Sunday, September 15, 2013

ஊருக் குள்ளே நல்ல "பாரு"

பாருக் குள்ளே நல்ல நாடு
நம்ம நாடு என்று
வீறு கொண்டு இருந்தோம் அன்று-பகை
வென்று மகிழ்ந்தோம் அன்று

ஊருக் குள்ளே நல்ல "பாரு"
எந்த "பாரு " என்று
தேடி யலைந்துத் திரிகிறோம் இன்று-மதியைக்
தோண்டிப் புதைக்கிறோம் இன்று

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலென
பெருமிதம் கொண்டோம் அன்று
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடென-நெஞ்சம்
பூரித்து நின்றோம் அன்று

விண்ணகம் முட்டும் விலையில் கல்வியை
உயரே கொண்டு வைத்து
வன்முறை வளர்ந்திட நாடது கேடுற-நாமே
வழிகள் வகுக்கிறோம் இன்று

இன்னறு கங்கை எங்கள் ஆறென
உரிமை கொண்டோம் அன்று
மன்னும் இமயம் எல்லைக் கோடென-உள்ளம்
மகிழ்ந்து திரிந்தோம் அன்று

அண்டை மாநில உறவு கூட
ஜென்மப் பகைபோல் மாற
வன்மம் வளர்த்து வன்முறை வளர்த்து-கூண்டில்
ஒடுங்கித் தவிக்கிறோம் இன்று

உலகை மாற்றி ஊரை மாற்றி
நம்மை மாற்ற எண்ணும்
தலையச் சுற்றி மூக்கைத் தொடுகிற-வீண்
வேலை இனியும் வேண்டாம்

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்

28 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்று சொன்னீர் ஐயா,
சிறு நெருப்பு
பெருந்தீயாகும்
மாற்றம்
வீட்டில் இருந்து தொடங்கினால்
நாடு தானே மாறும்.
நன்றி ஐயா

vimalanperali said...

வீட்டிலிருந்து தொடங்குகிற மாற்றம்,,,,,,,,சமூகத்தின் பிரதிபலிப்பா,,,,?

திண்டுக்கல் தனபாலன் said...

மாற்றம் முதலில் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும்... அருமை ஐயா...

Unknown said...

திருடனாப் பார்த்து திருந்தட்டும் ,திருந்தாமல் போகட்டும் ..நாம திருடனா ஆகாமே இருந்தா சரி ..அப்படித்தானே ரமணி ஜி ?

வெங்கட் நாகராஜ் said...

மாற்றம் ஒவ்வொருவரிடமும் துவங்க வேண்டும்.... நன்றாகச் சொன்னீர்கள்.....

மாற வேண்டும் அனைத்தும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்//

அருமையான படைப்பு.

பாருக் குள்ளே நல்ல நாடு நம்ம நாடு
ஊருக் குள்ளே நல்ல "பாரு"எந்த "பாரு"

;( வேதனை தான்.


ஸாதிகா said...

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்//அருமையாக கவிமழை பொழிந்துள்ளீர்கள்.

Anonymous said...

கவிதை ....' டிங்குடாங்கு குத்து சாங்கு ' என்ற
பாடல் வரிகளை நினைவூட்டிச் சென்றது.
மாற்றம் தேவை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்கள் கவிதை மிகவும் அருமை..ஒவ்வொருவரும் மாற வேண்டும்..ஆனால் நம்பிக்கை அற்றுப்போகிறது ஐயா :(

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

த.ம.5

Anonymous said...

''..அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்..''
இதுவே சரியானபாதை. இதைச் நெய்வோம்....செய்வோம்.
நல:ல சிந:தனை -
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

G.M Balasubramaniam said...


முதலில்/அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்/ வாழ்த்துக்கள்.

இளமதி said...

அவலங்களும் அகிலமும் மாறவேண்டும்!

நினைவில் நிறுத்திட வேண்டிய நல்ல கருத்துக் கவிதை!...
வாழ்த்துக்கள் ஐயா!

த ம.6

Unknown said...

எரியும் நெருப்பை அணைத்து விடு
எங்கும் நீதியை நிலைக்க விடு
அதர்மம் அழியச் சாபமிடு
அன்பை மட்டும் வாழ்த்திவிடு ..

கவிஞரே! உங்கள் வாக்கு பலிக்கட்டும்!

சக்தி கல்வி மையம் said...

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்// முயற்சி செய்வோம்..

”தளிர் சுரேஷ்” said...

நம்மை நாமே மாற்றி கொண்டால் நிச்சயம் நாடும் மாறும்! முன்னேறும்! நல்ல கருத்துள்ள கவிதை ஐயா! நன்றி!

ராமலக்ஷ்மி said...

மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். நல்ல கவிதை.

மாதேவி said...

"அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்" கருத்துள்ள கவிதை வாழ்த்துகள்.

சாய்ரோஸ் said...

சுயவொழுக்கம்தான் எல்லா மாற்றத்திற்கும் ஆரம்பமாகும் என்பதை அருமையாய் கூறிய கவிதை இது...
மிகவும் ரசித்தேன் சார்...

கே. பி. ஜனா... said...

//அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்//

வைர வரிகள்!

Avargal Unmaigal said...

///ஊருக் குள்ளே நல்ல "பாரு"
எந்த "பாரு " என்று
தேடி யலைந்துத் திரிகிறோம்///

அப்ப அம்மையார் கடை திறந்தா போதாது நல்ல பார்-உம் திறக்க வேண்டுமா என்ன? பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு இரவுல் அதுவும் பேசாதே என்பார்கள் அது போலததான் வலைதளத்தில் பேசுவதும். நீங்க நல்ல பாரு இல்லையென்று சொல்லிவிட்டீர்கள். வலைத்தள தலைவராகிய நீங்கள் சொன்னது அம்மையார் காதில் விழுந்துவிடப் போகிறது சார்...

உங்களது கடைசி வரி எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் எல்லோரும் அதையே பாராட்டிவிட்டதால்தான் மேலே சொன்ன கருத்து

Anonymous said...

வணக்கம்
ஐயா

கவிதையின் பாவலனே
உன் கவிவரிக்கு நான்
மட்டும்மல்ல யாவருமே-அடிமை
நேர்தியான கருத்துக்கள்
வாசகனின் நெஞ்சங்களை
அள்ளிச் செல்லுதையா
இன்னும் கவிதைகள் பூக்க
எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கீதமஞ்சரி said...

சத்தியமான வரிகள். மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்தே தொடங்குவோம். தானாய் எல்லாம் மாறும். சிறப்பான மற்றும் சிந்திக்கவைக்கும் கருத்தானப் பதிவுக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

தி.தமிழ் இளங்கோ said...

// அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம் //

இந்த வரிகள் எனக்குப் பொருந்தாது. எனவே நான்தான் மற்றவர்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். தூண்டுகோலான வரிகள்!

சீராளன்.வீ said...

அன்றுபோல் இன்றில்லை
ஆதங்கம் கொண்டீர்
நன்றுணரும் நன்மக்கள்
நாட்டில் குறைந்ததனால்
வென்றுவிடும் நீதியெல்லாம்
விலையாகிப் போனதிங்கே..!

அருமை வாழ்த்துக்கள்

Muruganandan M.K. said...

கவிதை அருமை
இந்த வரிகள் உச்சம் என்பேன்.
"...அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்.."

Ranjani Narayanan said...

நாம் மாற வேண்டும் முதலில். பிறகுதான் மற்றவர்களை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நல்ல கருத்து.

Iniya said...

மழை நீர் போல் கல்வி கிட்டட்டும் யாவர்க்கும். வஞ்சம் அற்ற நெஞ்சங்கள் வளரட்டும் உலகெங்கும்.

பாரதம் பாரினில் பேர் சொல்ல வாழ, நல்லதோர் உலகம் செய்ய நாமே முன் கால் பதிப்போம், ரமணி சார் விருப்பம் போல. வாழ்த்துக்கள்!

Post a Comment