Thursday, January 26, 2012

பண்பாடும் கலாச்சாரமும்

பொருளின் நிலையும் தரமும் மாறுபடுகையில்
பழைய அளவு கோல்கள் கொண்டு
அளக்க முயல்வதே பத்தாம் பசலித்தனம்தான்

குடிப்பவனெல்லாம் முன்பு தீயவனாய்த் தெரிந்தான்
நல்லவேளை இப்போது
எல்லோரும் குடிப்பதால் அப்படியில்லை
குடித்து "சலம்புபவன்  " மட்டுமே தீயவனாகிறான்
இப்படிக் கொள்வது கூட ஒருவகையில்
அனைவருக்கும் வசதியாகத்தானே இருக்கிறது ?

பிறன்மனை நோக்காமையே  முன்பு
பேராண்மையாய் பேசப்பட்டது
நம்முடைய நல்ல காலம் இப்போது அப்படியில்லை
சிறு வீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே
இப்போது  பேராண்மை தீர்மானிக்கப் படுகிறது
இது கூட ஆண்களுக்கு ஒரு நல்ல
வாய்ப்பாகத்தானே படுகிறது ?

லஞ்சம்வாங்குதல் கூட முன்பு
கேவலமாகத்தான் கருதப்பட்ட்டது
நல்லவேளை இப்போது அப்படி நினைப்பதில்லை
லஞ்சம் வாங்கியும் காரியம் முடிக்காதவனே
இப்போது கயவனாகக் கருதப்படுகிறான்
இந்த மாறுதல் கூட அனைவருக்கும்
ஏற்புடையதாகத்தானே இருக்கிறது ?

தன் கொள்கைக்கு முன் உதாரணமாய் திகழ்பவரே
முன்பு தலைவராக ஏற்றுக் கொள்ளப் பட்டார்
நல்லவேளை இப்போது அந்தக் கருமாந்திரம் இல்லை
தன் கொள்கைக்கு தானே எமனாக இருந்தாலும்
மேடையில் சிறப்பாகப் பேசத் தெரிந்தவரும்
எதிரணியை மிக நன்றாக ஏசத் தெரிந்தவருமே
தலை சிறந்த தலைவராகிறார்
அந்தத் தலைமையும் அனைவருக்கும்
 உடன்பாடாகத்தானே  இருக்கிறது ?

எந்த அளவுக்கும் சரிப்பாடாத வகையில்
பொருளின் தரமும் நிலையும்
அடியோடு மாறுகிற வரையில்
இப்போது போல
அள்வுகோல்களை மாற்றிக் கொண்டே போவோம்
அதுதான் நாகரீகமானது மட்டுமல்ல
புத்திசாலித்தனமானதும் கூட
ஊரோடு ஒட்டி வாழலே
நம்து கலாச்சாரம் கற்றுத் தந்த   
உயரிய  பண்பாடு இல்லையா ?

93 comments:

நிரூபன் said...

வணக்கம் ரமணி அண்ணர்,
என்னோட விமர்சனத்தை சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்களா?

இந்தப் பதிவினை இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தலாம்.

வசன கவிதை என்ற வகைக்குள் வரும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க. ஆனால் உரை நடைத் தமிழ் தான் பதிவு முழுவதும் வெளிப்பட்டு நிற்கிறது.

இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தி, கவிதை நடைக்குள் கொண்டு வர முயற்சிக்கலாம் அல்லவா?

சிறியேனின் கருத்தினைப் பரிசீலிப்பீங்க என்று நினைக்கிறேன்.

Ramani said...
This comment has been removed by the author.
Ramani said...

கருத்துக்கு நன்றி
இது நான் அறிந்தே செய்வதே
மரபுக் கவிதை போல
வசன கவிதையின் இறுக்கம் கூட பலரை
கவிதை கண்டு மிரள வைத்துப் போகிறது
வசன கவிதைக்கும் உரை நடைக்கும் இடையிலான
ஒரு நடையில் சொல்லிப் போகையில்
கருத்து மிகச் சரியாகப் போய்ச் சேர்வதாகவும்
கவிதையின் பால் புதியவர்கள்ஆர்வம் கொள்ளவும்
வழிவகுக்கலாம் என்கிற எண்ணத்தில்
இப்படிச் செய்கிறேன்
மார்ச் மாதப் பதிவில் உள்ள யாதோ என்கிற பதிவு
ஒருவேளை உங்களுக்கு நல்ல விளக்கமாக அமையலாம்
மீண்டும் தங்கள் கருத்துக்கு நன்றி கூறி..

துளசி கோபால் said...

கவிதை என்றாலே காத தூரம் ஓடுவேன். ஆனா.... உங்க 'கவிதை' படிக்கவும் புரிஞ்சுக்கவும் எளிமையா இருக்கு.

இதுதான் வசனக் கவிதைங்களா!!!!!

நிரூபன் said...

நன்றி ரமணி அண்ணா,
இந்த முறையும் நல்ல முயற்சி தான்,
நான் நீங்கள் புதிதாக இப்படி ஓர் முயற்சியை கையிலெடுத்திருப்பதனை அறியாது பின்னூட்டி விட்டேன்.

Ramani said...

துளசி கோபால் //

தங்கள் பின்னூட்டம் எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது
இதற்காகத்தான் எழுதுகிறேன்
நான் எழுதுவது எதுவும் கவிதையுமில்லை
வசனமுமில்லை வசன கவிதையுமில்லை
அனுபவங்களை சொல்ல விரும்பும் கருத்துக்களை
எளிய மொழியில் புரியும் வகையில் சொல்ல முயல்கிறேன்
சில நேரங்களில் முடிந்தால் உணரும் படியும்..
கதையின் நீளமும் கவிதையின் செறிவும்
படிப்பவர்களை அச்சுறுத்திப்போகிறது
அதைத் தவிர்க்கவே இந்தப் பாணி
வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க.

ரமேஷ் வெங்கடபதி said...

இதைத்தான் பரிணாம வளர்ச்சி என்று பகுத்து, அறிவியலார் சொல்கிறார்களோ?4!

Lakshmi said...

நீங்க இப்படி எழுதுவதுதான் புரிஞ்சுக்க ஈசியா இருக்கு.

Avargal Unmaigal said...

ரமணி சார் இப்படியே எல்லோருக்கும் (குறிப்பாக என்னை மாதிரி உள்ளவர்களுக்காக) புரியும் படியாக எழுதுங்கள். கருத்து நாலு பேருக்கு புரியும் படி இருக்க வேண்டுமே தவிர சட்டவரையறைக்குட்பட்டு யாருக்கும் புரியாமல் எழுதுவதால் என்ன பலன்.

இறுதியாக எப்படி எழுத வேண்டும் எண்ண எழுத வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அதை மற்றவர்கள் சொல்வதற்க்காக மாற்ற வேண்டாம்.

ஒவ்வொரு பதிவாளனும் என்ன,எதை எப்படி எழுத வேண்டும் என்பதை அவந்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதற்கு பெயர்தான் எழுத்து சுதந்திரம். சில பத்திரிக்கைகளுக்கு நாம் எழுதினால் அவர்கள் போடும் சட்டதிட்டங்களுக்கு உடபட்டு நாம் எழுத வேண்டும் ஆனால் இந்த வலையுலகத்தில் அந்த சட்ட திட்டம் கிடையாது.

நான் தவறுதலாக ஏதும் சொல்லிய்ருப்பதாக நினைத்தால் மன்னிக்கவும்

Avargal Unmaigal said...

//குடிப்பவனெல்லாம் முன்பு தீயவனாய்த் தெரிந்தான்
நல்லவேளை இப்போது
எல்லோரும் குடிப்பதால் அப்படியில்லை //

என்னைப் பற்றி உங்கள் பதிவில் குறிப்பிட்டதற்கு நன்றி....ஹீ...ஹீ....ஹீ

Avargal Unmaigal said...

மாறுதலை ஏற்று கொள்வது நல்லது அது யாரையும் பாதிக்காதவரை. அதுதான் இந்த கால நவின கலாச்சாரம்

ஸாதிகா said...

பண்பாடும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் நடைமுறையத்தான் அழகாக கண்முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள்1

தமிழ் உதயம் said...

அளவுகோலை மாற்றினால் தான் வாழவும் முடியும். அருமையான படைப்பு.

சசிகுமார் said...

லஞ்சம் வாங்குவது இப்பொழுது பெருமையாக நினைக்க படுகிறது.....

Ramani said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

வீடு நிறைய உணவுப் பொருட்கள் இருந்து சாப்பிடாமல் இருந்தால்தான்
அதன் பேர் விரதம்,இல்லையேல் அதன் பேர் பட்டினி
மரபும் வசன கவிதையின் நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்து தான்
இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன்
பதிவுலக இலக்கியம் என்று ஒருவேளை ஒன்று
பிற்காலத்தில் உண்டாகுமானால் அதன் பாணி இப்படி
புதியவர்களை மிரளாமல் கடலுக்குள் செல்ல பழக உதவும்
படகுத் துறைகளாக இருப்பதே சரியாக இருக்கும் எனப்து
என்னுடைய எண்ணம்
தங்கள் தொடர் வரவுக்கும் உற்சாகமூட்டும் தொடர்
பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தமிழ் உதயம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

நிரூபன் said...

ரமணி அண்ணா, உங்கள் பதிவை திசை திருப்பனும் என்றோ, உங்கள் பதிவிற்கு எதிர்க் கருத்துச் சொல்லனும் என்ற நோக்கிலோ நான் பின்னூட்டமிடவில்லை.

பதிவுலகில் நீங்கள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் எளிமையான கவிதை வடிவம் பற்றி அறியாது நான் எழுதிய பின்னூட்டம் அது.

என் கருத்து பிடிக்கவில்லை என்றால் நீக்கி விடுங்கள். 

dhanasekaran .S said...

குடிப்பவனெல்லாம் முன்பு தீயவனாய்த் தெரிந்தான்
நல்லவேளை இப்போது
எல்லோரும் குடிப்பதால் அப்படியில்லை
குடித்து "சலம்புபவன் " மட்டுமே தீயவனாகிறான்

இயல்பை சொல்லும் அருமையான சொல்லாடல்.

Ramani said...
This comment has been removed by the author.
Ramani said...

dhanasekaran .S //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

நிரூபன் //

தாங்கள் எழுதி இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்ததுஉங்கள் பின்னூட்டத்தில் எவ்வித உள் நோக்கமும் இல்லைஒரு நண்பனிடம் கொள்ளும் உண்மையான அக்கறைஅதில் இருந்தது.
தாங்கள் எழுதியது கூட ஒரு வகையில் நல்லதுதான்
இந்தவகை பதிவுகள் குறித்து பதிவர்கள் கருத்தையும்
அறிந்துகொண்டால் நான் தொடரவோ அல்லது என்னைமாற்றிக் கொள்ளவோ ஏதுவாக இருக்கும்
மீண்டும் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கூறி...

மரு.சுந்தர பாண்டியன் said...

சரியான சாட்டை அண்ணா...

Ramani said...

மரு.சுந்தர பாண்டியன் //

தாங்கள் இப்படிச் சொல்வதை விட
இந்தபாணி எழுத்து குறித்த தங்கள் கருத்தைச் சொல்வது
எனக்கு உதவிகரமாக இருக்கும்
தங்கள் வரவுக்கும் பின்னூடத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அமைதிச்சாரல் said...

மாற்றம் ஒண்ணுதான் உலகத்துல மாறாததுன்னு சொல்லுவாங்க. அது சரியாத்தான் இருக்கு.

Ramani said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

sasikala said...

சமூக அவலங்களும் தற்போது சரியாகிப் போவதை எடுத்துரைக்கும் வரிகள் அருமை அடி மனதில் வலி இருக்கத்தான் செய்கிறது ஐயா

நான் தமிழன் said...

sir

impressed very much, especially these lines

//குடிப்பவனெல்லாம் முன்பு தீயவனாய்த் தெரிந்தான்
நல்லவேளை இப்போது
எல்லோரும் குடிப்பதால் அப்படியில்லை
குடித்து "சலம்புபவன் " மட்டுமே தீயவனாகிறான்
இப்படிக் கொள்வது கூட ஒருவகையில்
அனைவருக்கும் வசதியாகத்தானே இருக்கிறது ?//

புலவர் சா இராமாநுசம் said...

// லஞ்சம்வாங்குதல் கூட முன்பு
கேவலமாகத்தான் கருதப்பட்ட்டது
நல்லவேளை இப்போது அப்படி நினைப்பதில்லை
லஞ்சம் வாங்கியும் காரியம் முடிக்காதவனே
இப்போது கயவனாகக் கருதப்படுகிறான்
இந்த மாறுதல் கூட அனைவருக்கும்
ஏற்புடையதாகத்தானே இருக்கிறது//

இன்றைய சமுதாயத்தின் அவலங்களை
தெளிவாக்கியுள்ளீர்! அருமை!

சா இராமாநுசம்

bandhu said...

கவிதை என்றால் எனக்கு அலர்ஜி. ஆனால் இந்த எழுத்தை மிகவும் ரசித்தேன்..
போகிற போக்கை பார்த்தால் கற்பழிப்பவன் நல்லவனாகவும் கற்பழிப்போடு கொலையும் செய்பவன் மட்டுமே கெட்டவனாகவும் ஆகிவிடும் ஆபத்தும் இருக்கிறது!
இன்னொன்று. லஞ்சம் வாங்குபவர்களுக்கு இன்றைய பெயர்.. சாமர்த்திய சாலி.. பிழைக்க தெரிந்தவன்..

Ramani said...

sasikala //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

நான் தமிழன் //


impressed very much, especially these lines//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம்

இன்றைய சமுதாயத்தின் அவலங்களை
தெளிவாக்கியுள்ளீர்! அருமை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

bandhu //

கவிதை என்றால் எனக்கு அலர்ஜி. ஆனால் இந்த எழுத்தை மிகவும் ரசித்தேன்..
போகிற போக்கை பார்த்தால் கற்பழிப்பவன் நல்லவனாகவும் கற்பழிப்போடு கொலையும் செய்பவன் மட்டுமே கெட்டவனாகவும் ஆகிவிடும் ஆபத்தும் இருக்கிறது //!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

ஆம் ரமணி சார் !

இப்போது நம் உயரிய நாணல் ? or

பச்சோந்திக் ?கலாச்சாரம்

மேற்கத்தியக் கலாச்சாரத்தை

சீரழிக்காமல் இருந்தால் சரி !

கசையடி , நெத்தியடி , நச் , நறுக் ..

துரைடேனியல் said...

//பிறன்மனை நோக்காமையே முன்பு
பேராண்மையாய் பேசப்பட்டது
நம்முடைய நல்ல காலம் இப்போது அப்படியில்லை
சிறு வீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே
இப்போது பேராண்மை தீர்மானிக்கப் படுகிறது
இது கூட ஆண்களுக்கு ஒரு நல்ல
வாய்ப்பாகத்தானே படுகிறது ?//

//எந்த அளவுக்கும் சரிப்பாடாத வகையில்
பொருளின் தரமும் நிலையும்
அடியோடு மாறுகிற வரையில்
இப்போது போல
அள்வுகோல்களை மாற்றிக் கொண்டே போவோம்
அதுதான் நாகரீகமானது மட்டுமல்ல
புத்திசாலித்தனமானதும் கூட
ஊரோடு ஒட்டி வாழலே

நம்து கலாச்சாரம் கற்றுத் தந்த
உயரிய பண்பாடு இல்லையா ? //

- ரமணி சார்! எனக்கு இதில் உடன்பாடு இல்லை. அளவுகோல்கள் மாறக் கூடாது என்பதே என் எண்ணம். பிறன்மனை நோக்காமைதான் அளவு கோல்.இதில் எந்த சமரசமும் செய்துகொள்ள தேவையில்லை. நீங்கள் இப்படி ஊரேடு ஒத்து வாழ வேண்டும் என்று தெரிவிப்பது அழகா? இல்லையே.எதில்தான் உடன்படுவது என்று வித்தீயாசம் வேண்டாமா? சில விஷயங்களில் மட்டும் ஊரோடு ஒத்து வாழலாம். எல்லா விஷயங்களிலுமல்ல. நம் எழுத்துக்கள் சமுதாயத்தை சீர்படுத்தும் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஆபாசமும் அறுவெறுப்பும் நிறைந்த பதிவுலகில் இருக்கும் தரமான சில பதிவர்களில் ஒருவரான நீங்கள் இப்படி இந்த ரீதியில் ஊரோடு ஒத்து வாழ அறிவுறுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மற்றபடி புது கவிதா பாணி அருமை. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

RAMVI said...

நல்ல கவிதை.

சில விஷயங்களை ஒத்துக்கொள்ளவே முடிவதில்லை.

மனோ சாமிநாதன் said...

நம் பண்பாடும் கலாச்சாரமும் மெல்ல மெல்ல அழிந்து போகிற நிலையைத்தான் தற்போதைய மாற்ற‌ங்கள் ஏற்படுத்துகின்றன! வஞ்சப் புகழ்ச்சி போன்று தங்களின் வேதனை மிகுந்த சாட்டையடி சிலருக்கு புரியாமல் போகும். அதை விடுத்து, தங்களின் இயல்பான சொல்லலங்காரத்துடன் நல்லவைகளை அழிக்கும் மாற்றங்களை நீங்கள் சீற்ற‌முடன் நேரடியாக சாடியிருக்கலாம்!

துரைடேனியல் said...

தமஓ 10.

துரைடேனியல் said...

தங்களது அங்கதத் தொனியை தவறாக புரிந்துகொண்டேன். மறுபடி ஒருமுறை வாசித்தபோது உணர்ந்தேன். எனது முந்தைய கருத்துரையை அழித்துவிடுங்கள் சார்!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
நல்லவேளை – என்று குடிப்பதையும், நல்ல காலம் – என்று சில ஆண்கள் தேடும் துணை வாழ்க்கையையும், நல்ல வேளை – என்று லஞ்சம் வாங்குவதையும் அரசியல்வாதி நியாயப் படுத்துவது போல் சொல்லும் வரிகளாக, (அரசியல்வாதி பாட்டு என்று) எடுத்துக் கொண்டேன். இவை உலகத்தோடு ஒட்ட இருப்பவை அல்ல. எப்போதும் கண்டிக்கப்பட வேண்டியவை. எழுதியதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்!

அரசன் said...

சாடிய விதம் சிறப்பு..
கடைசியில் கூறிய விதமும் கலக்கல்.. வாழ்த்துக்கள் சார்

Anonymous said...

romba nalla irukku...appudithane valarurom...super

Ramani said...

துரைடேனியல் //

இந்தக் கோபம் சரியே

எந்த அளவுக்கும் சரிப்பாடாத வகையில்
பொருளின் தரமும் நிலையும்
அடியோடு மாறுகிற வரையில்
இப்போது போல
அள்வுகோல்களை மாற்றிக் கொண்டே போவோம்
அதற்கு அடுத்த அடியாக
அப்படியே நாசமாகவும் போவோம் என எழுதிபின்
அப்படி சொல்லித்தான் தெரிய வேண்டுமா
என அழித்துவிட்டேன்
தங்கள் பின்னூட்டம் கண்டபின்
அதை எழுதி இருக்கலாமோ எனத் தோன்றியது
விரிவான தார்மீக கோபமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

K.s.s.Rajh said...

அருமையான கவிதை பாஸ் சிறப்பாக இருக்கு ஆனால் உங்கள் வழமையான கவிதைகளில் இருந்து இந்த ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசப்படுகின்றது அருமை

Ramani said...

கலை //

கவிதை பாணியிலேயே பின்னூட்டமிட்டமைக்கு
வாழ்த்துக்கள்

Ramani said...

அரசன் //

கவிதையின் நோக்கத்தை
மிகச் சரியாக புரிந்து கொண்டு
அழகாக பின்னூட்டமிட்டமைக்கு
வாழ்த்துக்கள்

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //

இந்தக் கோபம்பெரும்பாலோருக்கு வராமல்
சகித்துக் கொள்ளுகிற எரிச்சலில்
நொந்து எழுதிய பதிவு
இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாமோ ?
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

K.s.s.Rajh //

அருமையான கவிதை பாஸ் சிறப்பாக இருக்கு ஆனால் உங்கள் வழமையான கவிதைகளில் இருந்து இந்த ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசப்படுகின்றது

கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தது
சிலரை மட்டும் கொஞ்சம் குழப்பிவிட்டது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மனோ சாமிநாதன் //

வஞ்சப் புகழ்ச்சி போன்று தங்களின் வேதனை மிகுந்த சாட்டையடி சிலருக்கு புரியாமல் போகும். அதை விடுத்து, தங்களின் இயல்பான சொல்லலங்காரத்துடன் நல்லவைகளை அழிக்கும் மாற்றங்களை நீங்கள் சீற்ற‌முடன் நேரடியாக சாடியிருக்கலாம்!

நீங்கள் சொல்வது மிகச் சரி
கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தது
சிலரை மட்டும் கொஞ்சம் குழப்பிவிட்டது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரவாணி //

கசையடி , நெத்தியடி , நச் , நறுக் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி ..

Ramani said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி ..

விமலன் said...

எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட சமூகம்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்/

Ramani said...

விமலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Anonymous said...

ஊரோடு ஒட்டி வாழலே
நம்து கலாச்சாரம் கற்றுத் தந்த
உயரிய பண்பாடு...

உண்மை தான் ரமணி சார்...

நிறைய மரபுக்கவிதைகளுக்கிடையே சில வசனக்கவிதைகள் சரியே ரமணி சார்..

என்ன... புலவர் அய்யா ..மற்றும் உங்களைப்போல் நிறைய பேர் இல்லை மரபுக்கவிதை எழுத...அது அழியாமல் காக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது...இது என் ஆதங்கம் + கோரிக்கை + செல்ல கட்டளை ..உங்களுக்கு...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை சார்...

வாழ்த்துகள்....

பி.அமல்ராஜ் said...

வணக்கம் ரமணி அண்ணா, வாழ்வியலின் பல விடயங்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் நோக்கப்படும் உங்கள் கவிதை என்னை கவர்ந்துவிட்டது. வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

//நீங்கள் சொல்வது மிகச் சரி
கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தது
சிலரை மட்டும் கொஞ்சம் குழப்பிவிட்டது//

எதுவும் புதிதாக வரும் போது சிறிது குழப்பமாகதான் இருக்கும் .குழப்பமாக இருப்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை முயற்சி செய்ய வேண்டும் ஒரு செய்தி நமக்கு புரியவில்லை என்றால் அந்த செய்தி தவறு என்று எடுத்து கொள்ள கூடாது. "நமக்கு புரியவில்லை" என்பதுதான் தவறு. அதனால் புரியாதவர்களையும் குறை கூறுபவர்களையும் அப்படியே ஒதுக்கிவிட்டு உங்கள் முயற்சியை தொடருங்கள் ரமணி சார்

ஹேமா said...

நீங்கள் கவிதைக்காக எடுத்துக்கொள்ளும் கரு ஒவ்வொருமுறையும் என்னை அதிசயிக்க வைக்கிறது.மூத்தோர் சொல் வாக்காகிறது உங்கள் கவிதைகள் எல்லாமே !

நிரூபன் said...

குழப்பமாக இருப்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை முயற்சி செய்ய வேண்டும் ஒரு செய்தி நமக்கு புரியவில்லை என்றால் அந்த செய்தி தவறு என்று எடுத்து கொள்ள கூடாது. "நமக்கு புரியவில்லை" என்பதுதான் தவறு. அதனால் புரியாதவர்களையும் குறை கூறுபவர்களையும் அப்படியே ஒதுக்கிவிட்டு உங்கள் முயற்சியை தொடருங்கள் ரமணி சார் ..//

வணக்கம் சார்,
இப் பதிவில் நான் எங்கே குறை கூறியிருக்கேன்?
நேரடியாகவே நிரூபன் சார் குறை கூறிட்டார் அப்படீன்னு சொல்லாம் அல்லவா?

ஏன் சுத்தி வளைச்சு இப்படி பேசுறீங்க?
உங்க நோக்கம் என்ன?
என்னையும் ரமணி அண்ணாவையும் கோர்த்து விட்டு கூத்து பார்ப்பதா?

நிரூபன் said...

குழப்பமாக இருப்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை முயற்சி செய்ய வேண்டும் ஒரு செய்தி நமக்கு புரியவில்லை என்றால் அந்த செய்தி தவறு என்று எடுத்து கொள்ள கூடாது. "நமக்கு புரியவில்லை" என்பதுதான் தவறு. அதனால் புரியாதவர்களையும் குறை கூறுபவர்களையும் அப்படியே ஒதுக்கிவிட்டு உங்கள் முயற்சியை தொடருங்கள் ரமணி சார் //


ஒரு படைப்பாளியின் படைப்பினை பாராட்டுவதற்கு வாசகர்களாகிய எமக்கு எம்புட்டு உரிமை இருக்கோ, அதோ போல அவரின் படைப்பு பற்றிய என் கருத்தையும் சொல்ல உரிமை இருக்கு.

ரமணி அண்ணா "என் படைப்புக்களைப் பாராட்ட மாத்திரம் பதிவர்களுக்கு உரிமை இருக்கு!
விமர்சிக்க உரிமை இல்லை!”
அப்படீன்னு ஒரு வார்த்தை இந்த ப்ளாக்கில எழுதி வைச்சிருந்தா நான் ஏன் சார் இப்படி ஓர் கருத்தை சொல்லப் போறேன்?
பொத்திட்டு போயிருப்பேன் இல்லே!

நிரூபன் said...

குழப்பமாக இருப்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை முயற்சி செய்ய வேண்டும் ஒரு செய்தி நமக்கு புரியவில்லை என்றால் அந்த செய்தி தவறு என்று எடுத்து கொள்ள கூடாது. "நமக்கு புரியவில்லை" என்பதுதான் தவறு. அதனால் புரியாதவர்களையும் குறை கூறுபவர்களையும் அப்படியே ஒதுக்கிவிட்டு உங்கள் முயற்சியை தொடருங்கள் ரமணி சார் //

இங்கே ரமணி அண்ணாவின் கவிதை நடையினைப் பற்றிய என் கருத்தினைச் சொல்லியிருக்கிறேன்.

பதிவினைக் குறை சொல்வது அப்படீன்னா உங்களுக்கு என்னவென்று தெரியுமா சார்?

ஒருத்தரோட பதிவிற்கு போய் நின்று,
உங்க பதிவு ரொம்ப கேவலமா இருக்கு! நீங்க எல்லாம் எதுக்கு பதிவெழுதுறீங்க அப்படிச் சொல்வது தான் குறை சொல்வது.

இன்று நேற்றல்ல, கடந்த பல மாதங்களாக என் படைப்புக்களைப் பற்றிய குறை நிறைகளை விமர்சனங்களாக ரமணி அண்ணாவும் சொல்லிட்டு வர்றாரு!

நானும் சொல்லிட்டு வர்றேன்.

ஸோ...இந்து ரமனி அண்ணா பதிவு பத்தி நான் எழுதிய கருத்துரை. நீங்க எதுக்கு சார் இடையில வந்து தீயை பத்த வைக்க நினைக்கிறீங்க?

நிரூபன் said...

Avargal Unmaigal said...
ஒவ்வொரு பதிவாளனும் என்ன,எதை எப்படி எழுத வேண்டும் என்பதை அவந்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதற்கு பெயர்தான் எழுத்து சுதந்திரம். சில பத்திரிக்கைகளுக்கு நாம் எழுதினால் அவர்கள் போடும் சட்டதிட்டங்களுக்கு உடபட்டு நாம் எழுத வேண்டும் ஆனால் இந்த வலையுலகத்தில் அந்த சட்ட திட்டம் கிடையாது.//

சார்..வலையுகலகத்தில யாருமே சட்ட திட்டங்கள் போடுவதில்லைங்க.
அப்புறமா வலையுலகம் என்பது ஓர் சுதந்திர ஊடகம்!

ஒரு படைப்பாளியின் வெற்றி எதில் தங்கியிருக்கிறது அப்படீன்னு சுஜாதா, வைரமுத்து, கவியரசர், இவே.ரா. மற்றும் பல படைப்பாளிகளின் பேட்டியில் கேட்டிருப்பாங்க.

அவங்க சொன்ன பதில். வாசகனின் நாடி பிடித்து எழுதுவதில் தான் படைப்பாளியின் வெற்றி தங்கியிருக்கிறது.

தம்மை நாடி வருவோர் தான் எழுதும் படைப்புக்களில் எவற்றை அதிகம் விரும்புகிறார் என்பதனை அறிந்து எழுதுவது தான் படைப்பாளியின் வெற்றி அப்படீன்னு பல பெரிய பெரிய தமிழ் எழுத்தாளர்கள் சொல்லியிருக்காங்க.

வாசகர்களுக்கு இதைத் தான் நீ படிக்கனும் என்று கொடுத்தால் அது திணிப்பு சார்.!
வாசகர் விருப்பத்தை அறிந்து நமது படைப்புக்களை திருத்தினால் அது தான் ஓர் எழுத்தாளனின் வெற்றி சார்!

Seeni said...

ரமணி அய்யா!
நான்கூட மாறிவரும் தப்புகளை-
எழுத நினைத்து இருந்தேன்!

நீங்கள் விளக்கமாக -
எழுதிவிட்டீர்கள்!

உங்களின் ஆதங்கமும்-
வெளிப்பட்டு இருக்கிறது!

சொன்ன விதம்-
எனக்கு பிடித்தமாக -
இருந்தது!
வாழ்த்துக்கள்!

Anonymous said...

''...சிறு வீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே
இப்போது பேராண்மை தீர்மானிக்கப் படுகிறது...''

இதெல்லாம் பொய். நல்லவன் எப்போதும் நல்லவன் தான்.
நல்லதோடு ஒட்டி வாழலே நமது கலாச்சாரம்.உங்கள் சிறு உரைநடையில் எனக்கு உடன்பாடில்லை. விடப்பரீட்சைகளையும் செய்து பாருங்கள். வாழ்த்துகள்.
Vetha. Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

கணேஷ் said...

உண்மைதான். வானில் பறந்த கந்தவர்வனை நீரில் பார்த்து அழகாய் இருக்கிறான் என்று மனைவி எண்ணியதற்காக அவள் கற்பிழந்து விட்டாள் என்று மகன் பரசுராமனிடம் அவள் தலையை வெட்டச் சொன்னார் ஜமதக்னி. அந்தக் கற்பின் அளவுகோலை இன்று வைக்க முடியாதுதான். ஆனால் சில விஷயங்கள் இன்றும் மாறுதல் என்று ஜீரணித்துக் கொள்ள முடியாதவையாகவே உள்ளன. இந்த நெருடலை அழகாக விளக்கியிருந்தீர்கள். அதிலும் குடிப்பதையும், பிறன்மனை நோக்குவதையும் எக்காலத்திலும் அளவுகோலை மாற்றி ஜீரணித்துக் கொண்டுவிட இயலாது. உங்களின் கோபம் எனக்குள்ளும் உண்டு ஸார்!

Ramani said...

.ரெவெரி //

புலவர் அய்யா ..மற்றும் உங்களைப்போல் நிறைய பேர் இல்லை மரபுக்கவிதை எழுத...அது அழியாமல் காக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது...இது என் ஆதங்கம் + கோரிக்கை + செல்ல கட்டளை ..உங்களுக்கு... //

தங்கள் கருத்தை மனதில் ஏற்றுக் கொண்டேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Ramani said...

பி.அமல்ராஜ் //

ரமணி அண்ணா, வாழ்வியலின் பல விடயங்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் நோக்கப்படும் உங்கள் கவிதை என்னை கவர்ந்துவிட்டது. வாழ்த்துக்கள்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Ramani said...

Avargal Unmaigal //

உங்கள் முயற்சியை தொடருங்கள் ரமணி சார் //

நிச்சயமாக
தங்கள் கருத்தை மனதில் ஏற்றுக் கொண்டேன்
தொடர்ந்த வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //

நீங்கள் கவிதைக்காக எடுத்துக்கொள்ளும் கரு ஒவ்வொருமுறையும் என்னை அதிசயிக்க வைக்கிறது.மூத்தோர் சொல் வாக்காகிறது உங்கள் கவிதைகள் எல்லாமே !

தங்கள் தொடர்ந்த வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

நிரூபன் //

இன்று நேற்றல்ல, கடந்த பல மாதங்களாக என் படைப்புக்களைப் பற்றிய குறை நிறைகளை விமர்சனங்களாக ரமணி அண்ணாவும் சொல்லிட்டு வர்றாரு!

நல்ல கருத்து கருத்துக்கு நன்றி
தொடர்ந்து அப்படித்தானே இருக்கப் போகிறோம்

Ramani said...

நிரூபன் //

வாசகர் விருப்பத்தை அறிந்து நமது படைப்புக்களை திருத்தினால் அது தான் ஓர் எழுத்தாளனின் வெற்றி சார்!

நல்ல கருத்து
நானும் அப்படித்தான் இருக்க முயற்சிக்கிறேன்
அது நல்ல வழியாக மட்டும் இல்லை
நாம் வளர்வதற்கான சரியான வழியும் கூட அதுதான்

Ramani said...

Seeni //

உங்களின் ஆதங்கமும்-
வெளிப்பட்டு இருக்கிறது!

சொன்ன விதம்-
எனக்கு பிடித்தமாக -
இருந்தது!


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி . .

Ramani said...

kovaikkavi //

இதெல்லாம் பொய். நல்லவன் எப்போதும் நல்லவன்தான்.
நல்லதோடு ஒட்டி வாழலே நமது கலாச்சாரம்.உங்கள் சிறு உரைநடையில் எனக்கு உடன்பாடில்லை. விடப்பரீட்சைகளையும் செய்து பாருங்கள். வாழ்த்துகள்.


நானும் அந்தக் கருத்து உள்ளன்வந்தான்
சொல்வதை வேறு ஒரு பாணியில் சொல்ல முயன்றிருக்கிறேன்
தனிப்பட்ட முறையில் இப்படிக் கருத்துடைய எல்லோரும்
பொதுவாழ்வில் தலவரைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும்
ஒழுக்கத்திற்கு முக்கியம் தராமல் வேறு பல
திறமைகளைக் கண்டு மயங்குவது ஏன்
என்கிற ஆதங்கம் எனக்கு அதிகம்
அந்த ஆதங்கமே இந்தப் பதிவு
வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

.கணேஷ் //

அதிலும் குடிப்பதையும், பிறன்மனை நோக்குவதையும் எக்காலத்திலும் அளவுகோலை மாற்றி ஜீரணித்துக் கொண்டுவிட இயலாது. உங்களின் கோபம் எனக்குள்ளும் உண்டு

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கோவிந்தராஜ்,மதுரை. said...

//பிறன்மனை நோக்காமையே முன்பு
பேராண்மையாய் பேசப்பட்டது
நம்முடைய நல்ல காலம் இப்போது அப்படியில்லை
சிறு வீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே
இப்போது பேராண்மை தீர்மானிக்கப் படுகிறது
இது கூட ஆண்களுக்கு ஒரு நல்ல
வாய்ப்பாகத்தானே படுகிறது ?//

நல்ல சவுக்கடி

அகிலா said...

மாற்றம் நம் சமுதாயத்திற்கு தேவைதான், அப்போதுதான் பத்தாம்பசலித்தனம் ஒழியும்....நல்ல கருத்து...

Ramani said...

கோவிந்தராஜ்,மதுரை. //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

அகிலா //

மாற்றம் நம் சமுதாயத்திற்கு தேவைதான், அப்போதுதான் பத்தாம்பசலித்தனம் ஒழியும்....நல்ல கருத்து...

மிகச் சரியாக பதிவின் அடி நாதம் புரிந்து
பின்னூட்டம் இடப்படும்போதுதான
எழுதிய பொழுதினும் பெரிதுவக்க முடிகிறது
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

ALAVUKOLKAL MAARIKKONDU POVATHAI KALAACHAARAK KAARANAM ENRU KUURI NIYAAYAP PATUTHTHA VILLAIYAE. AANAAL EZUTHI IRUPPATHU NITHARSANA UNMAI.

Ramani said...

G.M Balasubramaniam //

AANAAL EZUTHI IRUPPATHU NITHARSANA UNMAI.

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

jayaram thinagarapandian said...

இந்த உலகில் மாறாதது
எதுவும் இல்லை
நம் செயல்கள் இந்த சமூகத்தில் எடுத்துகொள்ளும் விதம் மட்டும் விதிவிலக்கா
இன்று நாம் நல்லது என்று செய்யும் செயல்கள் கூட
வரும் காலத்தில் தவறு என சொல்லலாம் ...
அருமை யான கருத்து சார்

Ramani said...

jayaram thinagarapandian //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

அப்பாதுரை said...

படித்து விடாமல் சிரித்தேன் ரமணி.. உங்கள் நோக்கம் நகைச்சுவையாக இல்லாதிருக்கலாம்.. ஆனால் என்னால் சிரிக்காமல் ரசிக்க முடியவில்லை.

VENKAT said...

நானும் படித்தேன் கவிதையையும் பின்னூட்டங்களையும்.
என்னுடைய பின்னூட்டம்
???????!!!!!!!
இன்னும் பத்து வருடம் கழித்து யாராவது சில பகுதிகளை சாடுவதற்கு இருப்பார்களா?
அப்படி இருந்தால் ஆச்சரியமே!!
"அளவுகோல்களை மாற்றிக் கொண்டே போவோம்

அப்படியே நாசமாகவும் போவோம்"

என்றே கவிதயை முடித்துக் கொள்கிறேன்.

Ramani said...

VENKAT //

இன்னும் பத்து வருடம் கழித்து யாராவது சில பகுதிகளை சாடுவதற்கு இருப்பார்களா?
அப்படி இருந்தால் ஆச்சரியமே!!
"அளவுகோல்களை மாற்றிக் கொண்டே போவோம்

அப்படியே நாசமாகவும் போவோம்"

மிகச் சரியான கருத்து
மனம் கவர்ந்த உற்சாகமூட்டும் பின்னூட்டம்
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Ramani said...

அப்பாதுரை //

படித்து விடாமல் சிரித்தேன் ரமணி.. உங்கள் நோக்கம் நகைச்சுவையாக இல்லாதிருக்கலாம்.. ஆனால் என்னால் சிரிக்காமல் ரசிக்க முடியவில்லை.


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Anonymous said...

sir, I very much impressed. r.chockalingam

Post a Comment