஆட்களைத் திரட்டி, கொள்ளைக்காரர்களால் காயப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவேன்.


ஆ. நைசாக நழுவி, போலீசுக்கு தகவல் கொடுப்பேன். கொள்ளைக்காரர்கள் அகன்றபின்பே, காயம்பட்டவர்களை நெருங்குவேன்.


இ. ஏன் `ரிஸ்க்' எடுக்கணும் என்று அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவேன்.



7. கூட்டத்தில் மின்சார ரெயில் பெட்டியில் ஏற அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஒரு முதியவர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?


அ. அவருக்கு உதவுவேன். அதனால் நான் பிடிக்கவேண்டிய ரெயிலை தவற விட்டாலும் கவலைப்படமாட்டேன்.


ஆ. அந்தப் பெட்டியில் ஏறும் யாரையாவது அழைத்து, அந்த முதியவருக்கு உதவும்படி கூறுவேன்.


இ. என் ரெயிலைப் பிடிப்பதற்காக நான் போய்விடுவேன்.



8. உங்கள் பகுதியில் வீடற்ற பிளாட்பாரவாசிகள் சிலர் வசிக்கிறார்கள். நீங்கள்...


அ. வாரம் ஒருமுறை அங்கு சென்று, பிஸ்கட், பழைய துணி, குழந்தைகளுக்குப் பழைய விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விட்டு வருவேன்.


ஆ. உள்ளூர் தொண்டு நிறுவனத்துக்கு எப்போதாவது ஒரு தொகை கொடுப்பேன். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைப்பேன்.


இ. போலீசாரை அழைத்து, பிளாட்பாரவாசிகளின் ஆக்கிரமிப்பு, தொல்லை குறித்துப் புகார் செய்வேன்.



*உங்களுக்கான முடிவு:*


* உங்கள் பதிலில் அதிகமாக `அ' என்றால்...


நீங்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர் மட்டுமல்ல, பிறருக்கு உதவி செய்வதற்காக ரொம்பவே விரும்புகிறவர். இது உயர்ந்த விஷயம், கட்டாயம் தொடர வேண்டியது என்றபோதும், உங்களுக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வும் வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டு விடக் கூடாது. காரணம், உதவும் உள்ளம் கொண்டவர்களை உறிஞ்ச நினைப்பவர்கள் உலவும் உலகம் இது.


* அதிகமாக `ஆ' என்றால்...


பிறருக்கு உதவுவதில் நடைமுறை சார்ந்து யோசிப்பவர் நீங்கள். அடுத்தவருக்கு உதவி செய்வதில் எளிதானதைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள். உங்களின் அதிகபட்ச எச்சரிக்கை உணர்வு, கூடுதலான பேருக்கு நீங்கள் உதவுவதைத் தடுத்து

விடும் என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.


* அதிகமாக `இ' என்றால்...


நீங்கள் நகரவாசியாக இருக்கக்கூடும். எந்திர வாழ்க்கையானது பிறரின் வறுமையையும், அவதியையும் கண்டுகொள்ளாத அளவு உங்களை மரத்துப் போகச் செய்துள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் செய்வது சிறிதாயிருந்தாலும், அவர்களுக்கு அது அந்த நேரத்தில் பெரிதா யிருக்கும் என்பதை உணருங்கள். உங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உதவுவது, உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கும் கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றி என்று நினையுங்கள். உதவும் உள்ளமே உயர்ந்த உள்ளம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கேள்விகள்... அருமை...

Post a Comment