Friday, July 20, 2012

நட்சத்திரப் பதிவு-துணைப்பதிவு (4) (1)

உறவுகள் 

எண்பதின் துவக்கம் அப்போது நான்
உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கும் அனறைக்கும் காலக்கணக்கில்
முப்பது ஆண்டுகள்தான் இடைவெளி என்றாலும் கூட
உண்மையில் இன்றைய உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்தி
இருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கி
வேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.வீடுகள் வாடகைக்கு இருக்காது
இருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காது
நல்ல ஹோட்டலகள் இருக்காது.உயர் அதிகாரிகள்
யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோ அல்லது தேனிக்கோ சாப்பாட்டுக்கு
சென்று விடுவார்கள்,மொத்தத்தில் அரசு பணியாளகளைப்
பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதை
ஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்
எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும்
பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காது
என்பதாலும் மாறுதல் என்பது முயன்று
பெற்றால்தானே ஒழிய அவர்களாக மாற்றமாட்டார்கள்
என்பதாலும் கொஞ்சம் தெனாவெட்டாகத்தான்
வேலை பார்ப்பார்கள்அலுவகப் பணி நேரம்
குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாக
மதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்கு
ஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.
அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காக
அவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்
அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு செல்பவர்களுக்கு
கொஞ்சம் தாமதமாகத்தான் போகும்
ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம் வயல்வெளியில்
நடந்துபோய்ச் சேர எப்படியும் தினமும் ஒருமணி நேரம்
தாமதமாகத்தான் ஆகும் என்றாலும் அந்த ஊர் மக்களும்
அதிகாரிகளும் அதற்கு அனுசரித்து இருக்க
பழகிக் கொண்டார்கள்.அதைப் போல மாலையிலும்
ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும் என்பதாலும்
எல்லோரும் மூன்று நாற்பதிற்கே  அலுவலக்ம் விட்டு
புறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்
தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரி
 அலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்
ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்
கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்
தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்
செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்
உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படி ஒரு நாள் புகைவண்டி கிளம்பிக்
கொண்டிருக்கையில்எதிர்பாராதவிதமாக
 எங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம் வரும் வரையில் நாங்களும்
கண்டு கொள்ளவில்லைபல்கலைக் கழகத்தில்
கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்
கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்
பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்
அப்படி என்னதான் இருக்கிறது என நான
முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்ட பெண்தான
எனத் தெரிந்த போதும் வயதும் முக  லட்சணமும்
எதோ ஒரு தவிர்க்க முடியாத சூழலில்
அப்படி ஆகி இருக்கக் கூடும் என்கிற எண்ணத்தை
பார்ப்பவர்களுக்குதோன்றும்படியாகத்தான்
அவள்  இருந்தாள்
எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்தது
ஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடி
அந்தப் பார்வை பார்த்தார் என்பதும் எனக்கு
 இப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்து
ஆடத்துவங்க எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்
அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாக
அமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிசம்
செய்யத் துவங்கிவிட்டார்.
எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோக
அனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றி
காரசாரமாக விவாதித்து வருவோம்
சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்
அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம
மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்
இவையெல்லாம் குறித்து அந்த எதிர் சீட் நண்பர்
எல்லோரையும் விட மிக தெளிவாகவும்
ஆணித்தரமாகவும்உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்க்கள் எல்லாம் அவர்பேச்சில் உள்ள
தார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது
பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கை
என்னுள் என்னவோ செய்தது. சந்தர்ப்பம்
கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

நான்சடாரென எழுந்து அந்தப் பெண் அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்ச்யம் சாப்பிட்டு இருக்கமாட்டாள்
எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா " என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது " என்றாள்
"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து என் பையில் இருந்த
மூன்று அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலை
அவளிடம் கொடுத்து இன்னும்  "இன்னும் இருபது நிமிடத்தில்
உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள் இறங்கிவிடுவோம்
அதற்குள் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை
கழுவிக் கொடுத்துவிடு"எனச் சொல்லிக் கொடுத்தேன்.
அவள் பசியின் காரணமோ என்னவோ
சம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.எனக்கும்  சாப்பிடக்
கொடுத்ததின் மூலம் நண்பனின் சில்மிஷ சேஷ்டைகளை
செயய முடியாமல் போகச் செய்யவும் பசியில் இருந்த ஒரு
பெண்ணுக்கு உதவிய திருப்தியும் கிடைக்க இருக்கையில்
வந்து அமர்ந்து விட்டேன்.நண்பனும் எரிச்சலுடன் என்
எதிரிலேயே வந்து விட்டான் .அந்தப் பெண்ணும்
அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு  நாங்கள்
இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸை
மிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டு
எங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்
நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
 செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.
நாங்கள் இறங்கி நடக்கத் துவஙக
எல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்
மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும் நினைத்ததும் இல்லை
எங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்
அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்
உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காக
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்
ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை
சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து
 "என்னைத் தெரிகிறதா " என்றாள்
உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா அண்ணே " என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  ந்டுத்தரகுடும்பத்தைச் சேர்ந்த பெண் போலவே
 முற்றாக  மாறி இருந்தாள் .குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலே
கேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்
அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலே
பிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டு
பேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து இருப்போமான்னு கேட்டாங்க
எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்தது
நானு சரின்னு சொன்னேன்.வீரபாண்டி கோவிலிலே
இந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள் சொல்வதைகேட்கக் கேட்க எனக்கு மிகுந்த
சந்தோஷமாக இருந்தது.ஆனாலும் நம்மிடம் ஏன்
இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாகக் கசிய்த் துவங்கிய
நீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவது
உங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு
தோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது
ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிர
நானேதும் அவளுக்கு செய்தததில்லை.அது அவளுள்
இத்தனை பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறதென்றால்
அவள் அரவனைப்பு இன்றி  அது நாள்வரை
எப்படி அவதிப்படிருப்பாள்என  எண்ண எண்ண
என் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில் "பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும் வாங்கிக் கொடு "என
கையில் கிடைத்த ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்து
"சாருக்கு வணக்கம் சொல்லு " என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை என் காலடியில் போட்டு
அவளும் தரையில் வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது
அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது

26 comments:

குறையொன்றுமில்லை. said...

மனிதாபமான செயல். அதை சொல்லிச்சென்றவிதம் நல்லா இருக்கு.

suvanappiriyan said...

நெகிழ வைத்த பதிவு.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

தி.தமிழ் இளங்கோ said...

மீள் பதிவு என்று நினைக்கிறேன். மறுபடியும் படித்தாலும் புதிதாகவே இருக்கிறது.

கோவி said...

//சுவனப் பிரியன் said...
நெகிழ வைத்த பதிவு.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது//.

சரியாக சொன்னீர்..

அருணா செல்வம் said...

நினைவு நட்சத்திரங்கள்
உங்கள் பதிவுகளில் மின்னுகின்றன ரமணி ஐயா.

கோவி said...

tha ma 3

”தளிர் சுரேஷ்” said...

கண்கலங்க வைத்தபதிவு! அருமை! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! இந்த கருவை நான் ஒரு கதையாக எழுத சம்மதம் கிடைக்குமா? நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்தப்பதிவு மீள் பதிவாயினும் எவ்வளவு முறை படித்தாலும், மனதை மிகவும் நெகிழ வைக்கும் பதிவாகும். தங்களின் நல்ல குணங்களைப்பற்றி நான் அறிந்து கொள்ள மிகவும் உதவிய பதிவாகும்.

//"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை என் காலடியில் போட்டு
அவளும் தரையில் வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்//

மிகவும் உருக்கமான கட்டம் இது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு மீண்டும் என் நன்றிகள்.

கோமதி அரசு said...

உதவிய நெஞ்சம் மறந்தாலும், உதவி பெற்ற உள்ளம் அதை மறக்காமல் நினைவு வைத்து ,தன் நல்வாழ்வுக்கு ஆசீர்வாதம் வாங்கியது நெஞ்சை நெகிழவைத்துவிட்டது.

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ வைத்த பதிவு சார் !
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...(த.ம. 4)

senthil said...

மிக அருமையான பதிவு.

படித்தவுடன் கண் கலங்கிவிட்டேன். ஏழ்மையான பெண் என்றால் ஒரு வித இளக்காரமான பார்வையுடன் பார்க்கும் மைனர்களுக்கான இது ஓர் சாட்டையடிப் பதிவு.

பாராட்டுக்கள்!

Murugeswari Rajavel said...

இந்த சம்பவம் மட்டுமில்லை,உங்களின் எழுத்துக்கள் யாவுமே உங்கள் உயரிய குணத்தைச் சொல்லுமே!

வலிப்போக்கன் said...

இப்படி.ஒவ்வொருத்தரும் மாறிட்டா? எந்தவித துன்பமும் அராஜகமும் இல்லாமல் போகும்மே?

மனோ சாமிநாதன் said...

முற்றிலும் சிறந்த மீள்பதிவுகள்!

ந‌ட்ச‌த்திர‌ப்ப‌திவ‌ரான‌த‌ற்கு இனிய‌ வாழ்த்துக்க‌ள்!!

கே. பி. ஜனா... said...

(மனத் தாக்கத்திலிருந்து) மீள முடியாத மீள் பதிவு!

Admin said...

நெகிழ வைத்த பதிவு..வேறொன்றும் சொல்லத் தோணவில்லை..மறவாமல் வாக்கிட்டேன்..நன்றி.

MARI The Great said...

மனதை தொட்ட பதிவு (TM 6)

ப.கந்தசாமி said...

மனதை வருடுகின்றது.

நிலாமகள் said...

சந்தர்ப்பம்
கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?//

அதானே...

உங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு
தோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு//

ப‌திவின் வேர் மிக‌ ஆழ‌மாய்...!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மையாகவே கண் கலங்கி விட்டேன் சார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.8

ஸ்ரீராம். said...

வயிற்றுப்பசியைப் பார்க்க மறந்த உடல்பசி. அந்தச் சூழ்நிலையிலும் மனிதம் மாறாத அந்தச் செயல் அந்தப் பெண்ணின் மனதில் நின்றதில் வியப்பில்லை. மனம் தொட்ட பதிவு.

G.M Balasubramaniam said...

சில பதிவுகள் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதியதாகத் தோன்றும். அதில் இதுவும் ஒன்று.

Ganpat said...

ரமணி ஸார்,

நம் புராணங்களில் கடவுள் விஸ்வரூபம் எடுப்பது பற்றிய விவரிப்பு இருக்கும்.
(இதை கர்ணன் படத்திலும் அருமையாக
காண்பித்திருப்பார்கள்.)

நம்மிடையே மனித உருவில் வாழும் தெய்வ சக்தியானது, தன்னை, தேவைப்படும் நேரத்தில் அடையாளம் காண்பிக்கும்,ஒரு அற்புத நிகழ்வாகும் அது.

ரமணி என்ற பெயரில் மனித உருவில் வாழும் ஒரு தெய்வ சக்தி,அப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்த அற்புத காட்சியை இந்த பதிவின் வாயிலாக கண்டேன்.கைகூப்பி தலை வணங்குகிறேன்.

"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருட்வைப்புழி"
என்ற திருக்குறளின் முழு அர்த்தத்தையும்

"எந்தரோ மஹாநுபாவுலு
அந்தரீக்கி வந்தனமு"
என்ற தியாகராஜரின் அமர பாடலின்
முழு அர்த்தத்தையும்

எனக்கு,உங்கள் இந்த பதிவு,கற்பித்தது

நன்றி;வணக்கம்.

பி.கு: என்ன ஒரு அதிசயம் பாருங்கள்..
நேற்று மாலைதான் என்னுடைய இன்னொரு நண்பர் காவிரிமைந்தன் வலைதளத்தில்
"நம் நாட்டில் சிறிய அளவேனும் ஏதாவது நல்லவை நிகழ்கிறதா?"
என ஒரு பின்னூட்டம் வாயிலாக அங்கலாயித்து விட்டு,
இன்று காலை உங்கள் தளத்திற்கு வந்தால் இந்தபதிவு!
கடவுள் என் உச்சந்தலையில் ஓங்கி குட்டி
"கற்றது கைமண் அளவு;கல்லாதது உலகளவு"
என்பதை புரிய வைத்திருக்கிறார் போலும்.

mohan baroda said...

When everyone in the compartment looks at her physque, you were the one who took care of her stomach. Very nicely described. May be it is repeated but I am reading for the first time. Some articles activates the brain to think; some articles gets registered in the brain - yours is the second category. May be she is poor but in humanity, she is really very rich.

வெங்கட் நாகராஜ் said...

மீள் பதிவு என்றாலும் மீண்டும் நெகிழ வைத்த பதிவு....

Post a Comment